×

கள்ளக்குறிச்சி பகுதிக்கு கல்தா... சேலம் மாவட்டத்துக்கு சென்ற கால்நடை பூங்கா: முதல்வரின் தொகுதி பாசமா? மக்கள் குமுறல்

சேலம்: சின்னசேலம் ஆட்டுப்பண்ணைக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையில் சுமார் 800 ஏக்கர் நிலம் இருந்தும், கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லைக்கு கல்தா கொடுத்துவிட்டு தமிழக முதல்வரின் மாவட்டமான சேலம் எல்லைக்கு கொண்டு சென்றது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மேற்கு பகுதியில் உள்ள  சின்னசேலம் கூட்ரோட்டில் 1958ம் ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையில் 796 ஏக்கர் நிலப்பரப்பும், சேலம் மாவட்ட எல்லையில் 1070 ஏக்கர் நிலப்பரப்பும் கொண்டு ஆட்டுப்பண்ணை துவங்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையிலும், சேலம் மாவட்ட எல்லையிலும் சேர்த்து ஆட்டுப்பண்ணை துவங்கிய போதும் இந்த ஆட்டுப்பண்ணைக்கு சின்னசேலம் ஆட்டுப்பண்ணை என்றே அழைக்கப்பட்டது.  உயர் கலப்பினரக ஆடு, மாடு, கோழி, பன்றி ஆகியவை வளர்க்கப்பட்டு வந்தது.

வடஇந்திய பகுதியை சேர்ந்த 400 அலிகார் உழவு மாடுகளும் பராமரிக்கப்பட்டது. இங்கு வளர்க்கப்பட்ட மாடுகள், ஒயிட்லக்கான் கோழி, வெள்ளைப்பன்றி, ஆடுகள் ஆகியவை விவசாய பயன்பாட்டுக்கும், இறைச்சிக்காகவும் விற்கப்பட்டது. இதன்காரணமாக சின்னசேலத்தை சுற்றியுள்ள கிராம மக்கள்  பால் உற்பத்தி, இறைச்சி விற்பனையால் தன்னிறைவு பெற்றனர்.  கால்நடைத் தீவனங்கள் கோ.3, கோ.4 ஆகிய புல்வகைகளையும், கோ.எப்.எஸ் 29 என்ற வகை சோளம், வேலி மசால் எனப்படும் புரத சத்து நிறைந்த கூபா புல், வறட்சி காலத்திலும் வளரும் கொள்ளு, தட்டப்பயிறு, ஸ்டைலோ புல் ஆகியவற்றை பயிர் செய்து விவசாயிகளுக்கு விற்கப்பட்டது. விவசாயம் பொய்த்துப்போன காலங்களில் கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையில் உள்ள சுற்றுப்புற விவசாய மற்றும் கூலித்தொழிலாளர்கள் கலப்பின ரக கால்நடைகளை வளர்த்து பயன் பெற்றனர். ஆனால் காலப்போக்கில் ஆட்டுப்பண்ணையை பராமரிக்க போதிய நிதியை அரசு ஒதுக்காததால் ஆடு வளர்ப்பு திட்டம் முடங்கியது.

கடந்த சில ஆண்டுகளாகவே பெயரளவில் இந்த ஆட்டுப்பண்ணையில் சேலம் கருப்பு ஆடு, தலச்சேரி ஆடு, செம்மறி ஆடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. மிகப்பரந்த அளவில் உள்ள 1800 ஏக்கருக்குமேல் அமைக்கப்பட்ட  பண்ணையில் தற்போது குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே ஆடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வந்தார். அவர் முதலமைச்சரானதும், சொந்த மாவட்டத்தை பல்வேறு வகையில் முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு திட்டங்களை தீட்டினார். அதன் ஒரு பகுதியாக சின்னசேலம் ஆட்டுப்பண்ணையை உலக அளவில் பெரிய கால்நடை ஆராய்ச்சி மையமாக உருவாக்க எண்ணி, கடந்த ஆண்டு சட்டசபையில்  உலகத்தரம் வாய்ந்த  கால்நடை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டார்.   

சின்னசேலம் ஆட்டுப்பண்ணைக்கு அரசின் தலைமை செயலாளர் சண்முகம், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், கால்நடைத்துறை செயலாளர் கோபால், நபார்டு வங்கி பொது மேலாளர் ஆகியோர் வந்து உயர்தர கால்நடை ஆராய்ச்சி மையம் அமையும் இடத்தை பார்வையிட்டனர். இதையடுத்து இரு மாவட்ட கலெக்டர்களும் சேர்ந்து நிலத்தை அளவிடும் பணியை கடந்த நவம்பர், டிசம்பர் மற்றும் இந்த ஆண்டு ஐனவரி மாதங்களில் தொடர்ந்து செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையில் சேர்ந்து தான் கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவ கல்லூரி அமைக்கப்படும் என மகிழ்ச்சியில் இருந்தனர்.  முதல்வர் கடந்த செப்டம்பர் மாதம்  வெளிநாடுகளுக்கு சென்று கால்நடை வளர்ப்பு முறைகள் பற்றி நேரடியாக  பார்த்து  விவரங்களை தெரிந்து கொண்டு தாயகம் திரும்பினார்.  

