×

இந்தியாவில் 85 பேருக்கு கொரோனா பாதிப்பு: தொற்று நோய் பட்டியலில் சேர்ந்தது கொரோனா வைரஸ்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: கொரோனா வைரஸை தொற்று நோய் என அறிவித்து அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டது. சீனாவில் இருந்து தொடங்கிய கோவிட்-19 கொரோனா வைரஸ் உலக முழுவதும் 127 நாடுகளுக்கு பரவி இருக்கிறது. இதுவரை  லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச அளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 5,000 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 85 ஆக  அதிகரித்துள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த 76 வயது முதியவர் உட்பட 2 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது மேலும் பொதுமக்கள் மத்தியில் பீதியை அதிகரித்துள்ளது. இதனால் பல மாநிலங்களிலும் கடுமையான முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. உபி, பீகார், ஒடிசா, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள், தியேட்டர், மால்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பை பேரிடராக கருதி மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா வைரஸ்   தாக்குதல் மூலம் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ செலவை மாநில அரசே ஏற்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், தமிழக பொது சுகாதாரத்துறையின் 1936-ம் ஆண்டு சட்டத்தின் கீழ், நோய்களுக்கான பட்டியலில் கொரானா சேர்க்கப்பட்டு உள்ளது. தொற்று நோய்கள் பட்டியலில் கொரோனா வைரஸை சேர்த்து  தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக  அறிவித்து அரசிதழில் வெளியிட்டுள்ளது. இதனை, செய்திக்குறிப்பு ஒன்றின் மூலம் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

பத்ம விருது விழா ஒத்திவைப்பு:

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு துறைகளில் சிறப்பானவர்களுக்கு குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் பத்ம விருது வழங்கும் விழாவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 3-ம் தேதி நடைபெறவிருந்த விழா  ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எப்போது நடைபெறும் என்று பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : India , Coronavirus infects 85 people in India
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...