×

நாகர்கோவில் அசம்பு ரோட்டில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி தொடக்கம்: மாநகராட்சி நடவடிக்கை

நாகர்கோவில்: நாகர்கோவில் அசம்பு ரோட்டில் கழிவு நீர் கால்வாய் தூர்வாரும் பணி இன்று காலை தொடங்கியது. குமரி மாவட்டத்தில் தற்போது வெயில் வாட்டி வதைக்கிறது. காலை 7 மணிக்கே சுட்டெரிக்க தொடங்கும் சூரியனால் பகல் நேரங்களில் வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு வெப்பத்தின் உக்கிரம் இருக்கிறது. இனி வரும் கோடையில் வெப்ப நிலை அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது. இந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன் திடீரென குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. நாகர்கோவில் மாநகர பகுதியில் சுமார் ஒன்றரை மணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் நாகர்கோவில் அசம்பு ரோட்டில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கிருஷ்ணன்கோவில் உள்ளிட்ட இடங்களில் இருந்து வரும் வெள்ளம் வடிகாலில் பாய்ந்தோடி அசம்பு ரோட்டில் வந்து சேர்ந்ததால் அசம்பு ரோடு முழுவதும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அரசு பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள், கார், பைக்குகள் செல்ல முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.  சிலர் வாகனத்துடன் மழை வெள்ளத்தில் விழுந்து எழ வேண்டிய நிலை ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இரு சக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.

அசம்பு ரோட்டில் மழை காலங்களில் கழிவு நீர் நிரம்பி சாலையில் வெள்ளமாக பாய்ந்தோடுவதும், இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்படுவதும் வாடிக்கையாக உள்ளது. இதனை சீர் செய்ய மாநகராட்சி நிர்வாகமோ, நெடுஞ்சாலைத்துறையோ எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. அசம்பு ரோட்டில் உள்ள கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள், மணல் குவியல்கள் பெருமளவு தேங்கின. அவற்றை மாநகராட்சி ஊழியர்கள் முறையாக அகற்றாமல் இருந்ததே, சுமார் ஒன்றரை மணி நேர மழைக்கே அந்த சாலையை வெள்ள காடாக மாற்றியது. தற்போது கோடையை பயன்படுத்தி கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்தனர். மாநகராட்சி ஆணையர் சரவணக்குமாருக்கும் இது பற்றிய புகார்கள் சென்றன. இதையடுத்து அசம்பு ரோட்டில் உள்ள கால்வாயை தூர்வாரும் பணியில் இன்று காலை மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். ஜே.சி.பி. மூலம் கால்வாயில் உள்ள மணல் குவியல்கள், குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் அள்ளப்பட்டு டெம்போவில் கொண்டு செல்லப்பட்டன. மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்த பொதுமக்கள், கழிவு நீர் கால்வாய் ஆக்கிரமிப்புகளையும் அகற்றி முறையாக தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.



Tags : Sewerage Canal ,Naracoo Road Naracoo Road , In Nagercoil, Sewerage Canal, Corporation
× RELATED வியாசர்பாடி சர்மா நகரில் புதர்மண்டிய கழிவுநீர் கால்வாய்