×

விபத்தை குளோஸ் செய்த ‘காக்கிகள்’

தூத்துக்குடி இந்திரா நகரை சேர்ந்த வாசுதேவன் என்ற மின்வாரிய ஊழியர் கடந்த மாதம் முதல்வர் தூத்துக்குடி வந்த 22ம் தேதி அதிகாலை 3.30 மணியளவில் பணி நிமித்தம் காரணமாக அவரது ஸ்கூட்டியில் எப்சிஐ குடோன் எதிரே சென்று கொண்டிருந்தாராம். முதல்வர் வருகைக்காக ரோந்து பணியில் இருந்த பைக் பேட்ரோல் போலீசார் அந்த பைக் மீது மோதியதில் வாசுதேவன் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டார். முதல்வர் வரும் நாளில் விபத்தை ஏற்படுத்திய போலீசார் என கெட்ட பெயர் வந்துவிடக்கூடாது என்று அதிகாரிகள் நினைத்துள்ளனர். இதனால் அந்த விபத்தை, அடையாளம் தெரியாத ஒரு வாகனம் என்று எப்ஐஆர் போட்டு கேசை முடித்து விட்டனர். மேலும் அவரது குடும்பத்தினரிடம் சென்று விபத்தை ஏற்படுத்தியது போலீசார் தான், ஆனால் எங்களை பகைத்துக் கொண்டு உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. உங்களுக்கு பணம் கிடைக்க ஏற்பாடு செய்கிறோம் என்று “அன்பாக” தெரிவித்து விட்டனர்.
இந்த மிரட்டலுக்கு அஞ்சாத வாசுதேவனின் குடும்பத்தினர் மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்பியிடம் புகார் அளித்தனர். அவர்களும் தகுந்த நடவடிகை எடுப்பதாக கூறியுள்ளனர். இதற்கிடையே விவகாரம் பெரிதானதால், அத்தனை சிசிடிவி கேமரா பதிவுகளையும் கைப்பற்றி, தடயமே இன்றி ேபாலீசார் அழித்து விட்டனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தற்போது சிபிசிஐடி விசாரணை கோரி கோர்ட் படியேறி வருகின்றனர். முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க நினைத்த தூத்துக்குடி போலீஸ் அதிகாரிகளுக்கு சிபிசிஐடி விசாரணை என்ற பெயரில் புதிய பூதம் புறப்பட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு ஒரு சட்டம், போலீசுக்கு ஒரு சட்டமா? என கேள்வி எழுப்புகின்றனர் தூத்துக்குடி வாசிகள்.

பந்தோபஸ்து டியூட்டியா...? வேறு ஆளை பாரு தம்பி...!
தமிழக காவல்துறையில் டிஜிபி முதல், சாதாரண கடைநிலை காவலர் வரை எல்லோரும் கண்டிப்பாக பந்தோபஸ்து டியூட்டி பார்த்தே ஆக வேண்டும். ஆனால், கோவை புறநகர் மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் ஒரு ஆய்வாளர் பந்தோபஸ்து டியூட்டியில் இருந்து கடந்த 3 ஆண்டுகளாக தப்பித்து வருகிறார். இவருக்கு டிஎஸ்பி நிலையில் உள்ள அதிகாரிதான் பஸ்தோபஸ்து டியூட்டி போட வேண்டும். அப்படி டியூட்டி போட்டால், அவரை, இவர் மிரட்டிவிடுகிறார். காரணம், அந்த அளவுக்கு ஆளும்கட்சி செல்வாக்கு. மாதம் இருமுறை, கோர்ட் விட்னஸ் எனக்கூறி, பூட்டுக்கு பெயர்போன சொந்த ஊருக்கு பறந்துவிடுகிறார். கூடவே சூட்கேசும் செல்வதாக கொசுறு தகவல். இவர், கடந்த மூன்று ஆண்டில் ஒரே ஒருமுறை மட்டும் பந்தோபஸ்து டியூட்டி பார்த்துள்ளார். அது, அத்திவரதர் தரிசன காலம். பல அதிகாரிகள் பல நாட்கள் அங்கு தவம் கிடக்க, இவர் ஒரே வாரத்தில் ரிவர்ஸ் கியர் போட்டு திரும்பிவிட்டார். ‘‘ஏன் சார், பந்தோபஸ்து டியூட்டியை அவாய்டு பண்றீங்க...’’ என சக அதிகாரிகள் கேட்டால், ‘‘அடபோப்பா... ஓய்வு பெறுவதற்குள் நாலு காசு பார்த்தால்தானே நிம்மதியா வண்டிய ஓட்ட முடியும்...’’ என கூலாக பதிலளிக்கிறார்.

