×

கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரை 3.80 கோடியில் சீரமைப்பு: கோடை சீசனுக்குள் பணிகளை முடிக்க திட்டம்

கன்னியாகுமரி: இந்தியாவின் தென் எல்லையாகவும், புனித யாத்ரீகர்களின் புண்ணிய பூமியாகவும் விளங்கும் கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். முக்கடலும் சங்கமிக்கும் இந்த பகுதியில் புனிதநீராடி வழிபட்டால் பாவங்கள் விலகும் என்பது நம்பிக்கை. மேலும் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் போன்றவற்றை ஒரே இடத்தில் காணும் வகையில் அமைந்துள்ள சுற்றுலாதலமாக விளங்குவதால் தினமும் காலை, மாலை வேளைகளில் திரிவேணி சங்கமத்தில் அமர்ந்து  கடல் அழகை ரசிப்பதற்காகவும், காற்று வாங்குவதற்கும் இங்கு வருகின்றனர். இதனால் கன்னியாகுமரியை நாட்டின் முக்கிய சுற்றுலா பகுதியாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் மத்திய அரசின் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 3.80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இதனை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டத்தில் முக்கடல் சங்கமத்தில் கடலுக்கு ஆரத்தி எடுத்து வழிபடும் வகையிலும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்க வசதியாக படிக்கட்டுகள் அமைத்தல் சூரிய உதயம் பார்க்கும் சுற்றுலா பயணிகள் அமர்ந்திருக்க அலங்கார தரை ஓடுகள் அமைத்தல் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தல் போன்ற பல்வேறு திட்டப் பணிகள் நடைபெறுகின்றன.

இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு வடநேரே  வருகிற கோடை சுற்றுலா சீசனுக்குள் முடிக்க அதிகாரிகளுக்கும் ஒப்பந்தகாரருக்கும் உத்தரவிட்டிருந்தார். அதன்படி கடலினுள் படிக்கட்டுகள் அமைக்கும் இடங்களை சுற்றி மணல் மூடைகள் அடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றுவந்தன. இரவு நேரங்களில் கடல் அலை அதிகமாக காணப்பட்டதால் இரவில் மணல் மூடைகளுக்கு மேல் அலை அடித்து மூடைகள் கடலில் அடித்து செல்லப்பட்டுவந்தன. கடலுக்குள் படிக்கட்டுக்கள் அமைக்க மணல் மூடைகள் அமைத்து பணிகள் நடைபெற்று வந்தாலும் இப்பணிகள் நிறைவேற்றுவதில் ஒப்பந்தகாரருக்கும் அரசு அதிகாரிகளுக்கும் பெரும் சவாலாக இருந்து வந்தது. இந்நிலையில்  காங்கிரீட்பணிகளை  முடித்து தற்போது காங்கிரீட் படிகளின் மேல் கருங்கற்களால் ஆன படிக்கட்டுகள் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இன்னிலையில் அடுத்த மாதம் கோடை  சீசனுக்குள் பணிகளை முடிக்க கன்னியாகுமரி பேரூராட்சி நிர்வாகம் திட்டமிட்டு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.


Tags : Kanyakumari Tripod Sangamam Beach ,summer season ,Triangular Sangamam Beach ,Kanyakumari , Kanyakumari, Triangular Sangamam Beach, 3.80 crores, renovation
× RELATED வலுக்கும் எதிர்ப்பு!: இ-பாஸ் முறையை...