×

அரசியல்வாதிகளுக்கு அரிச்சுவடியாக திகழ்ந்தவர்: கட்சி தலைவர்கள் புகழாரம்

சென்னை: கொண்ட கொள்கையில், லட்சியத்தில் இறுதிவரை உறுதியாக இருந்தவர். அரசியல்வாதிகளுக்கு அரிச்சுவடியாக திகழ்ந்தவர் என பேராசிரியர் அன்பழகனுக்கு கட்சித் தலைவர்கள் புகழாரம் சூட்டினர்.  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:நாகரீகமும், பெருந்தன்மையும், அடக்கமும் எளிமையும்கொண்ட தலைவராக வாழ்ந்தவர் பேராசிரியர். தமிழ் சமூகத்தில் சுயமரியாதை, தன்மானத்துக்கு வித்திட்டவர்களில் பேராசிரியரும் ஒருவர். குடியுரிமை திருத்த சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று திரும்ப திரும்ப சொல்கிறார்கள். இவ்வாறு அவர்கள் சொல்வதற்கான வாய்ப்பு கூட நாம் பெரிய போராட்டம், பரப்புரை நடத்திய பிறகு தான் கிடைத்துள்ளது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: திருவாரூரில் கலைஞரை சந்திக்கிறார் பேராசிரியர் அன்பழகன். இப்படித்தான் இயக்கத்திற்கு வருகிறார். குடந்தையில் திராவிடர் மாணவர் மாநாட்டில் ஒருமணி நேரம் அவர் ஆற்றிய உரை அண்ணாவிடம் சென்று சேர்கிறது. திராவிட நாடு இதழில் இரண்டு வாரம் முகப்பு பக்கத்தில் அண்ணா கைப்பட பாராட்டுரை எழுதி, பேராசிரியருடைய உரை வெளியானது. ஒருமுறை கோவை கூட்டத்தில், தமிழ்தாய் எங்கே இருக்கிறாள் என்ற கேள்வி பேராசிரியரிடம் வந்தது. உடனே அவர், ‘என் உள்ளத்தில் இருக்கிறார்’ என்று பதில் தந்தார். விளங்கவில்லை என்றால் பாரத மாதாவின் வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்கு சென்று கேட்டுக்கொள்ளுங்கள் என்றும் கூறினார்.கலைஞரும், பேராசிரியரும் லட்சோப லட்சம் தொண்டர்களை வாழையடி, வாழையாக வளர்ந்து வருகிற திராவிட இயக்கத்தை முன்னெடுத்து செல்லுவதற்குரிய தலைவரை நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்திட்டு போயிருக்கிறார்கள்.

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:  திமுக எண்ணற்ற சோதனைகளை சந்தித்தபோது கலைஞரோடு உற்ற துணையாக இருந்து இந்த இயக்கத்தை வழி நடத்தியவர் பேராசிரியர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை பாராட்டுகிறேன்.
பாஜ மத்தியில் ஆட்சி பொறுப்பேற்று ஜனநாயக உரிமை, பன்முக தன்மை, அரசியல் சாசனம், மாநில உரிமைகள் சமாதி கட்ட புறப்பட்டபோது பாஜ விட்ட சவாலை தமிழகத்தில் சமாளிக்க தயார் என்கிற முறையில் நாடாளுமன்றத்தில் ஒரு தொகுதியை தவிர அனைத்து தொகுதிகளிலும் வீழ்த்தி காட்டினார்.பேராசிரியர் இழப்பால் தமிழகமே வருந்திக் கொண்டு இருக்கிறது. அரசியல்வாதிகளுக்கு அரிச்சுவடியாக திகழ்ந்தவர் அவர்.  இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்:ஒரே இயக்கத்தில் தான் ஏற்றுக்கொண்ட கொள்கையில், லட்சியத்தில் உறுதியாக இருந்து அதை இறுதிவரை நிலைநாட்டினார் பேராசிரியர். இது பெருமைக்குரிய விஷயம். தமிழகத்தில் திமுகவை பலவீனப்படுத்தினால் அதற்கு தலைமை தாங்கி வழிநடத்துகிற மு.க.ஸ்டாலினை பலவீனப்படுத்தினால் தங்களை பலப்படுத்திக்கொள்ளலாம் என்று கருதுபவர்கள் சாதாரணவர்கள் அல்ல. அவர்கள் பாசிஸ்டுகள். எனவே, பேராசிரியர் படத்திறப்பு விழாவில் பாசிசத்திற்கு எதிராக செயல்படுவோம் என்று சபதமேற்போம்.விசிக தலைவர் திருமாவளவன்:கலைஞர் மற்றும் பேராசிரியர், பெரியாரின் பிள்ளைகளாக இருந்து தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் பாதுகாப்பு அரண்களாக விளங்கியவர்கள். பேராசிரியரின் இழப்பு திமுகவிற்கு மட்டும் இல்லை ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கே ஏற்பட்ட இழப்பாகும். அனைத்து மாநிலங்களுக்கும் தமிழகம் வழிகாட்டியாக திகழ்ந்து வருகிறது. இனியும் தமிழ்நாடு வழிகாட்டியாக திகழ மு.க.ஸ்டாலினுக்கு நாங்கள் உற்ற துணையாக இருப்போம்.



Tags : politicians ,party leaders , Rarely ,politicians, praise , leaders
× RELATED ஊழல் வழக்கில் சிக்கிய பின் பாஜகவால் ‘புனிதம்’ அடைந்த பிரபலங்கள்