பணியிட மாற்றத்தால் பெண் காக்கிகள் வேதனை
திருவண்ணாமலை மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் பணியாற்றி வந்த காக்கிகள் 40க்கும் மேற்பட்டோர் திடீரென கடந்த வாரம் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். இவர்களில் பெண் காக்கிகளையும் சேர்த்து பணியிட மாற்றம் செய்து எஸ்பி உத்தரவிட்டுள்ளார். அந்த பெண் போலீசார் மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களுக்கும், தொலைதூரம் உள்ள காவல் நிலையங்களுக்கும் மாற்றப்பட்டுள்ளார்களாம். இப்படி பணியிடமாற்றம் செய்யப்பட்ட பெண் காக்கிகளின் பிள்ளைகள் பொதுத்தேர்வு எழுதி வருகிறார்களாம். தேர்வு நடைபெறும் நேரத்தில் இப்படி ெதாலைதூர காவல்நிலையங்களுக்கு பணியிடமாற்றம் செய்துவிட்டார்களே எப்படி குழந்தைகளை பார்த்துக்கொள்வது என்று பெண் காக்கிகள் மனவேதனையில் உள்ளார்களாம்.

மசாஜ் செய்ய போன காக்கிகள் கலக்கம்
குமரி மாவட்டத்தில் மசாஜ் சென்டர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எந்த வித அனுமதியும் பெறாமல், மசாஜ் என்ற பெயரில் வெளி மாநில, வெளி மாவட்ட இளம்பெண்களை வைத்து இளைஞர்களை கவர்ந்து பேக்கேஜ் முறையில் பணம் பறிக்கும் வேலைகள் நடக்கின்றன. இது பற்றி ஏராளமான புகார்கள் வந்ததால், தனிப்படையினர் சோதனை மேற்ெகாள்ள எஸ்.பி. நாத் உத்தரவிட்டார். அதன்படி நாகர்கோவில் நகரில் ஒரு மசாஜ் சென்டரில் சோதனை நடத்தி, அங்கு விபசாரம் நடந்து வந்ததை போலீசார் உறுதிப்படுத்தினர். அங்கிருந்து மீட்கப்பட்ட இளம்பெண்களிடம் விசாரணை நடத்திய போது, இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் சிலர் அடிக்கடி இந்த மசாஜ் சென்டருக்கு வந்து சென்றது தெரிய வந்தது. குமரி மாவட்டத்தில் இருந்து மாறுதலாகி சென்ற இன்ஸ்பெக்டர்கள் 2 பேர் கூட, மாதம் ஒரு முறை இங்கு வந்து மசாஜ் செய்வது வழக்கமாம். இப்படி வந்து சென்றவர்கள் யார், யார் என்பதெல்லாம் அங்குள்ள ரகசிய வீடியோ கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த கேமரா காட்சிகள் எஸ்.பி.க்கு அனுப்பி வைக்கப்பட்டால், சில இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.க்களின் லீலைகள் அம்பலமாகி விடுமாம். இதனால் மசாஜ்க்கு போன காக்கிகள் இப்போது கலக்கத்தில் உள்ளனர். எப்படியாவது வீடியோ வெளியே வராமல் செய்ய வேண்டும் என்பதில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்களாம்.

Tags : accident , Closes ,accident
× RELATED அமெரிக்கா பால்டிமோர் பால விபத்தில் 6 தொழிலாளர்கள் பலி!