×

8 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட ஆறுவழிச்சாலை திட்டத்தால் வாகன நெரிசலில் சிக்கி தவிக்கும் கிழக்கு கடற்கரை சாலை

* நெடுஞ்சாலைத்துறை மெத்தனமே காரணம்
* பொதுமக்கள் குற்றச்சாட்டு

கிழக்கு கடற்கரை சாலை ஆறுவழிச்சாலையாக மாற்றும் திட்டம் கடந்த 8 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், கிழக்கு கடற்கரை சாலை வாகன நெரிசலில் சிக்கி தவித்து வருவது தொடர்கதையாகி வருகிறது. பொதுமக்கள் தினமும் நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாகியுள்ளனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலை என்றாலே வாகன ஓட்டிகளுக்கு அலாதியான பிரியம் தான். இதற்கு காரணம் அதிகாலையில் கடற்கரையின் தூய்மையான காற்றை சுவாசித்து கொண்டு வாகனங்கள் ஓட்ட சென்னையில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் ைபக் மற்றும் கார்களில் மகாபலிபுரம் மற்றும் பாண்டிச்சேரிக்கு பயணம் செய்கின்றனர். இந்த சாலைகளில், கடந்த 10 ஆண்டுகளில் திருவான்மியூர் முதல் மகாபலிபுரம் வரை கிழக்கு கடற்கரை சாலையோரங்களில் அதிகளவில் ரிசார்ட்டுக்கள், சொகுசு பங்களாக்கள், கேளிக்கை விடுதிகள் மற்றும் விண்ணை முட்டும் குடியிருப்பு கட்டிடங்கள், ஐடி நிறுவனங்கள் அதிகளவில் அமைந்துள்ளது. அதேபோல் கிழக்கு கடற்கரை சாலையில் ரியல் எஸ்டேட் தொழிலும் கொடிகட்டி பறக்கிறது. சென்னையில் சுற்றுலா தலங்கள் நிறைந்த பகுதியாகவும் கிழக்கு கடற்கரை சாலை தான் இன்று வரை உள்ளது. இதனால் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

