×

கால்வாய் பாலத்தில் தடுப்புச்சுவர் இல்லை: சிவகாசியில் விபத்து அபாயம்

சிவகாசி: சிவகாசி பெரியகுளம் கண்மாய் நீர்வரத்து கால்வாய் பாலத்தில் தடுப்புச்சுவர் இல்லாததால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது. சிவகாசியிலிருந்து விளாம்பட்டி வழியாக ஆலங்குளம், ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதி கிராமங்களுக்கு அரசு பஸ்கள் அதிக அளவில் இயக்கப்படுகிறது. இந்த சாலையில் பட்டாசு ஆலை, பள்ளிகள் உள்ளன. இதனால் டூவீலரில் இந்த சாலையில் ஏராளமானோர் பயணித்து வருகின்றனர். அத்துடன் காலை, மாலை பள்ளி நேரங்களில் பள்ளி வாகனங்களும் அதிகம் செல்கிறது. இங்கு சிவகாசி பெரியகுளம் கண்மாய் கரையை ஓட்டி விளாம்பட்டி சாலை செல்கிறது. கிச்சநாயக்கன்பட்டி, சித்துராஜபுரம், போத்தி ரெட்டியபட்டி பகுதி மழைநீர் பெரியகுளம் கண்மாய் வந்தடையும். இதற்காக பெரியகுளம் அருகே விளாம்பட்டி சாலையை ஓட்டி நீர்வரத்து கால்வாயும் அமைந்துள்ளது. சாலையின் இரு புறமும் கண்மாய் மற்றும் நீர்வரத்து கால்வாய் உள்ளதால் இது ஆபத்தான சாலையாக உள்ளது.

ஆனால், நெடுஞ்சாலை துறையினர் இங்கு எந்த எச்சரிக்கை பலகையும் இப்பகுதியில் வைக்கப்படவில்லை. மேலும் சாலையின் இரண்டு புறமும் தடுப்புச்சுவர் இல்லை. இரவு நேரத்தில் இந்த சாலையை வாகனங்கள் கடந்து செல்லும் போது எதிரே வாகனங்கள் வந்தால் விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது. பள்ளி மாணவர்கள் சாலையில் வாகனங்களை விலகி செல்லும் போது நிலை தடுமாறி விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இரவில் வாகனங்கள் அதிக ஒளியுடன் வருவதால் டூவீலரில் செல்வோர் தவறி கண்மாய் வரத்து கால்வாயில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். பாலத்தில் இருபுறம் தடுப்பு சுவர்களோ, அல்லது தடுப்பு கம்பியோ அமைக்கவில்லை. நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அலட்சியமாக உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே, கண்மாய பகுதியில் தடுப்புச்சுவரோ, தடுப்பு கம்பியோ அமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முன்வரவேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : canal bridge ,Sivakasi Canal ,sivakasi , Canal, barricade, sivakasi, danger
× RELATED சிவகாசி புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு