×

மந்தமான ரோந்து பணியால் கடத்தல் அதிகரிப்பு: பாதுகாப்பு அச்சத்தில் ராமேஸ்வரம் தீவு மக்கள்...தீவிரவாதிகள் ஊடுருவும் அபாயமென எச்சரிக்கை

ராமேஸ்வரம்: பாக்ஜலசந்தி கடலில் மத்திய, மாநில பாதுகாப்பு ஏஜென்சிகளின் ஒருங்கிணைந்த கண்காணிப்பு இல்லாததால் கடத்தல் நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது. கடலில் மந்தமான ரோந்துப்பணி, பாதுகாப்பு குளறுபடியால் தீவிரவாதிகள் ஊடுருவும் வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையில் தமிழக கரையோரம் அமைந்துள்ள பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடலில் தற்போது கடத்தல் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்ட கடலோரப்பகுதியில் சமீபகாலமாக ஹெராயின், கஞ்சா, போதை மாத்திரைகள், போதை புகையிலை பாக்கெட்டுகள், தங்கக்கட்டிகள் பாதுகாப்பு ஏஜென்சிகளால் கைப்பற்றப்படுவது தொடர்கிறது. இதுபோல இலங்கை மன்னார், புத்தளம், நெடுந்தீவு கரையோர பகுதியிலும், தமிழகத்தில் இருந்து படகில் கடத்திச் செல்லப்படும் இதுபோன்ற பொருட்கள், இலங்கை கடற்படையினராலும் கைப்பற்றப்படுவது அதிகரித்துள்ளது.

இது மட்டுமல்லாமல் இந்தியாவில் தடை செய்யப்பட்ட கடல் அட்டை, கடல் குதிரை போன்ற பொருட்களும் ராமநாதபும் மாவட்ட கடலோரப்பகுதியில் பதப்படுத்தப்பட்டு, கடல் வழியாக இலங்கைக்கு கடத்தி சென்று அங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதும் தொடர்கிறது. சில நேரங்களில் இவ்வகை கடத்தல் பொருட்கள், இந்திய கடற்படை, கடலோர காவல்படை, மத்திய வருவாய் புலனாய்வுத்துறை, சுங்கத்துறை, தமிழக மரைன்போலீஸ் மற்றும் புலனாய்வு துறை அதிகாரிகளால் கைப்பற்றப்படுகிறது.
பாதுகாப்பு ஏஜென்சிகளால் கைப்பற்றப்படும் கடத்தல் பொருட்களை போல் பலமடங்கு பொருட்கள் எவ்வித தடையும் இல்லாமல் படகில் இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகிறது. இலங்கைக்கு படகில் கடத்தி செல்லப்படும் பொருட்கள், இலங்கையில் கடத்தல் புள்ளிகளிடம் சென்றடைந்ததும், இந்த பொருட்களுக்கான பணத்திற்கு பதிலாக தங்கக்கட்டிகள் தரப்படுகிறது. இவை கடத்தல் நபர்கள் மூலம் படகில் கடத்தி வரப்பட்டு இங்குள்ள ஏஜென்டுகள் மூலம் உரியவர்களை சென்றடைகிறது.

இருநாடுகளுக்கும் இடையில் உள்ள பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபடும் படகு ஒட்டுனர்கள், ஊழியர்கள், வாகன ஓட்டிகள், பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்து செல்லும் ஏஜென்டுகளுக்கு அவர்களது வேலைக்கு தகுந்தாற்போல் பணம் வழங்கப்படுகிறது. ஆயிரக்கணக்கில் பணம் கிடைக்கும் என்பதால் மீனவர்கள் முதல் பலரும் இக்கடத்தல் வேலையில் ஈடுபடுகின்றனர். எப்போதாவது கடத்தில் பொருட்கள் கைப்பற்றப்படுவதும், கடத்தல் நபர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் நடந்தாலும் கடலிலும், கரையிலும் எவ்வித தடையும் இல்லாமல் கடத்தில் நடவடிக்கையில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதுகாப்பு ஏஜென்சிகளின் ஒருங்கிணைந்த கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை இல்லாததாலும், கடலில் ரோந்துப்பணியில் மந்தமான நிலை உள்ளதாலும், கடத்தல் நடவடிக்கையில் அவ்வப்போது புதியவர்களின் வரவு அதிகரித்து வருவதும் ராமேஸ்வரம் தீவுப்பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவலுக்கு வழிவகுத்துவிடும் என்ற அச்ச உணர்வு பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளின் மத்தியில் உருவாகியுள்ளது. கடல்மேல் வான்வழி கண்காணிப்புக்காகவும் உச்சிப்புளி பருந்து கடற்படை விமானதளம் விரிவாக்கம் செய்யப்பட்டு ரோந்துப்பணிக்கு சிறியரக விமானங்கள், ஹெலிகாப்டர்கள் வழங்கப்பட்டது. மேலும், கடலோர கண்காணிப்பை வலுப்படுத்த புதிதாக தமிழக மரைன் போலீஸ் குழுமம் அமைக்கப்பட்டு கடலோர கண்காணிப்பு மற்றும் குற்ற நடவடிக்கை தடுப்புக்காக நவீன ரோந்து படகுகளும் வழங்கப்பட்டதுடன், கடலோர பகுதியில் பல இடங்களில் மரைன் போலீஸ் சோதனை சாவடிகளும் ஏற்படுத்தப்பட்டது.

