×

கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு ஏப்.30 வரை தண்ணீர் தர ஆந்திரா உறுதி

* இதுவரை 6.47 டிஎம்சி வந்துள்ளது
* பொதுப்பணித்துறை தகவல்

சென்னை,: கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு ஏப்.30 வரை தண்ணீர் தர ஆந்திரா உறுதி அளித்து இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தெலுங்கு கங்கா திட்ட ஒப்பந்தப்படி ஆந்திர அரசு கண்டலேறு அணையில் இருந்து ஆண்டு தோறும் 12 டிஎம்சி நீர் தமிழகத்துக்கு தர வேண்டும். கண்டலேறு அணையில் நீர் இருப்பு குறைவாக இருப்பதாக கூறி தண்ணீர் திறக்கப்படவில்லை. இதை தொடர்ந்து கடந்த செப்டம்பரில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்பி.வேலுமணி ஆகியோர் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்துக்கு 5 டிஎம்சி நீர் தர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். இதையேற்று கண்டலேறு அணையில் இருந்து கடந்த செப்டம்பர் 24ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.  ஆனால், வடகிழக்கு பருவமழை மூலம் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய 4 ஏரிகளில் எதிர்பார்த்த அளவு நீர் மட்டம் உயரவில்லை. இதனால், தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்க கோரி கிருஷ்ணா நதி நீர் மேலாண்மை வாரிய கூட்டத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வலியுறுத்தினார்கள்.

ஆனால், ஆந்திரா நீர்வளத்துறை அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்து விட்டனர். இதை தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் எஸ்பி.வேலுமணி, ஜெயக்குமார், செயலாளர் மணிவாசன், கண்காணிப்பு பொறியாளர் முத்தையா, செயற்பொறியாளர் ஜார்ஜ் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து பேசினர். அப்போது, 2 டிஎம்சி வரை தமிழகத்துக்கு தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் தமிழகத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி கண்டலேறு அணையில் இருந்து தமிழக எல்லைக்கு 670 கன அடியாக நீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது வரை 6.47 டிஎம்சி நீர் தமிழகத்துக்கு வந்துள்ளது. இந்த நிலையில் வரும் ஏப்ரல் 30ம் தேதி வரை தண்ணீர் தரப்படும் என்று ஆந்திர நீர்வளப்பிரிவு அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

4 ஏரிகளில் 6 டிஎம்சி நீர் இருப்பு
3.3 டிஎம்சி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 2.6 டிஎம்சி, 3.6 டிஎம்சி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 2 டிஎம்சியும், 3.2 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 1.4 டிஎம்சியும், 1.08 டிஎம்சி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில்0.072 டிஎம்சி என ெமாத்தம் 6 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : Andhra Pradesh ,Kandaleratu Dam ,Tamil Nadu , Andhra Pradesh ,ensures water supply , Kandaleratu Dam , Tamil Nadu
× RELATED ரேஷன் அரிசி, கோதுமை, பருப்பு, ஆயில் என...