தொடர்ந்து ஆட்டுப்பண்ணையில் கால்

நடை பூங்கா அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து சுமார் ரூ1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அடிக்கல் நாட்டு விழாவும் கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது. கால்நடை உயர் ஆராய்ச்சி நிலையத்திற்கு ரூ564.66 கோடியும், கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு 196.36 கோடியும், குடிநீர் திட்டத்திற்கு ரூ262.16 கோடி என ரூ1022.96 கோடி மதிப்பில் பணிகள் துவங்கி உள்ளது.  இந்த கால்நடை பூங்காவில் சுமார் 500பேர் நிரந்தர வேலைவாய்ப்பையும், மறைமுகமாக 1000க்கு மேற்பட்டோரும்  பெறுவார்கள் என தெரிகிறது. மூன்று பிரிவுகளாக அமைய உள்ள இந்த கால்நடை ஆராய்ச்சிப் பூங்காவில் நவீன வசதிகளை கொண்ட கால்நடை மருத்துவமனை, கால்நடை மருத்துவ கல்லூரியும், இரண்டாவதாக பால், இறைச்சி, மீன், முட்டை போன்ற உணவுப்போருட்களை பாதுகாத்து பதப்படுத்துதலும், மூன்றாவதாக கல்வி ஆராய்ச்சி மற்றும் தொழில் முனைவோருக்கான பயிலரங்கம் அமைக்கப்பட உள்ளது.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 9ம் தேதி நடந்த  கால்நடைபூங்கா, கால்நடை மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவின் போதுதான்  தமிழக முதல்வரின் பாரபட்சம், மாவட்ட பாசம் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களுக்கு தெரியவந்து. சின்னசேலம் ஆட்டுபண்ணையில் கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையில் சுமார் 800 ஏக்கர் நிலம் இருந்தும், சேலம் மாவட்ட எல்லையில் உள்ள 1000 ஏக்கரில் மட்டுமே அமையும் வகையில் கால்நடை பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக்கல்லூரி அமைய திட்டமிட்டு அரசு செயல்படுவதை கண்டு  மாவட்ட மக்கள் புலம்புகின்றனர். கள்ளக்குறிச்சியிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பண்ணை, சேலத்தில் இருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கால்நடை ஆராய்ச்சி பூங்கா கள்ளக்குறிச்சிக்கு மிக அருகில் இருந்தபோதும் சேலம் மாவட்ட எல்லையில் இருப்பதால் பயிற்சி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அந்த மாவட்ட மக்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும்.  முதல்வரின்  மாவட்ட பாசத்தின் காரணமாக சேலம் மாவட்ட எல்லையில் அமைப்பதை கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வரின் மாவட்ட பாசம் 2 கல்லூரியும் எங்களுக்கே!

சின்னசேலம் ஆட்டுப்பண்ணையில் கால்நடை மருத்துவ கல்லூரி துவங்க  அரசுக்கு பலமான பரிந்துரை இல்லாத காரணத்தால் அப்போது நாமக்கல்லில் கால்நடை மருத்துவக்கல்லூரி துவக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை நாமக்கல் கோழி உற்பத்தியில் தமிழக அளவில் முதன்மை பெற்று விளங்குகிறது. இந்நிலையில் கடந்த 2011ம் ஆண்டு  ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபோது கறவை மாடு, இலவச வெள்ளாடு வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார். அப்போதுதான் தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு, நெல்லையில் அபிஷேகபட்டிணம் ஆகிய இரு இடங்களில் புதிய கால்நடை மருத்துவ கல்லூரிகளை துவக்கினார்.  அப்போதுகூட சின்னசேலத்தில் கால்நடை மருத்துவக்கல்லூரி அமைய இந்த பகுதியை சேர்ந்த அமைச்சர்களோ, எம்எல்ஏக்களோ முன்வரவில்லை.

அப்படி இருந்தும் தற்போதுகூட ஆட்டுப்பண்ணையில் அமையவுள்ள கால்நடை மருத்துவக்கல்லூரியை கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையில் அமைக்காமல்  சேலம் மாவட்ட எல்லையில் அமைப்பது இந்த மாவட்ட மக்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல்லில் ஒரு கால்நடை மருத்துவ கல்லூரி உள்ள நிலையில் பக்கத்து மாவட்டமான சேலத்திலும் கால்நடை மருத்துவக்கல்லூரி அமைப்பது தமிழகத்திற்கே முதல்வரான எடப்பாடி தனது மாவட்டத்துக்கு முக்கியத்துவம் தருவது வெட்ட வெளிச்சமாகிறது.

சின்னசேலத்துக்கு புறக்கணிப்பு: தலைவாசலுக்கு மரியாதை

கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம், மலைமக்களை மற்றும் ஏழை எளிய பின்தங்கிய மக்களை உள்ளடக்கிய பகுதியாகும். இங்கு பெரிய அளவில் தொழிற்சாலைகள் ஏதும் இல்லை.  இந்த பகுதியில் உள்ள மக்கள் கால்நடை வளர்ப்பதையே பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். சின்னசேலம் ஆட்டுப்பண்ணை என்று பெயர் பெற்ற இந்த பண்ணையில் சேலம் மாவட்ட எல்லையில் மட்டும் கால்நடை ஆராய்ச்சிப்பூங்கா, கால்நடை மருத்துவக்கல்லூரி  அமைப்பது கள்ளக்குறிச்சி மக்களை ஏமாற்றுவது ஆகும். வருங்காலத்தில் இங்கு நடைபெறும் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள சேலம் மாவட்ட மக்களுக்கே முன்னுரிமை தருவார்கள். சுமார் 63 ஆண்டுகளாக சின்னசேலம் ஆட்டு பண்ணை என்று அழைக்கப்படும் இதை தற்போது தலைவாசல் என அடைமொழியிட்டு அழைப்பது வேதனையளிக்கிறது.


Tags : Kallakurichi Area ,Chief Minister ,Zalda's Zoo ,Salem District ,district cattle park people ,area ,Kalta zoo ,Kalta kurlakurichi , Kalta kurlakurichi area ... Kalta zoo ... Salem district cattle park People are screaming
× RELATED பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி...