×

வசதியான கைதிகள் மூலம் மாதந்தோறும் ரூ.6 கோடி சம்பாதிக்கும் மும்பை சிறை அதிகாரிகள்

* பணம் தர முடியாதவர்களுக்கு பல்வேறு சித்திரவதை
* ஐகோர்ட்டுக்கு விசாரணை கைதி புகார் கடிதம்

மும்பை: மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறை அதிகாரிகளுக்கு கைதிகள் மூலம் பணம் கொட்டோ கொட்டோவென கொட்டுகிறது. வசதிபடைத்த கைதிகள் மூலம் சிறை அதிகாரிகள் ஒரு மாதத்திற்கு ₹6 கோடி வரை சம்பாதிப்பதாகவும், பணம் கொடுக்க முடியாத கைதிகளை பாலியல் ரீதியாகவும் வேறு வகையிலும் சித்ரவதைக்குள்ளாக்கி வருவதாகவும் விசாரணைக் கைதி ஒருவர் மும்பை உயர் நீதிமன்றத்துக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார். ஆர்தர் சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருக்கும் ஒருவர் இந்த புகார் கடிதத்தை அனுப்பியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் இந்த புகார் கடிதம் அனுப்பப்பட்டது. இந்த புகாருக்கு விளக்கம் அளிக்குமாறு மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலும், அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.அந்த புகார் கடிதம் குறித்த விவரம் இப்போதுதான் வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது;ஆர்தர் ரோடு சிறையில் பல ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருக்கும் பழைய தண்டனை கைதிகளை சிறை அதிகாரிகள் தனது வேலையாட்களாகத்தான் பயன்படுத்திக் கொள்கிறார்கள். சிறைக்கு புதிய கைதிகள் அழைத்து வரப்பட்டால் அவர்கள் முதலில் அதிகாரிகளுக்கு வேண்டப்பட்ட பழைய கைதிகளிடம் அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

புதிய கைதிகள் சிறை அறையின் ஒரு மூலையில் அமர வைக்கப்படுவார்கள். அதிகாரிகள் பழைய கைதிகளை அழைத்து சிறையில் யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று புதிய கைதிகளுக்கு விளக்கச் சொல்வார்கள். அந்த சமயத்தில் புதிய கைதிகளை பழைய கைதிகள் அதிகாரிகள் முன்னிலையில் வாய்க்குவந்தபடி அசிங்கமாக பேசுவது வழக்கம். அதன் பிறகு புதிய கைதிகள் அதிகாரிகள் முன்னிலையில், பாலியல் உறவு பொசிசன்களை சித்தரிக்கும் வகையில் ஓவியம் வரைந்து காட்ட வேண்டும். சிறைக்கு வரும் புதிய கைதிகளை மிரட்டுவதற்காகவே இவ்வாறு செய்யப்படுகிறது. அதன் பிறகு மாதத்திற்கு ₹6 லட்சம் வரை செலவு செய்ய தயாராக இருந்தால் சிறையில் எந்த தொல்லையும் இல்லாமல் சகல வசதிகளுடன் இருக்கலாம் என்று புதிய கைதிகளிடம் எடுத்துச் சொல்லப்படும்.

