×

கொரோனா பீதியால் இயற்கை ‘ஏசியில்’ பணியாற்றும் இளைஞர் கூட்டம் மரத்தடியில் நடக்குது ஐடி கம்பெனி: வழிகாட்டுது தேனி மாவட்டம்

உத்தமபாளையம்:  கொரோனா பீதியால் பெங்களூரூ ஐடி கம்பெனியில் பணியாற்றும் ஊழியர்கள், தேனி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில்  மரத்தடியிலும், தோட்டத்திலும் பணியாற்றி வருகின்றனர். தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா அனுமந்தன்பட்டியை சேர்ந்தவர் ராஜ். விவசாயி. இவரது மகன் அரவிந்த் (30). இன்ஜினியரான  பெங்களூரூவில் உள்ள ஐடி கம்பெனியான வுமோனிக் டேட்டா லேப் நிறுவனத்தில் சிஇஓவாக உள்ளார். இவரது தலைமையில்  20 ஊழியர்கள்  பணியாற்றி வருகின்றனர். தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், ஐடி கம்பெனி ஊழியர்களை பணிக்கு வர வேண்டாம். வீட்டில்  இருந்தபடியே பணிகளை செய்து அனுப்பி வைக்கும்படி நிறுவனங்கள் கூறி விட்டன.இதையடுத்து தனது குழுவில் உள்ள 20 பேருடன் அரவிந்த், பெங்களூரூவில் இருந்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அனுமந்தன்பட்டிக்கு வந்தார்.  இவர்கள் அரவிந்தின் பண்ணை வீட்டில் தங்கி உள்ளனர். இங்குள்ள இயற்கைச்சூழல், மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தின் இதமான காற்று,  பச்சைப்பசேலென விளைந்து நிற்கும் விளைநிலங்களை ரசித்தவாறே இக்குழு பணியாற்றி வருகிறது. இதில் இலங்கையை சேர்ந்த கனிஸ்கன், இந்திய  வம்சாவளியை சேர்ந்த நைஜீரியாவில் வசித்து வரும் ஆண்ட்ரியா பெர்னாண்டஸ் மற்றும் கொல்கத்தா, ம.பி மாநிலம், தமிழகத்தில் வேலூர் உள்ளிட்ட  பகுதிகளில் இருந்து வந்த இளைஞர்கள் லேப்டாப் சகிதம் இங்கு பணியாற்றி வருகின்றனர். ஆன்ட்ராய்ட் ஆப் மூலம் தகவல்களை, சீனா, பிரிட்டன்,  நெதர்லாந்து, கனடா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்பி வருகின்றனர்.

எழில் கொஞ்சும் தேனி மாவட்ட சூழலில், இயற்கை தந்த ‘ஏசி’ காற்றில்  பணியாற்றுவது புதிய அனுபவமாக உள்ளதாக இக்குழுவினர் தெரிவித்தனர்.இதுகுறித்து அரவிந்த் கூறியதாவது, ‘‘எங்களது நிறுவனத்தின் பணிகள் தடையில்லாமல் நடக்கிறது. கொரோனா உலகையே மிரட்டி வருகிறது.  கூட்டங்கள் கூடக்கூடாது, வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுடன் கைகுலுக்க கூடாது. இருமினால் பிரச்னை, தும்மினால் பயம் என ஐ.டி  நிறுவனங்கள் கடந்த சில வாரங்களாகவே தள்ளாடி வருகின்றன. எங்களது நிறுவனத்திற்காக பண்ணை வீடு, தோட்டம், மரத்தடி நிழல்,  மலையடிவாரம் மற்றும் பசுமையான சூழலில் இருந்தபடியே பணியாற்றுவது, குழுவினர் அனைவருக்கும் பிடித்துள்ளது. அவர்கள் ‘இன்னும் 15 நாட்கள்  இங்கேயே தங்கி பணியாற்றலாம்’ என்கின்றனர்’’ என்றார்.



Tags : Guiding Theni District ,IT Company ,Corona Panic Youth Meeting In Natural 'AC' Walking Tree ,group ,AC , Corona Panic, natural AC, IT Company,
× RELATED மாற்றுத்திறன் பெண்ணிடம் சில்மிஷம் ஐடி நிறுவன ஊழியர் கைது