×

மானாமதுரை வட்டாரத்தில் காடுகளுக்கு தீவைக்கும் வேட்டை கும்பல்: உணவின்றி கால்நடைகள் தவிப்பு

மானாமதுரை: முயல், கவுதாரி வேட்டையில் ஈடுபடுவோர் மானாமதுரை அருகே அரிமண்டபம் தீயனூர் இடையே கருவேலமரங்களை ஒட்டிய காடுகளுக்கு  தீவைப்பதால் அங்குள்ள புற்கள் கருகிபோய்உள்ளது. இதனால் கால்நடைகள் போதிய உணவின்றி தவிக்கின்றன. மானாமதுரை அருகே தீயனூர், மங்கையேந்தல், அரிமண்டபம் உள்ளிட்ட பகுதியில் இந்த முறை நெல் விளைச்சல் அமோகமாக நடந்தது. இதனால் கண்மாய்கரை, வயல் வரப்புகள், அதனை ஒட்டிய புறம்போக்கு நிலங்களில் உள்ள மரங்களும், புதர்க்காடுகளும் பசுமையாக காணப்படுகிறது.

இவ்வாறு இயற்கையாக புற்கள் வளர்ந்துள்ள இடங்களில் இந்த கிராமங்களை சேர்ந்தவர்கள் தங்களது ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மேய்ச்சலுக்காக கொண்டு செல்கின்றனர். கண்மாய், குளங்களில் தண்ணீர் இருப்பதால் கொளுத்தும வெயிலுக்கு கால்நடைகளுக்கு போதிய அளவில் தண்ணீரும் கிடைக்கிறது.  இந்த இடங்களில் புற்கள், சிறுசெடிகள், கோரைகிழங்குகளின் கொடிகள் வளரும். இவற்றை இந்த பகுதியில் உள்ள கால்நடைகள் வளர்ப்போர் மேய்ச்சலுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

மானாமதுரை, சிவகங்கை ஒன்றியங்களுக்குட்பட்ட முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் வளர்த்து வரும் கால்நடைகளுக்கு இவ்வாறு நீர்நிலைகளை ஒட்டிய காடுகளில் கிடைக்கும் பசுந்தீவனமே பிரதானமாக இருப்பதால் பெரும்பாலான விவசாயிகள் ஆடு, மாடு வளர்ப்பை முக்கியமாக செய்து வருகின்றனர்.இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக கண்மாய், கரைகளுக்கு இடையே உள்ள காய்ந்த புற்கள், சருகுகளின் மீது சமூக விரோதிகள் தீ வைப்பதால் இயற்கையாக வளர்ந்துள்ள புற்கள் தீப்பற்றி எரிந்து முற்றிலும் நாசமாகி வருகின்றது.

இதனால் கால்நடைகளுக்கு கோடை காலத்தில் தீவனப்பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளதாக கால்நடை வளர்ப்போர் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து விவசாயி சேகர் கூறுகையில், `` கடந்த சில வாரங்களாக இரவு நேரங்களில் வாகனங்களில் வரும் சிலர் முயல், கவுதாரிகளை வேட்டையாடி  வருகின்றனர். புற்களுக்குள் இருக்கும் முயல்களை விரட்ட தீ வைக்கின்றனர். இரவு நேரங்களில் பலமாக வீசும் காற்றால் கண்மாய், நீர்பிடிப்பு பகுதிகளில் வளர்ந்துள்ள புற்கள் தீக்கிரையாகின்றன. இந்த காடுகளில் தீவைப்பதால் காற்றுவீசும்போது பல ஏக்கர் புற்கள் தீயில் எரிந்து நாசமாகி வருகிறது.
 
எங்களை போன்ற ஆடு, மாடு மேய்ப்பவர்களுக்கு கோடை காலங்களில் கால்நடைகளுக்கு பசுந்தீவனம் வழங்குவது சிரமமாக இருக்கும். எனவே வனக்காவலர்களும், ரோந்து போலீசாரும் இங்கு சட்டவிரோதமாக நடமாடும் வாலிபர்களை பிடித்து பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Tags : Manamadurai ,forests ,area , Manamadurai, forest and livestock
× RELATED டாஸ்மாக் கடையை உடைக்க முயன்ற கைதான நான்கு வாலிபர்களுக்கு சிறை