இதைத் தொடர்ந்து, அந்த புதிய கைதிகள் கொடுக்கும் பணத்தை பொறுத்து அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். பணம் கொடுக்கும் கைதிகள் சிறையில் உள்ள 3, 8, 10 மற்றும் 12 ஆகிய பராக்குகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அந்த சிறைப்பிரிவுகளில் அதிக கைதிகள் இருக்க மாட்டார்கள். வசதி படைத்த மற்றும் அதிகாரிகள் கேட்கும் தொகையை கொடுக்க தயாராக இருக்கும் கைதிகள் மட்டுமே அந்த சிறைப் பிரிவுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். மற்ற கைதிகள் 6, 1, 11 ஆகிய பராக்குகளுக்குள் தள்ளப்படுவார்கள். இந்த சிறைப்பிரிவுகளில் கைதிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும். இதில் பயங்கர கிரிமினல் பேர்வழிகளும் இருப்பார்கள். துளியும் சுத்தமில்லாமல் காணப்படும் இந்த சிறை அறைகளில் கைதிகள் படுத்து தூங்க கூட இடவசதி இருக்காது. இங்குதான் பல கைதிகள் பாலியல் ரீதியாகவும், வேறு ரீதியாகவும் சித்ரவதைக்குள்ளாக்கப்படுகிறார்கள்.
வசதி படைத்த கைதிகளுக்கு ஸ்பெஷல் டீ, காய்கறி சாலட், சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள், நல்ல உணவு உட்பட எல்லா வசதிகளும் கிடைக்கும். அதற்கு அந்த கைதிகள் மாதம் தலா ₹15 ஆயிரம் வரை அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டும். இவ்வாறு வசதியான கைதிகள் மூலம் மாதந்தோறும் சிறை அதிகாரிகள் சராசரியாக ₹5 கோடி முதல் ₹6 கோடி வரை சம்பாதிக்கிறார்கள்.

ஆர்தர் ரோடு சிறையில் கொள்ளளவை விட அதிகமாக 3,800 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால், வெறும் 4 டாக்டர்கள்தான் உள்ளனர். சிறை வளாகத்தில் ஒரு சிறிய மருத்துவமனை மட்டும்தான் உள்ளது. அந்த மருத்துவமனையும் எப்போதும் அசுத்தமாகத்தான் இருக்கும். உடைந்த இ.சி.ஜி. மெஷின், அதிகப்பட்சம் 5 ஸ்டெத்தோஸ்கோப், 5 தெர்மா மீட்டர்கள், 2 ரத்த அழுத்த பரிசோதனை கருவிகளைத் தவிர அந்த மருத்துவமனையில் வேறு எதுவும் இருக்காது. இதனால், சிறைக் கைதிகளுக்கு சரியான மருத்துவ சிகிச்சை கிடைப்பதில்லை.சிறையில் ஏதேனும் விபத்து நிகழ்ந்து கைதி காயமடைந்தாலோ, நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டாலோ அவர்களுக்கு சிகிச்சையளிக்க சிறை மருத்துவமனையில் எந் வசதியும் இல்லை. இதன் காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 29 கைதிகள் உயிரிழந்திருக்கிறார்கள்.சிறை வளாகத்தில் 25 சதுரஅடி அகலமும், 10 அடி ஆழமும் கொண்ட ஒரு தண்ணீர் தொட்டி உள்ளது. இந்த தண்ணீர் தொட்டி சுத்தப்படுத்தப்படுவதேயில்லை.

இதனால், தண்ணீர் தொட்டி முழுவதும் கிருமிகள் நிறைந்து போயிருக்கின்றன. இந்த தண்ணீர் தொட்டிக்கு சிறை அருகில் உள்ள சாக்கடை வழியாகத்தான் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. அந்த சாக்கடைகள் பெருகி விட்டால் கழிவுநீர் மொத்தமும் தண்ணீர் தொட்டிக்கு வந்து விடும். அந்த தண்ணீரைத்தான் கைதிகள் குடிக்கவும் வேறு உபயோகத்துக்கும் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு என்னைப் போன்ற பல விசாரணைக் கைதிகள் சொல்ல முடியாத சித்ரவதைகளை அனுபவித்து வருகிறோம். அதனால், தயவு கூர்ந்து எங்களுக்கு ஜாமீன் அளிக்க வேண்டும். எங்களுக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிடுவதுடன், நாங்கள் நிரபராதிகள் என நிரூபிக்க கால அவகாசமும் வழங்க வேண்டும். அல்லது எங்களை போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லுங்கள், இல்லையேல் நாங்கள் மொத்தமாக தற்கொலை செய்து கொள்ள அனுமதியளியுங்கள். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாக வழக்கறிஞர் விஷால் கனாடே கூறினார்.

Tags : Prison Officers ,Mumbai ,inmates , Mumbai Prison Officers, Rs 6 crore, month through the inmates
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 526 புள்ளிகள் உயர்வு..!!