×

கீழடி அருகே முதுமக்கள் தாழிகளின் முழு வடிவம் கண்டறிய நடவடிக்கை: தொல்லியல் துறையினர் தீவிரம்

திருப்புவனம்: கீழடி அருகே கொந்தகையில் நடந்து வரும் அகழாய்வில் தாழிகளின் முழு வடிவத்தை கண்டறிய நூல்கொண்டு கட்டி அதன் முழு அமைப்பை காண்டறிய தொல்லியல் துறையினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட நான்கு கிராமங்களில் ரூ.50 லட்சம் செலவில் 6ம் கட்ட அகழாய்வு பணியை தமிழக தொல்லியல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதில் கொந்தகையில் பண்டைய கால தமிழர்கள் பயன்படுத்திய மயானமாக இருந்துள்ளதாக நம்பப்படுகிறது. பண்டை காலத்தில் இறந்தவர்களை தாழிக்குள் வைத்து புதைப்பது வழக்கமாக இருந்துள்ளது. ஏற்கனவே கொந்தகையில் முதுமக்கள் தாழி கிடைத்துள்ள நிலையில், ஆறாம் கட்ட அகழாய்விலும் முதுமக்கள் தாழியை கண்டறிய தொல்லியல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். கொந்தகையில் 10 மீட்டர் நீளம், 10மீ அகலத்தில் இரு குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடந்து வருகிறது. இரு குழிகளிலும் முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன.

கீழடியில் கிடைத்த முதுமக்கள் தாழிகளுக்கும், கொந்தகையில் கிடைத்த முதுமக்கள் தாழிகளுக்கும் பெருமளவு வித்தியாசம் உள்ளதாக தொல்லியல் துறையினர் கருதுகின்றனர். கொந்தகை தாழிகள் வெயிலில் தாக்கு பிடிக்க முடியாமல் தொடர்ந்து சேதமடைவதால் அவற்றின் முழுவடிவத்தை கண்டறிய முடியவில்லை. இதனையடுத்து தொல்லியல் துறையினர் கொந்தகையில் மட்டும் ஷெட்கள் அமைத்து பணிகளை மேற்கொள்வதுடன் முதுமக்கள் தாழிகளின் முழுவடிவத்தை கண்டறிய நூல்கள் கொண்ட கட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். 10 மீட்டர் நீள, அகலமுள்ள குழிகளை ஐந்து மீட்டர் கொண்ட பாகங்களாக பிரித்து ஒவ்வொரு கட்டத்திற்குள்ளும் உள்ள முதுமக்கள் தாழிகளின் நீள, அகலத்தை பதிவு செய்து வருகின்றனர். இதில் முதுமக்கள் தாழிகளின் அமைப்பு ஒன்றுக்கொன்று அதிகளவில் வித்தியாசப்படுகிறது. எனவே பண்டைய கால மக்களை புதைப்பதற்கு பல்வேறு வடிவ தாழிகளை பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. தொடர் அகழாய்வின் முடிவில் தாழிகள் பற்றிய முழு விபரம் தெரியவரும் என தொல்லியல் துறையினர் எதிர்பார்த்துள்ளனர்.

Tags : bottom ,fossils , Subsidiary, Old Age, Archeology
× RELATED மதுரை கீழக்கரையில் நடைபெற உள்ள...