×

20 லட்சம் கடனை கேட்ட அமெரிக்க முதியவர் கொலை சிபிசிஐடி விசாரணை கோரி சகோதரி வழக்கு: காஞ்சி எஸ்பி கண்காணிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கடனாக கொடுத்த 20 லட்சத்தை திரும்ப கேட்ட அமெரிக்க நாட்டு  முதியவரை கொலை செய்த வழக்கை சிபிசிஐடி விசாரணை  நடத்தக்கோரிய வழக்கில் விசாரணையை காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி கண்காணிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில் திருவண்ணாமலையை சேர்ந்த கேத்தரின் ஜீன் ராபர்ட் (62) தாக்கல் ெசய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:நானும் எனது அண்ணன் ஜான் உட்ரோ ராபர்ட்டும் (72) கடந்த 2010ல் திருவண்ணாமலைக்கு வந்தோம். அங்குள்ள அக்கனிசேஷ்திரத்தில் எங்களது  ஆத்மாவை தூய்மைப்படுத்துவதற்காக திருவண்ணாமலையில் தங்கியிருந்தோம்.இந்நிலையில் எங்களுக்கு இந்தியாவில் தங்குவதற்கு நிரந்தர விசா வாங்கித்தருவதாக திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில்  வேலை செய்த விக்னேஷ் என்பவர் எனது அண்ணனிடம் கூறினார். அதற்காக எனது அண்ணனிடம் இருந்து ₹20 லட்சத்தை வாங்கிக்கொண்டார்.ஆனால், அவர் உறுதியளித்தபடி விசா வாங்கித்தரவில்லை. அதற்கு மாறாக விக்னேஷ் துபாய் சென்றுவிட்டார். தொடர்ந்து எனது அண்ணன்  விக்னேசிடம் பணத்தை கேட்டுள்ளார். ஆனால், விக்னேஷ் தரவில்லை. இந்நிலையில், 2019 ஜூன் 19ம் தேதி விக்னேஷ் துபாயில் இருந்து  திருவண்ணாமலைக்கு வந்துள்ளார். அவரிடம் எனது வக்கீல் கிஷோர்குமார் மூலம் பணத்தை கேட்டோம். அவரிடம் அவசரமாக சென்னை செல்வதாகவும் வந்தவுடன் சந்திப்பதாகவும்  விக்னேஷ் கூறியுள்ளார். மறுநாள் எனது அண்ணனை மதுரவாயலுக்கு காரில் அழைத்து சென்றுள்ளார். பின்னர் தன்னை திருவண்ணாமலைக்கு  அழைத்துச் செல்லுமாறு எனது அண்ணன் கூறியுள்ளார். ஆனால், விக்னேஷ் எனது அண்ணனை வேலூர் சாலைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு  ஒரு ஓட்டலில் எனது அண்ணனுக்கு தண்ணீர் வாங்கிகொடுத்ததுடன் ஒரு நயிலான் கயிறையும் வாங்கியுள்ளார்.

பின்னர் காரை சென்னை நோக்கிய திருப்பிய விக்னேஷ் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தைப்பார்த்து அங்கு காரை நிறுத்தியுள்ளார். அங்கு எனது  அண்ணன் சிறுநீர் கழிக்க சென்றுள்ளார். அப்போது, விக்னேஷ் எனது அண்ணனின் கழுத்தில் நயிலான் கயிற்றால் இறுக்கி கொலை செய்துள்ளார்.  பிரேத பரிசோதனை அடிப்படையில் பார்த்தால் தனியாக விக்னேஷ் மட்டும் இந்த கொலையை செய்திருக்க முடியாது. அவருடன் சிலர் சேர்ந்துதான்  இந்த கொலையை செய்திருக்க முடியும். எனது அண்ணனின் மரணத்தில் சந்தேகம் இருந்துள்ளது.இந்த வழக்கை பாலுசெட்டி சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். எனது அண்ணன் கொலை செய்யப்பட்ட பின்னரும் அவரது ஏடிஎம்  கார்டு மூலம் பெரும்தொகை எடுக்கப்பட்டுள்ளது. இதை விசாரணை அதிகாரி கவனிக்காமல் தவறான கோணத்தில் விசாரணையை நடத்தி வருகிறார்.  தடயவியல் பரிசோதனை அறிக்கை வராமல் பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் விசாரணையை முடிக்க திட்டமிட்டுள்ளார். எனவே,  எனது அண்ணன் கொலை வழக்கை சிபிசிஐடி அல்லது வேறு தனி விசாரணை அமைப்பு விசாரிக்குமாறு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் சி.கனகராஜ் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதி, இந்த  கொலை வழக்கை விசாரிக்கும் பாலுசெட்டி சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டரின் விசாரணையை காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி கண்காணிக்க வேண்டும்.  இந்த வழக்கு விசாரணை குறித்து வரும் ஏப்ரல் 15ம் தேதி இன்ஸ்பெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Tags : court ,US ,murder ,sister ,Icorte ,investigation ,CBCID ,Kanchi ,SP , US elderly ,man, murder,investigation
× RELATED திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு...