×

கொரோனா பீதியால் வெளிநாடுகளில் இருந்து திருவனந்தபுரம் வழியாக நாடு திரும்புபவரை புறக்கணிக்கும் உறவினர், நண்பர்கள்

நாகர்கோவில்: கொரோனா பீதியால் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை உறவினர்கள், நண்பர்கள் புறக்கணிக்கின்றனர்.   சுகாதாரத்துறைக்கு போன் செய்து, வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை பரிசோதனை செய்ய வற்புறுத்தி வருகிறார்கள். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் இந்தியாவிலும் பரவி உள்ளது. இதுவரை டெல்லி, பெங்களூருவில் 2 பேர் பலியாகி உள்ளனர்.  தமிழகத்தை பொறுத்தவரை காஞ்சிபுரத்தை சேர்ந்தவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. அவரும் குணமாகிவிட்டார். அண்டைமாநிலமான கேரளாவில்  19 பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இது, குமரி மாவட்ட எல்லை என்பதால் குமரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனர். குமரி  - கேரள எல்லையான கொல்லங்கோடு, சூழால் பகுதிகளில் சுகாதாரத்துறை சார்பில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்களில் கிருமி  நாசினி மருந்து தெளிக்கப்படுகிறது. மேலும் சளி, இருமல் இருப்பவர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் பரிசோதனைக்காக அனுப்பி  வைக்கப்படுகிறார்கள். ஆனால், குமரி மாவட்டத்தில் இருந்து அதிகம் பேர், சவூதி, ஈரான் உள்ளிட்ட வெளிநாட்டில் உள்ளனர். இவர்கள்,  திருவனந்தபுரம் விமான நிலையம்  வழியாகதான் குமரி வருகிறார்கள்.

 இவ்வாறு வருபவர்களின் முகவரிகள் குறிக்கப்பட்டு, அந்தந்த மாவட்ட சுகாதார துறைக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. அவர்களும் விரைந்து சென்று  வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு பரிசோதனை செய்கிறார்கள். அவர்களின் வீடுகளில் உள்ளவர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். தற்போது கொரோனா பீதி காரணமாக சொந்த ஊர் திரும்பியவர்களை சந்திக்க உறவினர்கள், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் அச்சப்படுகிறார்கள். கடந்த  ஒரு மாதத்துக்கு முன் வந்தவர்களை கூட சந்தித்து பேசி கை குலுக்க மறுக்கிறார்கள். இதனால் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் வீடுகளில்  முடங்கி கிடக்கின்றனர். பொது நிகழ்ச்சிகளுக்கு இவர்கள் சென்றாலும் உறவினர்கள் சிலர் சந்திப்பதை தவிர்த்துவிட்டு செல்வதாக வேதனையுடன்  கூறுகிறார்கள்.
சிலர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து, தங்கள் வீடு அருேக உள்ளவர் வெளிநாட்டில் இருந்து கேரளா வழியாக வந்துள்ளார்.  அவரை பரிசோதனை நடத்த வேண்டும் என்கிறார்கள். இதுபோன்ற தொந்தரவுகளால் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் மனவேதனை  அடைந்துள்ளனர். இதைதடுக்கும் விதமாக, பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களில் சுகாதாரத்துறை விழிப்புணர்வு நோட்டீசுகள் ஒட்டி உள்ளன.

கொரோனா வார்டில் தாய்,மகள் அனுமதி
கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டில் நேற்று மதியம் இளம்பெண் மற்றும் அவரது  2 வயது மகள் ஆகியோர் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சளி, இருமல் அதிகமாக இருந்ததால், அதன் மாதிரிகள் பரிசோதனைக்காக தேனியில்  உள்ள மருத்துவக்கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். மஸ்கட்டில் இருந்து அவர்கள் ஊர் திரும்பியவர்கள் என்பதால் பரிசோதனை முடிவு  வரும் வரை சிறப்பு வார்டில் இருப்பார்கள் என்று டாக்டர் கூறினர்.

Tags : Relatives ,friends ,corona panic ,Thiruvananthapuram ,panic ,Corona ,country , Corona panic ,friends ,neglect ,country
× RELATED துபாயில் 2 ஆண்டுகளில் பெய்ய வேண்டிய...