×

சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: தலைமை செயலாளர் தலைமையில் நடந்த கூட்டத்தில் இஸ்லாமிய தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை:சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர் தொடர்ந்து 29 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஏப்ரல்  1ம் தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நடைபெறும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. என்பிஆர் கணக்கெடுப்பு இப்போது  நடத்தப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக இஸ்லாமிய தலைவர்களுடன் தமிழக அரசு சார்பாக தலைமை செயலாளர் சண்முகம் நேற்று  சென்னை, தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை காஜி சலாவுதீன், ஹஜ் அசோசியேசன்  தலைவர் அபுபக்கர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், முகமது அபுபக்கர் எம்எல்ஏ, மனிதநேய மக்கள் கட்சி  தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட 49 இஸ்லாமிய அமைப்பு தலைவர்கள், உள்துறை செயலாளர் பிரபாகர், தமிழக டிஜிபி திரிபாதி, சென்னை  போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாலை 4.15 மணிக்கு கூட்டம் தொடங்கி, மாலை 5.40 மணி வரை நடைபெற்றது..கூட்டம் தொடங்கியதும், தமிழக தலைமை செயலாளர் சண்முகம் வரவேற்று பேசினார். அப்போது, குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக சிறுபான்மை  சமூகத்தினர் இடையே ஏற்பட்டிருக்கும் சந்தேகத்தை களையும் வகையில் சில தகவல்களை விளக்கி கூறினார். இதைத்தொடர்ந்து இஸ்லாமிய  தலைவர்கள் சிலர் கூட்டத்தில் பேச அனுமதிக்கப்பட்டனர். அப்போது பேசிய இஸ்லாமிய தலைவர்கள் அனைவரும், மத்திய அரசு அறிவித்துள்ள சிஏஏ,  என்பிஆர், என்ஆர்சிக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதையே வலியுறுத்தினர்.

இதைத்தொடர்ந்து கூட்டம் முடிந்து வெளியே வந்த மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா நிருபர்களிடம் கூறியதாவது:  தமிழக அரசு  நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பங்கு கொண்டோம். தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் ஒரு  கோரிக்கை வைத்தோம். தமிழக சட்டமன்த்தில் சிஏஏ, என்ஆர்சிக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தேசிய மக்கள் தொகை  பதிவேடு (என்பிஆர்) எந்த சட்டத்தின் அடிப்படையிலும் நடத்தப்படக்கூடிய ஒன்றல்ல. மாறாக, அது குடியுரிமை சட்டத்தினுடைய விதிமுறைகள்  அடிப்படையில்தான் நடத்தப்படுகிறது. எனவே, தேசிய மக்கள் தொகை பதிவேட்டை தமிழகத்தில் நிறுத்தி வைக்கின்றோம் என்று தமிழக  சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு எந்த சட்டசிக்கலும் இல்லை என்பதை கோரிக்கையாக அரசிடம் வைத்துள்ளோம்.அதேபோல சந்தேகத்துக்குரியவர் என்ற எந்த பதிவும் என்பிஆரின்போது செய்யப்பட மாட்டாது என்று மத்திய உள்துறை அமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார்  என்று தமிழக தலைமை செயலாளர் கூறினார். அப்படி அவர் சொல்வது உண்மையாக இருந்தால், குடியுரிமை திருத்த சட்ட விதிமுறைகளில்  என்பிஆரை பற்றி சொல்லப்பட்டிருக்கின்ற அதாவது என்பிஆரில் இருந்தும் என்ஆர்சியில் இருந்தும் சிலதை நீக்க வேண்டும். இதையும் சட்டமன்றத்தில்  நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். ஒட்டுமொத்தமாக சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர்க்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம்  நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.

முதல்வரின் கவனத்துக்கு எங்களது மனுவை, உணர்வுகளை எடுத்துரைக்கின்றோம் என்று அரசு தரப்பில் தலைமை செயலாளரும், காவல் துறை உயர்  அதிகாரிகளும் தெரிவித்தார்கள். கோரிக்கை மனு குறித்து அரசு தரப்பில் இருந்து உருப்படியான தகவல் தருகிறார்கள் என்பதை கவனத்தில் எடுத்துக்  கொண்டு, கூட்டமைப்பு சார்பாக நிர்வாகிகளின் கூட்டம் நடத்தப்பட்டு, இந்த போராட்டம் குறித்து அடுத்த அறிவிப்பை வெளியிடுவோம். இந்த  போராட்டம், எந்த அரசியல் கட்சிகளின் தூண்டுதலால் நடத்தப்பட்ட போராட்டங்கள் அல்ல. மாறாக, தன்னிச்சையாக மக்கள் நடத்தும்  போராட்டங்களாக இருக்கின்றது. இந்த அடிப்படையில், போராட்டக்காரர்களின் உணர்வுகளுக்கு அரசு மதிப்பளிக்க வேண்டும். எங்கள் கருத்தை அரசு  உயர் அதிகாரிகள் முதல்வரிடம் சொல்வார்கள். முதல்வர் என்ன சொல்கிறார் என்பதை அவர் அளிக்கும் பதிலை பொறுத்துதான் போராட்டம்  தொடருமா, நிறுத்தப்படுமா என்பது தெரியும்.



Tags : Against CAA ,NPR ,Leaders ,Meeting ,NRC ,Chief Secretary ,Tamil Nadu Legislative Assembly ,Tamil Nadu , Against ,CAA, NPR, NRC, meeting held
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...