×

ஆறு பாயத்துவங்கும் இடத்திலேயே பரிதாபம்: தாமிரபரணியில் வீசி எறியப்படும் கழிவுகள்...பாதுகாக்குமா விகேபுரம் நகராட்சி?

வி.கே.புரம்: வற்றாத  ஜீவநதியான தாமிரபரணி ஆற்றில் வீசி எறியப்படும் துணிகள் மற்றும் கழிவுகளால் ஆற்றின் புனித தன்மை  பாதிக்கப்பட்டு வருகிறது. தெளிந்த நீரோடை போன்ற ஓடிய ஆறு, இன்று கழிவுகள்  சங்கமித்து கலங்கலாகி விட்டது. இதனால் நாளைய தலைமுறைக்கு தாமிரபரணியின்  பயன் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.மேற்குத் தொடர்ச்சி  மலையின் பொதிகை மலையில் உற்பத்தியாகி நெல்லை, தூத்துக்குடி ஆகிய இரண்டு  மாவட்டங்களை வளமாக்கி தூத்துக்குடி மாவட்டத்தின் புன்னக்காயலில்  கடலில் கலக்கிறது தாமிரபரணி ஆறு. தாமிரபரணி ஆற்றின் மூலம் நெல்லை, தென்காசி  மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும், தூத்துக்குடி  மாவட்டத்தில் 46 ஆயிரத்து 107 ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி  பெறுகின்றன.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள ஒரு  மாநகராட்சி, 9 நகராட்சிகள், 55 பேரூராட்சிகள், 833 கிராம பஞ்சாயத்துகள்  மட்டுமின்றி விருதுநகர் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளுக்கும் குடிநீர்  ஆதாரமாக தாமிரபரணி ஆறு திகழ்கிறது.
வற்றாத  ஜீவ நதி எனப் பெயர்  பெற்ற இந்த புனித நதி தெளிந்த நீரோடை போன்று காணப்படும். மலைகளில் நடுவே  ஓடி வரும் தாமிரபரணி ஆற்றின் அழகை காண்பதே கண்களுக்கு விருந்தளிப்பது  போன்று இருக்கும். ஆனால் தாமிரபரணி ஆறு மலைகளில் இருந்து ஓடி வந்து  நகரத்திற்குள் சங்கமிக்கும் பாபநாசத்திலேயே கழிவுகள் சங்கமிக்க தொடங்கி  விடுகிறது.

பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் பரிகாரம் செய்து விட்டு  ஆற்றில் துணிகளை விட்டுச் செல்லும் பழக்கம் 2018க்கு முன்பு வரை குறைந்த  அளவே இருந்து வந்தது. ஆனால் 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ம் தேதி முதல்  22ம் தேதி வரை தாமிரபரணி புஷ்கரணி விழா நடந்தது. இதில் பாபநாசத்தில்  மட்டும் லட்சகணக்கானோர் புனித நீராடினார். அப்போது புனித நீராடிய சிலர்  தங்கள் ஆடைகளை அப்படியே   ஆற்றில் விட்டுச் சென்றனர். வெளி  மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் தங்கள் மிதியடிகளையும் ஆற்றின் ஓரத்தில்  விட்டுச் சென்றனர்.       

 தாமிரபரணி புஷ்கர  விழாவிற்கு பின் ஆற்றில் ஆடைகளை விட்டுச் செல்வது அதிகரித்து விட்டது.  வாரத்திற்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து 4 டன் கழிவு துணிகளை அகற்றும்  அளவுக்கு பரிகாரம் செய்பவர்கள் துணியை விட்டுச் செல்கின்றனர்.
பாபநாசம்     கோயில் மூலமும், வி.கே.புரம் நகராட்சி மூலமும் குளிக்க  வருபவர்களுக்கும்,      பரிகாரம் செய்பவர்களுக்கும் விழிப்புணர்வு  ஏற்படுத்தும் வகையில் மைக் மூலம்    அறிவிப்பு செய்கின்றனர். அத்துடன்  குளிக்கும் இடங்களில் அறிவிப்பு போர்டுகள் வைத்தும் விழிப்புணர்வு  ஏற்படுத்தி வருகின்றனர். இதனை யாரும் கண்டுகொள்வதாக தெரியவில்லை. இதனால்  ஆற்றின் புனிதம் மாசுபட்டு வருகிறது. இது மட்டுமல்லாது ஆற்றில் குளிக்க  வரும் பலர் கழிவு துணிகளில் சிக்கி ஆற்றில் மூழ்கி உயிர் இழக்கும் அபாய  சூழலும் நிலவுகிறது.

