×

25 செல்போன், 10 மணிபர்ஸ்களை மின்சார ரயிலில் திருடிய பாட்டி, பேத்தி கைது

சென்னை: கூட்ட நெரிசலை பயன்படுத்தி மின்சார ரயிலில் திருடிய பாட்டி, பேத்தி உட்பட 3 பெண்களை ரயில்வே போலீசார் அதிரடியாக கைது செய்து  விசாரித்து வருகின்றனர்.சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு, தாம்பரம் போன்ற பகுதிகளுக்கு ஒரு நாளைக்கு 120க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள்  இயக்கப்படுகின்றன. மின்சார ரயில்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த கூட்ட நெரிசலை  பயன்படுத்தி ரயில்களில் தொடர்ந்து செல்போன், நகை போன்றவை திருடு போவதாக ரயில்வே போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.இதையடுத்து ரயில்வே எஸ்.பி மகேஷ்வரன் உத்தரவின் பேரில் தாம்பரம் இன்ஸ்பெக்டர் பத்மபிரியா மேற்பார்வையில் எஸ்.ஐ சரளா தலைமையில்  தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று எஸ்.ஐ சரளா தலைமையில் ரயில்வே போலீசார் தீவிரமாக  கண்காணித்தபோது சந்தேகப்படும் படியாக நின்ற ஒரு பெண்ணை அழைத்து விசாரணை செய்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில்  அளித்துள்ளார்.

இதையடுத்து சந்தேகம் அடைந்த ரயில்வே போலீசார் அவரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில், ரயிலில் கூட்ட  நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் செல்போன், நகை, பர்ஸ் போன்றவற்றை திருடியது தெரியவந்தது. இதையடுத்து மதுரை, அரசடி பகுதியை  சேர்ந்த ஸ்டெல்லா (31) என்ற பெண்ணை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.இதேபோன்று தனிப்படை போலீசார் மகளிர் பெட்டியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 2  பெண்களை அழைத்து விசாரணை செய்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் பதில் அளித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் வைத்திருந்த பையை  சோதனை செய்த போது அதில் ₹4 ஆயிரம் பணம், 25 செல்போன்கள், 10 மணிபர்ஸ், 30 ஏடிஎம் கார்டுகள் இருப்பது தெரியவந்தது. அவர்களை  காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர். விசாரணையில், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுசிலா (61), அவரது பேத்தி ரேகா (21) என்பது தெரியவந்தது.  மேலும் இவர்கள் வண்டலூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி மின்சார ரயில்களில் இதுபோன்று திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது  தெரியவந்தது. இதையடுத்து மின்சார ரயில்களில் தொடர்ந்து செல்போன் திருட்டில் ஈடுபட்ட 3 பெண்களை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

Tags : granddaughter , 25 cell phone, 10 manibars,arrested
× RELATED தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி...