×

கடலூர் அருகே மலை கிராமங்களில் காட்டு பன்றிகள் படையெடுப்பு: வாழை, கரும்பு, மணிலா பயிர்கள் நாசம்

கடலூர்: கடலூர் அருகே மலை கிராம பகுதி நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வரும் காட்டு பன்றிகளை பிடித்து காட்டுக்குள் விட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் அருகே ராமாபுரம், எஸ்.புதூர், எம்.புதூர், புதுக்குப்பம், ஒதியடிக்குப்பம், கீரப்பாளையம், வழிசோதனைப்பாளையம், அன்னவல்லி உள்ளிட்ட  கிராமங்களில்  ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் கரும்பு, வாழை, மணிலா, பூச்செடிகள்  சாகுபடி நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் முந்திரிகாடுகள் அடர்ந்து காணப்படுகிறது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் சிறுத்தை ஒன்று மலை கிராமங்களில் புகுந்து அட்டகாசம் செய்து. அது பிடிபட்டது. அதன் பின்னர் காட்டு விலங்குகள் நடமாட்டமின்றி இருந்து வந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களாக  மாவட்டத்தின் மேற்கு பகுதியில் உள்ள காட்டு பகுதிகளில் இருந்து கூட்டம் கூட்டமாக காட்டுபன்றிகள் மலை கிராமங்களில் உள்ள முந்திரி காடுகளில் அடைக்கலமாகி அச்சத்தை ஏற்படுத்தி வருவதாக அப்பகுதி  விவசாயிகள் கூறுகின்றனர். காட்டு பன்றிகளை விரட்ட எந்தவித முன்னேற்பாடுகள் செய்தாலும் அவற்றை தகர்த்து எறிந்துவிட்டு விளைநிலங்களில் புகுந்து விளைச்சலை சேதப்படுத்தி வருகின்றன.

குறிப்பாக இளம் வாழை கன்றுகளை அடிப்புறமாக  கடித்து அதன் தண்டுப்பகுதியை சாப்பிட்டு செல்கின்றன. இதனால் நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாழைக்கன்றுகள்  பன்றிகளால் கடித்து குதறப்பட்டு மண்ணில் சாய்ந்து கிடக்கின்றன.காட்டு பன்றிகளால் தொடர்ந்து இளம் வாழைகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இது போல் கீரப்பாளையம் பகுதியில் மணிலா பயிர்களை தோண்டி காட்டு பன்றிகள் சேதம் விளைவித்தன. கரும்புகளையும் அவைகள் விட்டு வைப்பதில்லை. இதனால் விவசாய நிலங்களை முற்றிலுமாக பன்றிகள் அழித்து விடும் என விவசாயிகள் அஞ்சுகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன் மேற்கு ராமாபுரத்தை சேர்ந்த முனியன் என்பவரின் நிலத்தில் வாழை கன்றுகளை காட்டு பன்றிகள் சேதப்படுத்தின. இது குறித்து அவர் கூறுகையில், காட்டு பன்றிகளால் வாழை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இரவு நேரங்களில் விவசாய நிலங்களுக்கு செல்ல மலை கிராம விவசாயிகள் அச்சப்படுகின்றனர். வாயில் கொம்புடன் காணப்படும் காட்டு பன்றிகள் இரவு நேரங்களில் விவசாயிகளை துரத்திய சம்பவங்களும் நடந்துள்ளன. மேலும் சொட்டு நீர் பாசன குழாய்களையும் அவைகள்  கடித்து குதறி சேதப்படுத்திவருகின்றன. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே. அரசு வனத்துறை மூலம் பன்றிகளை பிடித்து காட்டுக்குள் விடுவதோடு, பன்றிகளால் சேதமடைந்த விளைநிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.


Tags : Invasion ,mountain villages ,Cuddalore ,manila ,crops , Cuddalore, wild boars, banana, sugarcane and manila crops
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!