×

புதிதாக கட்டப்பட்ட அங்காளம்மன் கோயில் இடித்து தரைமட்டம்: பவானி அருகே நள்ளிரவில் பரபரப்பு

பவானி: பவானி அருகே காவிரி கரையோரம் புதிதாக கட்டப்பட்டு வரும் 19ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருந்த அங்காளம்மன் கோயில் நள்ளிரவில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பவானி அருகே உள்ள தொட்டிபாளையம் ஊராட்சி, ஜல்லிகல்மேடு கிராமத்தில் காவிரி கரையோரத்தில் கணபதி, அங்காளம்மன், பெரியாண்டிச்சி அம்மன், வீரகாரன், கருப்பண்ணசாமி ஆகிய தெய்வங்களுக்கு புதிதாக கோயில் கட்டப்பட்டது. ஜல்லிக்கல்மேடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நிதி திரட்டி இக்கோயிலை கட்டி முடித்தனர். வரும் 19ம் தேதி (வியாழக்கிழமை) இந்த கோயில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு அழைப்பிதழ்கள் அச்சடித்ததுடன், பல்வேறு பூஜை பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

இக்கோயில் கட்டுவதற்கு இதே பகுதியைச் சேர்ந்த சிலர் காவிரி கரையோரத்தில் ஆக்கிரமித்து கோயில் கட்டப்பட்டுள்ளதாக எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு ஜேசிபி இயந்திரம் கொண்டு கோயிலின் மேற்கூரை மற்றும் சுற்று பகுதிகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இன்று காலை கோயிலுக்கு வந்த பொதுமக்கள் கோயில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இத்தகவல் வேகமாக பரவியதால் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதுகுறித்து பவானி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு பவானி டிஎஸ்பி சேகர், பவானி இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் மற்றும் 10க்கும் மேற்பட்ட போலீசார் விரைந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோயிலை இடித்து தரைமட்டமாக்கிய சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.


Tags : demolition ,Angalamman ,Bhavani ,Angalamman Temple of Demolition , Angalamman Temple, Ground level, Bhavani
× RELATED ராணிப்பேட்டை மாவட்டத்தில் மயானக்கொள்ளை திருவிழா கோலாகலம்