அனைத்து பாதுகாப்பு ஏஜென்சிகளும் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் அவ்வப்போது பாதுகாப்பு துறை அதிகாரிகள் பங்கேற்கும் கடலோர பாதுகாப்பு குறித்த கூட்டமும் நடத்தப்படுகிறது. இருந்தும் கடலோர கண்காணிப்பில் மெத்தனம் நிலவுவதால் கடலோர பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டு கடத்தல் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. 237 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில், கீழக்கரை முதல் தொணடி வரையிலான கடற்கரை பகுதியிலிருந்து படகு மூலம் இலங்கைக்கு போதைப்பொருட்கள், கடல் அட்டைகள் கடத்துவது சமீப காலமாக அதிகரித்துள்ளது. மீனவர்களால் பிடித்து வரப்படும் கடல் அட்டைகள் சிறிய வியாபாரிகளால் சேகரிக்கப்பட்டு குறிப்பிட்ட அளவு வந்தவுடன் பதப்படுத்தி இலங்கைக்கு கடத்தப்படுகிறது.

 உயிருடன் கரைக்கு வந்து சேரும் கடல் அட்டைகளை அவித்து பின் உலரவைத்து பதப்படுத்தும் வேலையில் ராமேஸ்வரம், வேதாளை உள்ளிட்ட பல பகுதியில் குடிசைத்தொழில் போல் பலர் செய்து வருகின்றனர். இதுபோல் தமிழக மலைக்கிராமங்கள், கேரளா மற்றும் ஆந்திராவில் இருந்து வாகனங்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள், ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிக்கு கடத்திவரப்பட்டு இங்கிருந்து இலங்கைக்கு கடத்தப்படுகிறது.  படகில் கொண்டு செல்லப்படும் கடத்தல் பொருட்கள் நடுக்கடலில் இலங்கையிலிருந்து வரும் கடத்தல் நபர்களின் படகிற்கு மாற்றப்படுகிறது. இதற்கு பதிலாக இலங்கைப்படகில் கொண்டு வரப்படும் கடத்தல் தங்கக்கட்டிகளை பெற்றுக்கொண்டு கடத்தல் நபர்கள் மீண்டும் இங்கு வந்து சேர்ந்து விடுகின்றனர்.

இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு படகில் கடத்தி வரப்பட்ட கிலோ கணக்கிலான தங்ககட்டிகளை நடுக்கடலில் இலங்கை கடற்படையினரும், ராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய, மாநில பாதுகாப்பு ஏஜென்சிகளும் கைப்பற்றியுள்ளனர். கடத்தல் நபர்கள் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இதையும் தாண்டி பன்மடங்கு கடத்தல் தங்கமும், போதைப்பொருட்களும் பாக்ஜலசந்தி கடல் வழியாக அவ்வப்போது கடத்தப்பட்டு வருவது கடல் மற்றும் கடலோர பாதுகாப்பில் உள்ள ஓட்டைகளை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. பாக்ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடல் பாதுகாப்பில் அரசும், அதிகாரிளும் இனியும் மெத்தனம் காட்டினால் தமிழக கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலும், தீவிரவாத நடவடிக்கைகளும் நடைபெறும் என்பதே மக்களின் கருத்தாக உள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறோம்