இதுகுறித்து  இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் பால்ராஜ் கூறுகையில், ‘எந்த இந்து  சாஸ்திரமும் பரிகாரம் செய்துவிட்டு ஆடைகளை ஆற்றில் விட வேண்டும் என்று  சொல்லவில்லை. இவர்கள் ஆற்றில் துணிகளை விடுவதால் குளிப்பவர்களின்  கால்களில் சிக்கி, ஆபத்தை உண்டாக்குகிறது. அத்துடன் சுகாதாரக் கேடும்  ஏற்படுகிறது. பாபநாசத்தில் இருந்து செல்லும் தாமிரபரணி நதி மூலம் தான்  திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர்,  மாவட்ட மக்களின்  குடிநீர் தேவையை பூர்த்தி செய்யப்படுகிறது. தாமிரபரணி தொடங்கும்     இடத்திலேயே அசுத்தம் ஆவதால் சுகாதாரக் கேடும் தொடர்கிறது. ஆற்றில் துணிகளை  விடுபவர்கள் கண்காணிக்கப்பட்டு நகராட்சி மூலம் அவர்களுக்கு அபராதம் விதிக்க  வேண்டும், என்றார்.

தாமிரபரணி ஆறு புண்ணிய நதியாகும். அதை பாதுகாக்க  வேண்டிய பொறுப்பும், அக்கறையும் பொதுமக்களாகிய நமக்கும் உள்ளது. எனவே  பரிகாரம் செய்ய வரும் பக்தர்கள் துணிகளை ஆற்றில் விடாமல் அதற்குரிய  பெட்டியில் போட வேண்டும்.
நகராட்சி நிர்வாகமும், கோயில் நிர்வாகமும்  இணைந்து செயல்பட்டு ஆற்றில் துணிகள் வீசுவதை கண்காணிக்க வேண்டும். இவ்வாறு  இரண்டு நிர்வாகங்களும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே தாமிரபரணி ஆற்றின்  புனிதம் பாதுகாக்கப்படும். நாளைய தலைமுறையினருக்கு தாமிரபரணியில் பயன்  கிடைக்கும்.   

வாரத்திற்கு 4 டன் துணிகள்

வி.கே.புரம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் கணேசன் கூறுகையில், ‘கடந்த  2 ஆண்டுகளாக பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் இருந்து வாரந்தோறும் 4 டன் அளவுள்ள  கழிவு துணிகளை அகற்றி வருகிறோம். இதில் 15க்கும் மேற்பட்ட  சுகாதார  பணியாளர்களை ஈடுபடுத்தி வருகிறோம். அதுவும் சில நேரங்களில் தண்ணீரில்  முழ்கியும் கழிவு துணிகளை அகற்றுகின்றனர். பரிகார பூஜை செய்பவர்கள் ஆற்றில்  துணிகளை விடக்கூடாது என்று எவ்வளவோ விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பலன்  இல்லை. அத்துடன் பரிகார பூஜை செய்பவர்களுடன் நகராட்சி சார்பில் ஆலோசனை  கூட்டம் நடத்தி அவர்கள் மூலமும்      பரிகாரம் செய்பவர்களிடம்  விழிப்புணர்வு ஏற்படுத்த கேட்டுக் கொண்டுள்ளோம். இதற்காக தொடர்ந்து  நடவடிக்கை எடுத்து வருகிறோம், என்றார்.

தனிப்பெட்டி வைத்தும் போடுவதில்லை
            
பாபநாசம் கோயில் நிர்வாக அதிகாரி ஜெகநாதன்  கூறுகையில், ‘தாமிரபரணி நதியில் குளிப்பவர்கள் பரிகார பூஜை  செய்துவிட்டு தங்கள் ஆடைகளை ஆற்றில் விடக் கூடாது என்று நாள்தோறும் மைக்  மூலம் அறிவிப்பு   செய்கிறோம். அத்துடன் குளிக்கும் இடங்களில்  விழிப்புணர்வு தட்டி போர்டுகளை வைத்துள்ளோம். பரிகாரம் முடிந்து துணிகளை  ஆற்றில் விடுவதற்கு பதிலாக ஆற்றின் கரையோரத்தில் வைக்கப்பட்டிருக்கும்  பெட்டிகளில் துணிகளை விட்டுச் சென்றால் ஆற்றில் கழிவுகள் தங்காது. ஆனால்  துணிகள் போடுவதற்காக    வைக்கப்பட்ட பெட்டிகளில் பலர் துணிகளை போடுவதில்லை  இது சம்பந்தமாக 2 வாட்ச்மேன்கள் நியமித்து கண்காணிக்க உள்ளோம். அதற்காக  அரசுக்கு பரிந்துரை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு ஒப்புதல் கிடைத்தால்  வாட்ச்மேன் மூலம் யாரும் ஆடைகளை ஆற்றில் போடாதவாறு கண்காணிக்கப்படும்,  என்றார்.    


Tags : Pity on the river bank Is the municipality of Vaikapuram safe?
× RELATED கடலூரில் தேர்தலன்று இரு...