×

கொரோனா குறித்து அச்சப்பட தேவையில்லை; ஒன்றிணைந்து தாக்குதலை எதிர்கொள்வோம்...சார்க் நாடுகளுடனான ஆலோசனையில் பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சார்க் நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். சீனாவில் இருந்து தொடங்கிய கோவிட்-19 கொரோனா வைரஸ்  உலக முழுவதும் 127 நாடுகளுக்கு பரவி இருக்கிறது. இதுவரை லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச அளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 5,800 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவிலும்  கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது. இதனால் பல மாநிலங்களிலும் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், தேசிய பேரிடராக அறிவித்த மத்திய அரசு, கொரோனா வைரஸ் பாதிப்பை பேரிடராக கருதி மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையே, கொரோனா  வைரஸ் பரவாமல் தடுப்பது பற்றி ஆலோசனை நடத்த தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பான சார்க் நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலமாக அழைப்பு விடுத்திருந்தார். அழைப்பை ஏற்ற சார்க் நாடுகளின்  தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

காணொலி ஆலோசனையில் பூடான் பிரதமர் லொதே ஷெரிங், மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் மொகம்மத் சோலிஹ், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா,  ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி, பாகிஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஜாபர் மிர்சா, சார்க் அமைப்பு நிர்வாகி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சார்க் அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், வங்கதேசம், பூடான்,  மாலத்தீவு, ஆப்கானிஸ்தான் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி பேச்சு:

சார்க் நாடுகளின் தலைவர்களுடன் காணொலி காட்சி மூலம் பேசிய பிரதமர் மோடி, எங்கள் மக்களுடன் உறவுகள் பழமையானவை, நமது சமூகங்கள் ஆழமாக ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. எனவே, நாம் அனைவரும் ஒன்றிணைந்து,  ஒன்றாகச் செயல்பட வேண்டும், ஒன்றாக வெற்றி பெற வேண்டும் என்றார். பல்வேறு நாடுகளில் இருந்து 1,400-க்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்டுள்ளோம். சார்க் நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள நிலையில், நாம்  விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கொரோனா குறித்து அச்சப்பட தேவையில்லை. நாம் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனா தாக்குதலை எதிர்கொள்வோம் என்றும் தெரிவித்தார்.


Tags : Corona ,countries ,SAARC ,talks ,negotiations ,Modi , There is no need to fear Corona; Let's face the onslaught ... PM Modi talks in consultation with SAARC countries
× RELATED ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்...