×

ஆன்லைனில் ஆர்டர் செய்யும் உணவின் தரம் பற்றிய புகார்கள் அதிகரிப்பு

புதுடெல்லி: ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படும் உணவுகளின் தரம் பற்றிய புகார்கள் 2 மடங்காக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.  ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்வது சகஜமாகி விட்டது. ஓட்டல்களுடன் இணைந்து, இந்த சேவையை சில நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இவ்வாறு ஆன்லைனில் ஆர்டர் செய்து டெலிவரி செய்யப்படும் உணவுகளின் தரம் தொடர்பாக புகார்கள் குவிந்து வருகின்றன. நடப்பு நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 2 மடங்காக  அதிகரித்துள்ளது.  நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் முதல் ஜனவரி வரை 1,995 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த நிதியாண்டில் இதே காலக்கட்டத்தில் இந்த புகார்களின் எண்ணிக்கை 1,053 ஆக இருந்தது.
இதுகுறித்து நுகர்வோர் விவகார அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ஆன்லைனில் ஆர்டர் செய்து உணவு டெலிவரி சேவை கடந்த 3 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. இதில் சில உணவுகள் தரம் குறைந்தவையாக இருப்பதாக புகார்கள் வந்துள்ளன.

இது தொடர்பாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய  ஆணையத்துக்கு புகார்கள் வந்துள்ளன.  இவ்வாறு பெறப்பட்ட புகார்கள் உடனடியாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஆணையர்களுக்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்து அனுப்பப்பட்டுள்ளன. உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் மற்றும் விதிகளின்படி இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என தெரிவித்துள்ளது. ஆன்லைன் சேவைகள் பற்றி புகார்கள்செய்ய உதவி எண்கள் பிரத்யேகமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் நடப்பு நிதியாண்டில் கடந்த ஜனவரி வரை 5.65 லட்சம் புகார்கள் வந்துள்ளன. இவற்றில் நான்கில் ஒன்று ஆன்லைன் வர்த்தகம் மற்றும் சேவைகள் தொடர்பானவை என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : increase in, complaints about,quality ,food ordered online
× RELATED ஏப்ரல்-20: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34 – க்கு விற்பனை