மண்டபம் இந்திய கடலோர காவல்படை கமாண்டர் வெங்கடேசன் கூறியது; பாக்ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 24 மணி நேரமும் கடலோர காவல்படைக்கு சொந்தமான ஹோவர்கிராப்ட் கப்பல்களும், சிறிய ரோந்து கப்பல்களம் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகிறது. கடலோர காவல்படைக்கு சொந்தமான ஆயுதம் தாங்கிய பெரிய கப்பல்கள், ஹெலிகாப்டர், சிறிய ரக விமானங்களும் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மத்திய, மாநில பாதுகாப்பு மற்றும் புலனாய்வு துறைகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கையினால் இக்கடல் பகுதியில் கடத்தல் நடவடிக்கைகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மீனவர் பாதுகாப்பு, மீட்பு, அவசரகால நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறோம்.

 மாதந்தோறும் மத்திய, மாநில பாதுகாப்பு துறை அதிகாரிகள் பங்கேற்கும் வகையிலான கடலோர பாதுகாப்பு ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு அனைத்து துறையினருடனும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு, கண்காணிப்பு, கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். கடலோர பகுதி மீனவ கிராமங்களில் அவ்வப்போது மீனவர்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி கடலோர பாதுகாப்பில் அவர்களது பங்களிப்பு குறித்தும் தெரிவித்து வருவதால் பல நேரங்களில் மீனவர்கள் மூலமாக முக்கிய தகவல் பெற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

கடலுக்குள் போட்டு தங்கக்கட்டிகள் கடத்தல்

ஒரு வாரத்திற்கு முன்பு இலங்கையில் இருந்து படகில் கடத்திவந்த 15 கிலோ தங்கக்கட்டி பார்சல்கள், கடத்தல் நபர்களால் மன்னர் வளைகுடா கடல் பகுதியில், கடலுக்குள் போடப்பட்ட நிலையில் இந்திய கடலோர காவல்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்ட சம்பவம் நடைபெற்றது. இச்சம்பவத்தில் தொடர்புடைய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

யாரென்று தெரிந்தும் நடவடிக்கை ‘ம்..ஹூம்’

ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், வேதாளை உள்ளிட்ட கடலோர கிராமம் மற்றும் நகர் பகுதியில் கடத்தல் வேலைகளில் ஈடுபடும் நபர்கள் குறித்தும், கடல் அட்டைகள் பதப்படுப்படும் இடங்கள் குறித்து இங்குள்ள பாதுகாப்பு ஏஜென்சிகளுக்கும், தமிழக போலீசாருக்கும் அனைத்து விபரங்களும் தெரியும். ஆனால் எவ்வித நடவடிக்கையும் இல்லை.  கடந்த ஆண்டில் மட்டும் ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் இருந்து கடத்தி செல்லப்பட்ட டன் கணக்கிலான கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள், இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து படகில் கடத்தி வரப்பட்ட கிலோ கணக்கிலான தங்கக்கட்டிகளும் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் கைப்பற்றப்பட்டுள்ளது.

பயனில்லா மரைன் போலீஸ் ரோந்து படகு

ராமேஸ்வரம், தனுஷ்கோடி உள்ளிட்ட கடற்கரை பகுதியில் பல நேரங்களில் இலங்கையை சேர்ந்த பைபர்கிளாஸ் மீன்பிடி படகுகள் மர்மமான முறையில் கரை ஒதுங்கி நிற்கும். இதில் வந்தது யார்? எதற்காக வந்தனர்? கடத்தல் பொருட்களுடன் வந்தனரா என்று கேள்விகள் பொதுமக்கள் தரப்பில் கேட்கப்பட்ட்டு வந்தாலும், இதற்கெல்லாம் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம இருந்து எவ்வித பதிலும் கிடைப்பதில்லை.தமிழக மரைன் போலீசாருக்கு வழங்கப்பட்ட ரோந்து படகுகள் பலவும் பழுதாகி பயன்பாடற்று நிறுத்தப்பட்டுள்ளது. கடற்கரை மணலில் ரோந்து செல்வதற்காக வழங்கப்பட்ட பெரிய டயர் உள்ள வாகனங்களும் பயன்படுத்தப்படாமல் உள்ளது. கடற்கரையோரத்தில் அமைக்கப்பட்ட பல செக்போஸ்ட்களும் போலீசார் பற்றாக்குறையினால் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது.

Tags : Rameshwaram Islanders , Increased smuggling of sluggish patrols: Rameshwaram Islanders in fear of security ...
× RELATED ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே வாக்கு...