கிழக்கு கடற்கரை சாலையோரம் பகுதிகள் வளர்ச்சி அடைந்து இருந்தாலும், சாலை வசதிகள் மட்டும் 20 ஆண்டுகள் பின் தங்கி உள்ளது. இந்த சாலைகளை பயன்படுத்தி தான் மாமல்லபுரம், பாண்டிச்சேரி வரை செல்ல வேண்டும். புதுச்சேரியில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் சுற்றுலாதலமான மகாபலிபுரத்தில் இருந்து வரும் வாகனங்கள் என தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் கிழக்கு கடற்கரை சாலையை தான் பயன்படுத்துகின்றனர். இதுதவிர, ஓஎம்ஆர் சாலையில் வரும் வாகனங்கள் அனைத்தும் சோழிங்கநல்லூர் சிக்னலில் பிரிந்து உத்தண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலையை தான் வந்தடைகிறது. காலையில் சென்னை நகருக்குள் அதிக அளவில் வாகனங்கள் வருவதால் காலையிலேயே மக்கள் திணறித்தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஒரு இடத்தை கடப்பதற்கு சுமார் 30 நிமிடங்கள் வரை ஆகிறது. கிழக்கு கடற்கரை சாலையை கடக்க 2 மணி நேரம் முதல் 3 மணி நேரம் ஆகிறது.மேலும், திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் பகுதிகளில் கிழக்கு கடற்கரை சாலையோட்டி அதிகளவில் வர்த்தக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், கடைகளுக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் கிழக்கு கடற்கரை சாலையில் தான் நிறுத்துகின்றனர். இதனால் மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை இந்த பகுதிகளில் வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்லும் நிலை தான் உள்ளது.கிழக்கு கடற்கரை சாலையில் எந்த இடங்களிலும் மேம்பாலங்கள் அமைக்கப்படவில்லை. இதனால் தினமும் திருவான்மியூர், நீலாங்கரை, பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம், கோவளம் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் இந்த சாலைகளில் தான் ஐடி நிறுவனங்கள் ஏராளமானவை உள்ளது. எனவே, இந்த சாலைகளை பயன்படுத்தும் வாகனங்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே தான் வருகிறது. அப்படியிருக்கும் சூழ்நிலையில், இந்த சாலைகளை ஆறு வழிச்சாலையாக விரிவுபடுத்த தமிழக நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது. குறிப்பாக, கடந்த 2012ல் திருவான்மியூர் முதல் அக்கரை வரை 6 வழிச்சாலையாக மாற்ற தீர்மானிக்கப்பட்டது. ஆனால் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, திருவான்மியூர் முதல் பாலவாக்கம் வரை சாலைகளில் இருபுறங்களும் ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த கடைகள் நிலம் கையகப்படுத்த தடை கோரி நீதிமன்றம் வரை சென்றுள்ளனர். இதனால், அந்த கடைகளை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, அந்த இடங்களில் கடைகளை அகற்றுவதற்கு பதிலாக மாற்று ஏற்பாடுவது செய்வது குறித்து நெடுஞ்சாலைத்துறை யோசித்து வருகிறது.  இந்த நிலையில் திருவான்மியூர் சிக்னல் சந்திப்பில் இருந்து பல்வழிச்சாலை ₹150 கோடி செலவில் பல்வழிச்சாலை மேம்பாலம் அமைக்க கடந்த 2012ல் அறிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் திருவான்மியூர் பேருந்து நிலையம் வரை மட்டுமே அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக, திருவன்மியூர் ஆர்டிஓ அலுவலகம் வரை பல்வழிச்சாலை மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கிழக்கு கடற்கரை சாலை ஆறுவழி சாலையாக மாற்றினால் தற்போது சாலையோரம் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் அதிகளிவில் பாதிக்கப்படுகிறது. இதனால் சாலை கையகப்படுத்தும் போது பாதிக்கப்படும் கட்டிடம் உரிமையாளர்கள் மற்றும் ரியல் எஸ்ேடட் அதிபர்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் நெருங்கி பழகி திட்டத்தை விரைந்து செயல்படுத்தாமல் இழுத்தடித்து வருவதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டி உள்ளனர். திருவான்மியூர் ஆர்டிஓ அலுவலகம் அருகில் உள்ள சிக்னலில் உள்ள ஒரு கடையை பல ஆண்டுகளாக அகற்ற முடியாமல் அதிகாரிகள் உள்ளனர். மற்ற இடங்களில் சாலையை விரிவிடுபடுத்தி விட்டு, அந்த ஒரு கடையை மட்டும் சாலை நடுவே வைத்திருப்பால், அந்த கடையை ஒட்டிய பகுதியில் ஷேர் ஆட்டோக்கள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன. அருகில், பஸ் நிறுத்தமும் உள்ளதால், சாலையில் மக்கள் நிற்கின்றனர். இதனால் வாகன நெரிசல் ஏற்பட்டு, போக்குவரத்து முழுமையாக ஸ்தம்பித்து விடுகிறது. இந்த ஒரு இடத்தில் வாகனங்கள் ஸ்தம்பிப்பதால், சோழிங்கநல்லூர் வரை நெரிசல் அதிகமாக இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் விழி பிதுங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், கிழக்கு கடற்கரை சாலை தற்போது அபாயகரமான சாலையாக உருமாறி வருகிறது. திருவான்மியூர் முதல் மகாபலிபுரம் வரை நடக்கும் சாலை விபத்துக்களில் வாரத்திற்கு 1 முதல் 3 பேர் பலியாகி வருகின்றனர். இந்த உயிர் பலியை குறைக்க வேண்டும் என்றால் சென்னையின் நுழைவு வாயிலில் ஒன்றாக உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் தினமும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், விபத்துக்களை தடுக்கவும் தமிழக அரசு அறிவித்தப்படி ஆறுவழிச்சாலையாக வழி சாலையாக உடனே மாற்ற ேவண்டும். இரு புறமும் உள்ள சாலை விரிவாக்கப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சாலை மாநில நெடுஞ்சாலைக்குள் வருவதால் மாநில அரசே உடனடியாக பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

* திருவான்மியூர் சிக்னல் சந்திப்பில்  இருந்து ₹150 கோடி செலவில் பல்வழிச்சாலை மேம்பாலம் அமைக்க  கடந்த 2012ல் அறிவிக்கப்பட்டது.
* நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்த சாலை பணி இன்னும் தொடங்கப்படவே இல்லை.
* இதனால் திருவான்மியூர் முதல் மகாபலிபுரம் வரை நடக்கும் சாலை விபத்துக்களில் தினமும் உயிர்பலி நடக்கிறது.

Tags : East Coast Road , East Coast Road, jammed,six-year-old six-lane road project
× RELATED சீனாவுடனான வர்த்தகத்தை எளிதாக்க 12...