×

6 ஆண்டுகளுக்கு பின்னர் முன்கார் சாகுபடிக்கு தயாராகும் மானூர் விவசாயிகள்: குளத்தில் தண்ணீர் இருப்பதால் சாகுபடி மும்முரம்

நெல்லை: நெல்லை மாவட்டத்தின் பெரிய குளமான மானூர் குளம் தண்ணீர் நிரம்பி காட்சியளிப்பதால் அப்பகுதியில் 6 ஆண்டுகளுக்கு பின்னர் முன்கார் சாகுபடி இவ்வாண்டு தொடங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில்  திளைக்கின்றனர்.நெல்லை மாவட்டத்தின் மானாவாரி சாகுபடி நடக்கும் மானூர் வட்டாரம் வறட்சிக்கு பெயர்போனது. நெல்லை மாவட்டத்தின் 2வது பெரிய குளம் என்ற அந்தஸ்தை கொண்ட மானூர் பெரிய குளம் எவ்வளவு மழை பெய்தாலும் நிரம்புவது சிரமம். ஏனெனில் சிற்றாறு தண்ணீர் அக்குளத்திற்கு வருவதில் பல்வேறு சிக்கல்கள் காணப்பட்டன. நெல்லை அண்ணா பல்கலையின் முயற்சியால் மானூர் குளத்திற்கான கால்வாயின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, கடந்த இரு ஆண்டுகளாக குளத்திற்கு ஓரளவு தண்ணீர் வருகிறது.

இந்நிலையில் கடந்தாண்டு அடித்து பெய்த வடகிழக்கு பருவமழையால் ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட மானூர் குளம் பெருகியது. மானூர் கால்வாயில் வந்து சேர்ந்த தண்ணீர் காரணமாக குளம் மறுகால் பாய்ந்தது. இதனால் எவ்வித  பிரச்னையும் இன்றி கடந்த பிசான சாகுபடியை மானூர் வட்டார விவசாயிகள் நிறைவு செய்தனர். மானூர் சுற்றுவட்டார கிராமங்களான எட்டாங்குளம், குத்தாலப்பேரி, கரம்பை, மதவக்குறிச்சி, குப்பனாபுரம், மாவடி, லெட்சுமணபுரம்,  சாலைப்புதூர், ராமசாமியாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் நெல் அறுவடை நடந்து வருகிறது.

சில கிராமங்களில் நெல் அறுவடை முடிந்து விவசாயிகள் அடுத்து வரும் முன்கார் சாகுபடிக்கும் தயாராகிவிட்டனர். மானூர் குளத்தில் முக்கால்வாசி குளம் தற்போதும் நிறைந்து காணப்படுவதால், இச்சாகுபடியையும் எளிதாக நடத்திவிடலாம்  என விவசாயிகள் எண்ணுகின்றனர். குறிப்பாக மானூர், எட்டாங்குளம், கரம்பை, குத்தாலப்பேரி உள்பத்து விவசாயிகள் அடுத்த நடுவைக்கு தயாராகி வருகின்றனர். இதனால் முன்கார் சாகுபடியும் மானூர் வட்டாரத்தில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர்  வரை நடக்கும் என நம்பப்படுகிறது. இதற்காக விவசாயிகள் தொழி அடிக்கும் பணிகளை தொடங்கியுள்ளனர்.இதுகுறித்து மானூர் பெரியகுளம் பாசன விவசாயிகள் சங்க தலைவர் முகம்மது இப்ராகிம் கூறுகையில், ‘‘மானூர் வட்டாரத்தில் கடந்த  பிசான சாகுபடியில் மட்டுமே சுமார் 8 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெல் விளைந்து அறுவடை நடந்து வருகிறது.

அடுத்து வரும் சாகுபடியில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் நெல்லும், மாவடி பகுதியில் பருத்தி சாகுபடியும், சிற்சில பகுதிகளில் சோளம்  பயிரிட வாய்ப்புகள் உள்ளன. கடந்த 2014ம் ஆண்டுக்கு பின்னர் குளம் இவ்வாண்டு ஓரளவுக்கு நிரம்பி காணப்படுவதால், தண்ணீரை கொண்டு அடுத்த சாகுபடியையும் நடத்திட இயலும். மானூர் குளத்தை வருங்காலங்களில் தூர்வாரி தந்தால்  பாசன விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். மானூர் காலம் நிரம்பினால் இரு ஆண்டுகளுக்கு தண்ணீர் பிரச்னையில்லாமல் இருந்த காலங்கள் உண்டு. எனவே குளத்தை முன்புபோல ஆழப்படுத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க  வேண்டும்’’ என்றார்.

கோயில் பத்து விளைந்தது
மானூர் பகுதியில் நெல்லையப்பர் கோயிலுக்கு சொந்தமாக சுமார் 10 ஏக்கர் நிலங்கள் உள்ளன. சமீபகாலமாக இந்நிலத்தில் எவ்வித விளைச்சலும் மேற்கொள்ளப்படுவதில்லை. இவ்வாண்டு மானூர் குளத்தில் கூடுதல் தண்ணீர் காணப்பட்டதால்  கோயில் பத்திலும் நெல் விளைவிக்கப்பட்டது. அங்குள்ள நிலங்களில் நெல் நல்ல மகசூல் கண்டு அறுவடைக்கு தயாராக உள்ளது.

Tags : Manoor ,Munger ,pond ,growers , Manoor growers ready for Munger cultivation after 6 years: water in pond
× RELATED மானூர் அருகே கல்லூரி மாணவி மாயம்