×

ம.பி. நிலவும் அரசியல் நெருக்கடிக்கும் பாஜகவுக்கும் சம்பந்தமில்லை; சிந்தியா தான் தங்களை அணுகினார்...ராஜ்நாத் சிங் பேட்டி

போபால்: மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் திடீர்  மாயமாகினர். ஆட்சியை கவிழ்க்க பா.ஜ சதி செய்வதாக  காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. இதற்கிடையே, காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கிய ஜோதிராதித்யா சிந்தியாவின் ஆதரவாளர்களாக  இருந்த 6 அமைச்சர்கள் உட்பட  22 எம்.எல்.ஏக்கள் திடீரென தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். ஜோதிராதித்யாவும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி  சிலநாட்களுக்கு முன் பா.ஜ.வில் இணைந்தார். அதனால், மத்தியப் பிரதேச அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆளும் காங்கிரஸ் பெரும்பான்மை இழந்துள்ளது.

இதனை தொடர்ந்து, மத்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டனை முதல்வர் கமல்நாத் சந்தித்து அரசியல் நிலவரம் குறித்து விளக்கினார். தொடர்ந்து,  ஜோதிராதித்யாவின் ஆதரவு அமைச்சர்களான இமாரதி தேவி, துளசி சிலாவத், கோவிந்த் சிங் ராஜ்புத், மகேந்திர சிங் சிசோடியா, பிரத்யும் சிங் தோமர், பிரதுராம்  சவுத்திரி ஆகிய 6  பேரை உடனடியாக பதவியில் இருந்து நீக்கி, ஆளுநர் லால்ஜி டாண்டன் உத்தரவு பிறப்பித்தார். அமைச்சர்கள் 6 பேரின் ராஜினாமா கடிதத்தை  சபாநாயகர் நர்மதா பிரசாத் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதற்கிடையே, நாளை நடைபெறவுள்ள மத்திய பிரதேச பட்ஜெட் கூட்டத் தொடரில், முதல்வர் கமல்நாத் தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு  நடைபெறவுள்ளது. இந்நிலையில், தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான ராஜ்நாத் சிங், காங்கிரசில்  இருந்து விலகி பாஜகவில் சேர்ந்துள்ள ஜோதிராதித்ய சிந்தியாவை, பாஜக அணுகவில்லை, அவர்தான் பாஜகவை அணுகினார் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், கமல்நாத் அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கும் பாஜகவுக்கும் சம்பந்தமில்லை என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். ராஜஸ்தானின் பெயரை  குறிப்பிடாமல், வேறு மாநிலம் எதிலும் ரகசியமாக ஆட்சியை பிடிக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளதா என்ற கேள்விக்கு, இல்லை என்று ராஜ்நாத்  பதிலளித்தார்.


Tags : crisis ,The BJP ,Madhya Pradesh ,Cynthia ,Rajnath Singh , Madhya Pradesh The BJP is not concerned with the ongoing political crisis; Cynthia just approached themselves ... Interview with Rajnath Singh
× RELATED பாஜவின் கோட்டைகளிலும் மோடிக்கு ஏன் பயம்?