×

கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மக்களிடம் கொள்ளையடிக்கிறது அரசு: காங்கிரஸ் கடும் கண்டனம்

புதுடெல்லி: பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பலனை வழங்காமல், மக்கள் பணத்தை மோடி-அமித்ஷா அரசு கொள்ளையடிக்கிறது என காங்கிரஸ்  விமர்சித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வெகுவாக குறைந்து விட்டது. இதற்கு ஏற்றபடி பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட வேண்டும்.  ஆனால், அவற்றின் விலையை குறைக்காத வகையில் பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி மற்றும் சாலைவரி சேர்த்து லிட்டருக்கு 3  உயர்த்திவிட்டது. இதன் மூலம் பெட்ரோல், டீசல் விலை குறையாத அளவுக்கு எண்ணெய் நிறுவனங்கள் விலையை சரிசெய்து கொள்ளும். இதனால்  மத்திய அரசுக்கு கூடுதலாக ₹39 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும். பெட்ரோலியப் பொருட்கள் விலையை குறைக்காமல், வரி உயரத்தப்பட்டதற்கு  காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து காங். செய்தி தொடர்பாளர் அஜய் மாகென் கூறியதாவது: கடந்த 2014-15ம் ஆண்டில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது அதன்  பலனை, பா.ஜ அரசு மக்களுக்கு அளிக்கவில்லை. அதையே இப்போது மீண்டும் செய்துள்ளது. பெட்ரோல், டீசலுக்கான  வரிகள் லிட்டருக்கு ₹3  உயர்த்தப்பட்டதன் மூலம் அரசுக்கு 39 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும். மோடி அரசு கடந்த 2014ம் ஆண்டு பதவி ஏற்றபோது  பெட்ரோலுக்கான வரி லிட்டருக்கு ₹9.48 ஆக இருந்தது. தற்போது இந்த வரி ₹22.98 ஆக உயர்ந்துள்ளது. ₹3.56 ஆக இருந்த டீசல் வரி தற்போது  18.83 ஆக அதிகரித்துள்ளது.

பா.ஜ ஆட்சிக்கு வந்தது முதல் பெட்ரோலியப் பொருட்களுக்கான கலால் வரி பலமுறை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அதிகமான வரிவிதிப்பின் மூலம்  மக்கள் பணத்தை மோடி-அமித்ஷா அரசு கொள்ளையடிக்கிறது. கடந்த 6 ஆண்டுகளில் கச்சா எண்ணெய் விலை 50 சதவீதத்துக்கும் கீழ் குறைந்து  விட்டது. ஆனாலும், பா.ஜ அரசின் மக்கள்விரோத கொள்கைகளால் பெட்ரோலியப் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. சர்வதேச சந்தையில்  கச்சா எண்ணெய் விலை குறைப்பின் பலன் மக்களுக்கு சென்றடைய வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுக்கிறது. பெட்ரோல், டீசல், எல்பிஜி  காஸ் ஆகியவற்றின் விலை 35 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை குறைக்கப்பட வேண்டும்.  கடந்த 2014ம் ஆண்டு முதல் பெட்ரோலியப்  பொருட்களுக்கு உயர்த்தப்பட்ட கலால் வரி வாபஸ் பெறப்பட்டு, பெட்ரோலியப் பொருட்கள் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என  காங்கிரஸ் கோரிக்கை விடுக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தடுப்பு நடவடிக்கை; அரசு தயார் நிலையில் இல்லை
இந்தியாவில் ஏராளமான தெய்வங்கள் இருப்பதால் கொரோனா வைரசால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று பாஜ மூத்த தலைவர் கைலாஷ் விஜய்  வர்கியா நேற்று முன்தினம் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், டெல்லியில் நேற்று செய்தியாளர்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கான்  அளித்த பேட்டியில், `‘ராகுல் காந்தி கூறியதுபோல, கொரோனாவை தடுக்க அரசு முயற்சிகள் எடுத்ததாக தெரியவில்லை. அப்படி அரசு தயாராக  இருந்தால், தெய்வங்களும் துணை நிற்கும். அப்படி இல்லையென்றால், யாரும் உதவிக்கு வர மாட்டார்கள். கொரோனாவை எதிர்கொள்ள அரசு தயார்  நிலையில் இல்லை என்பது வேதனை அளிக்கிறது. ஒருவேளை நாளையே இந்த வைரஸ் பரவினால் கூட அரசு தயாராக இல்லை’’ என்று கூறினார்.  இதனிடையே, மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி இது பற்றி குறிப்பிடுகையில், ``கொரோனாவைத் தடுக்க அரசு முயற்சிகள்  எடுத்த குறித்து பிரதமர் மோடி மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டார்.

Tags : Congress , oil prices ,low, Petrol, diesel, Congress condemns
× RELATED நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார்...