×

ம.பி. காங்கிரஸ் அமைச்சர்கள் 6 பேரின் ராஜினாமா கடிதம் ஏற்பு; தங்கள் ராஜினாமாவையும் ஏற்க வேண்டும்...16 எம்எல்ஏக்கள் சபாநாயகருக்கு கடிதம்

போபால்: மத்தியப் பிரதேசத்தில் பாஜ.வில் இணைந்த ஜோதிராதித்யா சிந்தியாவின் ஆதரவாளர்களான 6 அமைச்சர்களின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்ட நிலையில் மற்ற எம்எல்ஏக்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை ஏற்க சபாநாயகருக்கு கடிதம்  எழுதியுள்ளனர். மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் திடீர் மாயமாகினர். ஆட்சியை கவிழ்க்க பா.ஜ சதி செய்வதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. இதற்கிடையே, காங்கிரஸ் மூத்த தலைவர்களில்  ஒருவராக விளங்கிய ஜோதிராதித்யா சிந்தியாவின் ஆதரவாளர்களாக இருந்த 6 அமைச்சர்கள் உட்பட 22 எம்.எல்.ஏக்கள் திடீரென தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

ஜோதிராதித்யாவும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சிலநாட்களுக்கு முன் பா.ஜ.வில் இணைந்தார். அதனால், மத்தியப் பிரதேச அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆளும் காங்கிரஸ் பெரும்பான்மை இழந்துள்ளது.இதனை தொடர்ந்து,  மத்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டனை முதல்வர் கமல்நாத் நேற்றுமுன்தினம் சந்தித்து அரசியல் நிலவரம் குறித்து விளக்கினார். முதல்வர் கமல்நாத் செய்த பரிந்துரையின்படி, ஜோதிராதித்யாவின் ஆதரவு அமைச்சர்களான இமாரதி  தேவி, துளசி சிலாவத், கோவிந்த் சிங் ராஜ்புத், மகேந்திர சிங் சிசோடியா, பிரத்யும் சிங் தோமர், பிரதுராம் சவுத்திரி ஆகிய 6 பேரை உடனடியாக பதவியில் இருந்து நீக்கி, ஆளுநர் லால்ஜி டாண்டன் உத்தரவு பிறப்பித்தார்.

தொடர்ந்து, காங்கிரஸ் அமைச்சர்கள் 6 பேரின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் நர்மதா பிரசாத் ஏற்றுக்கொண்டுள்ளார். ராஜினாமா ஏற்கப்பட்ட 6 அமைச்சர்களை தவிர்த்து 16 எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதம் ஏற்கப்படாமல் நிலுவையில்  உள்ளது. இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் ராஜினாமா கடிதம் ஏற்கப்படாத 16 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை ஏற்குமாறு சபாநாயகர் நர்மதா பிரசாத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இதற்கிடையே, நாளை நடைபெறவுள்ள மத்திய பிரதேச பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, முதல்வர் கமல்நாத் தலைமையிலான அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இதற்காக,  வெளிமாநிலங்களில் தங்கியுள்ள காங்கிரஸ் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் மத்திய பிரதேச தலைநகர் போபால் வந்த வண்ணம் உள்ளனர். நாளை நடைபெறவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் வாக்கெடுப்பு மூலம் முதல்வர் கமல்நாத்  தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி தொடருமா? இல்லை ஆட்சியை கவிழ்த்து பாஜக மீண்டும் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்குமா? என்பது தெரியவரும்.


Tags : Ministers ,Speaker ,Congress ,Madhya Pradesh , Madhya Pradesh Letter of resignation of 6 ministers of Congress; Let their resignations be accepted ... 16 MLAs letter to Speaker
× RELATED பட்டா பெறுவதற்கு 5 அமைச்சர்கள் கொண்ட...