×

வெளுத்து வாங்கும் வெள்ளை தொப்பிக்காரர்…!

ஈரோடு மாவட்டம் ஜமக்காளம் நகரில் போக்குவரத்து பிரிவில், உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து இங்கேயே பணியாற்றி வந்தார். 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் பணியிட மாறுதல் செய்யப்பட்டார். ஆனால், இரண்டே மாதத்தில் மீண்டும் பெவிலியன் திரும்பிவிட்டார். அந்த அளவுக்கு ஜமக்காள நகர மக்கள் மீது பாசமா? என நினைத்தால், அது தவறு. இவர், சரக்கு லாரி ஒவ்வொன்றையும் இடைமறித்து, லோடுக்கு தகுந்தவாறு, மாமூல் தொகை நிர்ணயம் செய்து கறந்து விடுகிறார். இருசக்கர வாகனத்தில் செல்பவர்களையும் விடுவதில்லை. விரட்டிப்பிடித்து காசு பார்த்து விடுகிறார். இப்பகுதியில், காவிரி ஆறும், பவானி ஆறும் ஓடுவதால், சரக்கு லாரிகளுக்கும், ஐயாவின் வசூல் வேட்டைக்கும் பஞ்சமில்லை. சாலையோர பழக்கடைகளையும் விடுவதில்லை. டியூட்டிக்கு வரும்போது வெறும் பை கொண்டு வருகிறார். வீடு திரும்பும்போது இந்த பை, புல் ஆகிவிடுகிறது. இவரை பொறியில் சிக்கவைக்க பல அதிகாரிகள் முயன்றும், பாச்சா பலிக்கவில்லை. இந்த வெள்ளை தொப்பிக்காரரின் அட்டகாசத்துக்கு முடிவே இல்லையா...? கோவிந்தா.. கோவிந்தா... என சாலையோர வியாபாரிகள் மற்றும் லாரி டிரைவர்கள் புலம்பி தள்ளுகின்றனர்.

பத்திரம் தொலைஞ்சிருச்சா... ‘இன்ஸ்’ இருக்க பயமேன்
நிலப்பத்திரம் தொலைந்தால் மறுபத்திரம் வாங்க, பத்திரம் தொலைத்த போலீஸ் எல்லையில் மனு ரசீது பெற்றால் மட்டுமே அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இந்த வகையில் தொலைந்த பத்திரத்திற்கு மனு ரசீது பெற வரும் நபர்களை கண்டாலே விருதுநகரின் மேற்கு போலீஸ் நிலையத்தில் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறதாம். அதிலும், பத்திரப்பதிவு அலுவலகத்தை ஒட்டி மேற்கு ஸ்டேஷன் இருக்கிறதால, பத்திரம் எங்கே தொலைஞ்சாலும் பரவாயில்லை. இங்கே தொலைந்ததாக மனு ரசீது தர நாங்க தயாரா இருக்கோம்னு சொல்லி வைச்சிருக்காங்களாம். அதனால பத்திரம் காணலைன்னு பத்திரப்பதிவு அலுவலகம் வர்ர எல்லாரையும் பின்னாடி இருக்கிற ஸ்டேஷனுக்கு அனுப்பிடுறாங்களாம். ஸ்டேஷன் ‘இன்ஸ்’, புகார்தாரரிடம் கனிவு காட்டி நில மதிப்பு முதல் அனைத்தையும் விசாரிச்சு, தனது நிலத்தை மனுவுடன் வந்தவருக்கு விற்பது போல் நெடிய பீடிகையோடு மனு ரசீதுக்கு பணம் வாங்குறாராம். குறைந்த மதிப்பு சொத்து என்றால் பத்தாயிரம், நில மதிப்பு கூடினால் மாமூலும் கூடுதாம். அதிக பட்சம் முப்பதாயிரம் வரை போகுதாம். இன்ஸை கண்காணிக்க யாரும் இல்லாததால் ஸ்டேஷன் வாசலை மிதிச்சாலே பணம் தரணும்னு சொல்லிக்கிட்டு இருக்காராம். இவரை பத்தி மதுரை ஐஜிக்கும் தெரியுமாம். அவரால கூட இவரை ஒண்ணும் செய்ய முடியலயாம்னு புகார்தாரர்கள் புலம்பி தள்ளுறாங்க.

