×

விபத்து வழக்கில் இழப்பீடு வழங்க உத்தரவிடும்போது மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும்: தீர்ப்பாயங்களுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: விபத்து வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடும்போது பாதிக்கப்பட்டவரின் ஊனம் குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்று விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரியை சேர்ந்த சிறுவன் கிரிதரன், சென்னையை சேர்ந்த பாக்கியராஜ், திருப்பூரை சேர்ந்த முருகேசன், ஓசூரை சேர்ந்த சிவன் ஆகியோர் தொடர்பான விபத்து வழக்குகளை விசாரித்த சம்மந்தப்பட்ட நீதிமன்றங்களின் உத்தரவுகளை எதிர்த்து ஓரியன்டல் இன்சூரன்ஸ், ஐசிஐசிஐ லம்பார்ட் இன்சூரன்ஸ், இப்கோ-டோக்யோ இன்சூரன்ஸ், சோழமண்டலம் இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்கள் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தன.
இந்த வழக்குகள் நீதிபதி ஆர்.மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு:
விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தரப்படும் ஊனச்சான்றிதழ்களின் அடிப்படையிலேயே விபத்து இழப்பீடு வழக்குகளுக்கான தீர்ப்பாயங்கள் சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு உத்தரவிடுகின்றன.

இதனால் இழப்பீடு வழங்குவதில் பல முறைகேடுகள் ஏற்படுகின்றன. எனவே, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊனச்சான்றிதழ் வழங்குவதில் ஒரே மாதிரியான நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும். மத்திய சமூக நீதி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கடந்த 2018 ஜனவரி 4ம் தேதி ஊனமுற்றோருக்கான சான்றிதழ் வழங்குவது தொடர்பான அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி அந்தந்த மாவட்ட மருத்துவ வாரியம் சட்ட விதிகளுக்கு உட்பட்டு சான்றிதழ் தரவேண்டும். அந்த சான்றிதழ்களின் அடிப்படையில்தான் தீர்ப்பாயங்கள் விபத்து இழப்பீடுகள் குறித்து உத்தரவிட வேண்டும். இந்த உத்தரவை அனைத்து சார்பு நீதிமன்றங்களுக்கும் தீர்ப்பாயங்களுக்கும் உயர் நீதிமன்ற பதிவகம் அனுப்ப வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.



Tags : government ,accident ,Tribunals , Central government,guidelines, followed ,ordering compensation ,accident
× RELATED விருதுநகர் குவாரி விபத்தில்...