×

அமராவதி-குதிரையாறு சந்திக்கும் இடத்தில் தடுப்பணை கட்டினால் சுற்றுலா தலமாக மாறும் கொழுமம்: பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறுமா?

உடுமலை: கொழுமத்தில் அமராவதி ஆறு மற்றும் குதிரையாறு சந்திக்கும்  இடத்தில் தடுப்பணை கட்டினால், விவசாயிகள் பயன்பெறுவதோடு, கொடிவேரியைப் போல  கொழுமம் சுற்றுலா தலமாக மாற வாய்ப்புள்ளது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். திருப்பூர்  மாவட்ட எல்லையான மடத்துக்குளம் அடுத்த கொழுமம் பகுதியில் அமராவதி ஆறு  செல்கிறது. இதை நம்பி இப்பகுதியில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் விவசாயம்  நடக்கிறது. மேலும், 200க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினரும்  வசிக்கின்றனர். இவர்கள் அமராவதி ஆற்றில் மீன்பிடித்து தங்கள் வாழ்க்கையை  நடத்துகின்றனர்.

கொழுமம் பகுதியில் நூற்றாண்டுகள் பழமையான கோட்டை  மாரியம்மன் கோயில், நடராஜர் கோயில், காசி விஸ்வநாதர் கோயில், கரிவரதராஜ  பெருமாள் கோயில் ஆகியவை உள்ளன. இந்த கோயில்களுக்கு விசேஷ  தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். திருவிழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. அமாவாசை நாட்களில் தங்கள் முன்னோருக்கு திதி கொடுக்க இங்கு ஏராளமான பொதுமக்கள் வருகின்றனர். அவ்வாறு  வருபவர்கள் அமராவதி ஆற்றில் குளித்து செல்கின்றனர். கம்பம் நடுதல்,  தீர்த்தவாரி எடுத்தல் போன்ற நிகழ்வுகளுக்கு அமராவதி ஆற்று தண்ணீரை நம்பி  உள்ளனர். ஆனால் கோடை காலங்களில் அமராவதி ஆறு வறண்டு பாறைகளாக காட்சி  அளிக்கிறது. இதனால் தண்ணீர் கிடைக்காமல் சிரமப்படும் நிலை உள்ளது.  திருவிழாக்காலங்களில் அரசு துறைகள் சார்பில் மாற்று ஏற்பாடுகள்  செய்யப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகாவில் உள்ள குதிரையாறு  அணையில் இருந்து, மழைக்காலங்களில் திறக்கப்படும் உபரி நீர் கொழுமத்தில்  அமராவதி ஆற்றில் கலக்கிறது. அமராவதியிலும், குதிரையாறிலும்  மழைக்காலங்களில் அணை நிரம்பி உபரி நீர் திறக்கப்படும்போது, பல ஆயிரம் கனஅடி  நீர் வீணாக காவிரியில் கலந்து கடலுக்கு செல்கிறது. இதை தடுக்கும்  வகையில், கொழுமத்தில் அமராவதி மற்றும் குதிரையாறு சந்திக்கும் இடத்தில்  தடுப்பணை கட்டினால் பெருமளவு தண்ணீரை தேக்க முடியும் என பொதுமக்கள்  கூறுகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘இங்கு  தடுப்பணை கட்ட வேண்டும் என பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.  தடுப்பணை கட்டி தண்ணீர் தேக்கினால் விவசாயிகளுக்கு மட்டுமின்றி, கோடை  காலத்திலும் தண்ணீர் தேங்கி நிலத்தடி நீர்மட்டம் உயரும். கோயில்களுக்கு  வரும் பக்தர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் ஈரோடு மாவட்டம்  கொடிவேரியில் கீழ்பவானி ஆற்றில் தடுப்பணை கட்டியதால், அது சுற்றுலா தலமாக  மாறியுள்ளது. ஏராளமான சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து செல்கின்றனர்.  அதேபோல கொழுமம் பகுதியில் சுற்றுலா தலமாக மாறும். தென் மாவட்டங்களில்  இருந்து வருபவர்கள், கொழுமம் வழியாக, திருமூர்த்திமலை, அமராவதி மற்றும் வால்பாறை உள்ளிட்ட இடங்களுக்கு செல்கின்றனர். எனவே சுற்றுலா பயணிகளை  எளிதில் கவர முடியும். மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொழுமம் வருபவர்கள், இந்த ஊரின் பெருமையை தெரிந்துகொள்ள உறுதுணையாக இருக்கும்.
எனவே, இங்கு கொடிவேரியை போன்று தடுப்பணை கட்ட மாவட்ட நிர்வாகம், தமிழக அரசுக்கு  பரிந்துரை செய்ய வேண்டும். மாவட்ட அமைச்சரும், மக்கள் பிரதிநிதிகளும் இதை  வலியுறுத்த வேண்டும். என்றனர்.

Tags : junction ,tourist attraction ,Amaravathi-Kuthiraiyar ,Udumalai , Udumalai, block, fat, demand
× RELATED அருமனை அருகே பள்ளியில் புகுந்து அட்டகாசம் செய்த குரங்கு சிக்கியது