பார்ட்னர்ஷிப் பிசினஸ் நடத்தும் ‘டூ ஸ்டார்கள்’
தூத்துக்குடி மாவட்டம், தாமிரபரணி ஆற்றில் இரவு முழுவதும் மணல் மாபியாக்கள் முகாம் தான். இங்கு தினமும் 100 டிரிப்களுக்கும் மேல் மணல் தாராளமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு அள்ளிச் செல்லப்படுகிறது. இதனை கண்டு கொள்ளாமல் இருக்க காக்கிகளுக்கு லட்சக்கணக்கில் செம கவனிப்பு நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இங்கு மணல் கொள்ளையில் கோேலாச்சி வரும் ஒரு டீமில் இரு டிரைவர்களை இரு மாவட்ட எல்லையோர இன்ஸ் ஒருவர் ‘பார்த்துப்’’ பொறி வைத்து பிடித்துள்ளார். அவரை போலீஸ் வேனில் ஏற்றி காவல் நிலையத்தின் வாசலில் நிறுத்தியுள்ளார். உள்ளே சென்று அவர் திரும்புவதற்குள் வேனில் இருந்த மணல் திருட்டு கும்பலை சேர்ந்த 2 பேரும் மாயமாகி விட்டனர். அந்த அதிகாரியும் தலையில் கையை வைத்துக் கொண்டு நாராயணா என அமர்ந்து விட்டாராம். அப்போது அங்கிருந்த ஒரு காக்கி, அய்யா அவர்கள் இருவரும் நம்ம டூ ஸ்டார் இருவரின் ‘பார்ட்னர்கள்’ எனக் கூறி அதிர வைத்துள்ளார். அவர்களை வேனில் இருந்து எஸ்கேப் ஆக்கியதும் நம்ம ஆள் தான் என்றாராம். இரண்டு மாவட்டங்களிலும் 15 ஆண்டுகளுக்கு மேல் சர்வீசில் இருக்கிறோம். இப்படி ஒரு ‘புதிய’’ பிசினஸ் பார்ட்னர்களை பார்க்கவில்லையே என்றாராம். கள்ளன் ஊருக்குள் இல்லை. நம்ம குதிருக்குள் இருக்கிறான் என்றாராம் வெறுத்துப் போன அந்த அதிகாரி.

மனஉளைச்சலுக்கு ஆளாகும் மலைக்கோட்டை காக்கிகள்...
தமிழக காவல்துறை குற்றவாளிகளை கைது செய்த பின் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி மத்திய சிறைக்கு அழைத்து செல்ல வேண்டும். அங்கு பணியில் உள்ள ஜெயில் டாக்டர் குற்றவாளிகளை பரிசோதித்து நல்ல உடற்தகுதியுடன் உள்ளார் என சான்று அளிப்பார். அதன் பின்னரே குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். மலைக்கோட்டை மாநகரில் உள்ள மத்திய சிறை மருத்துவமனை டாக்டர் மற்றும் சிறை நிர்வாகம் குற்றவாளிகளை இங்கு பரிசோதிக்க முடியாது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அங்கு உடற்தகுதி சான்று பெற்ற பின்னரே ஜெயிலுக்கு கொண்டு வாருங்கள் என கூறியுள்ளனர்.

இதில் குற்றவாளிகளை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது பரிசோதனை நடத்தும் டாக்டர்கள் அங்ேகயே அட்மிட் செய்துவிடுகின்றனர். இதனால் போலீசார் குற்றவாளிகளுடன் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் தங்கி இருக்கும் சூழல் ஏற்படுகிறது. இதனால் மலைக்கோட்டை காக்கிகள் சொல்ல முடியாத வேதனையும் மனஉளைச்சலுக்கும் ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து மருத்துவமனை டீன் மற்றும் மலைக்கோட்டை போலீஸ் கமிஷனர் தலையிட்டு இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என காக்கிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : White hat buyer…!
× RELATED கோவையில் மோடி ரோடு ஷோவில் பள்ளி...