×

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மின்டன்: அரையிறுதிக்கு ஜப்பான் வீராங்கனை நொசோமி தகுதி

லண்டன்: லண்டனில் நடந்து வரும் ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மின்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் அரையிறுதிக்கு ஜப்பான் வீராங்கனை நொசோமி ஒகுஹாரா தகுதி பெற்றுள்ளார். முன்னதாக நேற்று முன்தினம் நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 3 செட்களில் கடுமையாக போராடி, இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவை வீழ்த்தியதன் மூலம், காலிறுதிக்கு நொசோமி முன்னேறினார். நேற்று இரவு நடந்த காலிறுதி போட்டியில், மகளிர் ஒற்றையர் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் உள்ள சீன வீராங்கனை சென் யூ பெய்யுடன், நொசோமி மோதினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் போட்டியில் சீன வீராங்கனை சென் யூ, எதிர்பார்த்த அளவு திறமையை வெளிப்படுத்தவில்லை. இதனால் முதல் செட்டை 21-14 என எளிதாக நொசோமி கைப்பற்றினார். அதே உற்சாகத்துடன் 2வது செட்டை நொசோமி எதிர்கொண்டார். 2வது செட்டில் சென் யூ, சற்று எழுச்சியுடன் ஆடினார். தனது சர்வீஸ்களை தக்க வைத்துக் கொண்டே முன்னேறினார்.

நொசோமியும் தனது சர்வீஸ்களை விட்டுக் கொடுக்கவில்லை இதனால் இருவரும் சம அளவு புள்ளிகளுடன் முன்னேறினர். தேவையான நேரத்தில் நொசோமி அதிரடியாக ஆட, 2வது செட் நூலிழையில் 23-21 என்ற புள்ளிக்கணக்கில் அவர் வசமானது. இதையடுத்து 21-14, 23-21 என நேர் செட்களில் சென் யூவை வீழ்த்திய நொசோமி, இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்கு முன்னேறி விட்டார். கொரோனா பீதியால் சொற்ப எண்ணிக்கையிலான ரசிகர்களே போட்டியை காண வந்திருந்தனர். வந்திருந்த சிலரும் போட்டியின் துவக்கத்தில் இருந்தே, ஜப்பான் வீராங்கனை நொசோமிக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியபடி இருந்தனர். கடந்த ஆண்டு சர்வதேச பேட்மின்டன் போட்டிகளில் மகளிர் ஒற்றையரில் தொடர்ந்து வெற்றிகளை குவித்துள்ள சீன வீராங்கனை சென் யூ, 2019 டிசம்பர் முதல் தொடர்ந்து தர வரிசையில் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது இந்த வெற்றி குறித்து நொசோமி கூறுகையில், ‘‘பேட்மின்டனில் வெற்றியை அன்றைய நாளே தீர்மானிக்கிறது என்று கருதுகிறேன். இதில் நான் கொஞ்சம் அசந்திருந்தாலும், 2வது செட்டை சென் யூ கைப்பற்றி இருப்பார். அப்புறம் அவர் போட்டியின் முடிவையே மாற்றி விடுவார்’’ என்று தெரிவித்தார். அரையிறுதியில் முன்னாள் நம்பர் 1 வீராங்கனை தைவானை சேர்ந்த டை சூ யிங்குடன், நொசோமி மோத உள்ளார்.


Tags : All England Open Badminton ,semifinals ,Japan ,Nozomi ,Nozomi Qualifies , All England Open Badminton, Semifinals, Japan, Nosomi
× RELATED ஜப்பானில் மியாசாஹி என்ற இடத்தில்...