×

சாலை விபத்துக்களை கட்டுப்படுத்தும் வகையில் ‘எல்எல்ஆர்’ பெறுவோருக்காக புதிய பாடத்திட்டம் தயாரிப்பு

* தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே லைசென்ஸ்
* தமிழகத்தில் விரைவில் செயல்பாட்டுக்கு வருகிறது

சென்னை: சாலை விபத்துக்களை கட்டுப்படுத்தும் வகையில் ‘எல்எல்ஆர்’ பெறுவோருக்காக புதிய பாடத்திட்டத்தை தயாரிக்கும் பணியில் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். தமிழகத்தில் இருசக்கர வாகனங்கள்-2.20 கோடி, நான்குசக்கர வாகனங்கள்-23 லட்சம், தனியார் பஸ்கள்-8 ஆயிரம், அரசு பஸ்கள்-21 ஆயிரம் ஆகியவை பயன்பாட்டில் உள்ளன. இவ்வாறுள்ள வாகனங்களை இயக்குவோர் மோட்டார் வாகன சட்டத்தின்படி லைசென்ஸ் வைத்துள்ளனர்.புதிதாக பெறுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. லைசென்ஸை நேரடியாக பெற்றுவிட முடியாது. முன்னதாக எல்எல்ஆர் என்று அழைக்கப்படும் பழகுனர் உரிமத்தை விண்ணப்பித்து பெற வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்கும் ேபாது இருப்பிடச்சான்றுக்கு ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், எல்ஐசி பாலிசி, வாக்காளர் அடையாள அட்டை, டெலிபோன் பில், மின்கட்டண ரசீது, குடிநீர் கட்டண ரசீது போன்றவற்றை சமர்ப்பிக்கலாம்.பள்ளிச்சான்று, பிறப்பு சான்று போன்றவற்றை வயதை நிரூபிப்பதற்கு வழங்க வேண்டும். பிறகு சட்டவிதிமுறைகளின்படி குறிப்பிட்ட கட்டணத்தை அரசுக்கு செலுத்த வேண்டும்.

அதனைத்தொடர்ந்து விண்ணப்பதாரருக்கு தேர்வு நடத்தப்படும். அதில் மோட்டார் வாகன சட்டத்தில் உள்ள போக்குவரத்து விதிகள், சமிக்ைஞகள், இதர சாலை நடைமுறைகள் பற்றி விண்ணப்பதாரருக்கு தெரிகிறதா என்பதற்காக இந்த தேர்வு நடத்தப்படும்.இந்த தேர்வில் விண்ணப்பதாரர் வெற்றி பெறும் பட்சத்தில் அவருக்கு எல்எல்ஆர் வழங்கப்பட்டு விடும். இதைக்கொண்டு தற்காலிகமாக வாகனத்தை ஓட்ட முடியும். எல்எல்ஆர் பெற்ற 30 நாட்களுக்கு பிறகு நிரந்தர லைசென்ஸ் பெறுவதற்கு விண்ணப்பிக்க முடியும்.இவ்வாறு நிரந்தர லைசென்ஸ் பெறுவதற்கு விண்ணப்பித்தவுடன் ஆர்டிஓ அலுவலகத்தில் சோதனைகள் நடத்தப்படும். அப்போது எட்டு போடுதல், இன்டிகேட்டர் முறையாக பயன்படுத்துதல், வாகனத்தை பார்க்கிங் செய்யதல் ேபான்றவை குறித்து ஆய்வு செய்யப்படும்.இதில் தேர்வு பெற்றால் மட்டுமே ஓட்டுனர் உரிமம் கிடைக்கும். ஆனால் ஒருசில இடங்களில் எல்எல்ஆர் கேட்டு விண்ணப்பிப்போரிடம் பெயரளவிற்கு மட்டுமே தேர்வு நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் சாலைபோக்குவரத்து விதிகளை முறையாக தெரிந்துகொள்ளாத பலர் எல்எல்ஆர் பெற்றுவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அவர்கள் சாலைகளில் வாகனத்தை இயக்கும் போது தேவையற்ற விபத்துக்கள் நடப்பதற்கு வாய்ப்புள்ளது. எனவே இந்த விபத்துக்களை கட்டுப்படுத்தும் வகையில் எல்எல்ஆர் பெறுவதற்கான வழிமுறைகளை கடினமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி புதிய பாடத்திட்டம் ஒன்றை உருவாக்க போக்குவரத்துத்துறை அதிகாரிகள் திட்டமிட்டனர். அதற்கான பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் இந்த நடைமுறையை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவருவதற்கும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதன்மூலம் வாகன விபத்துகள் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டில் 71,431 சாலை விபத்துக்கள் நடந்தது. இதில் 17,218 பேர் உயிரிழந்தனர். அப்போது இந்தியாவிலேயே அதிக உயிரிழப்பு நடக்கும் மாநிலமாக தமிழகம் இருந்தது. இதையடுத்து சாலைவிபத்துக்களை குறைக்க பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டது.

இதன்மூலம் தமிழகத்தில் வாகன விபத்துக்கள் படிப்படியாக குறையத் துவங்கியது. கடந்த ஆண்டு 57,228 விபத்துக்கள் நடந்தது. இதில் 10,525பேர் உயிரிழந்தனர். இதற்கு போக்குவரத்துத்துறை அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகளே காரணம். இதன் ஒருபகுதியாக எல்எல்ஆர் எடுப்பவர்களுக்காக புதிய பாடத்திட்டத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளோம். இதில் போக்குவரத்து சட்டங்கள், விதிமுறைகள், சமிக்ஞைகள் போன்றவற்றின் விபரங்களை கூடுதலாக சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இந்த பாடத்திட்டம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் சம்மந்தப்பட்ட பாடத்திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும். பிறகு அதன் அடிப்படையிலேயே தேர்வு நடத்தப்படும். அப்போது சாலைவிதிகள் குறித்து முழுவதும் தெரிந்திருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். இதன்மூலம் சாலை விபத்துக்கள் குறையும். தற்போது இதற்கான பணி தீவிரமாக நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : recipients ,road accidents , New curriculum,preparation,recipients, control road accidents
× RELATED தமிழ்நாட்டில் சாலை விபத்து தடுக்க...