×

அடிக்கடி பைப் உடைப்பால் காளையார்கோவிலில் வீணாகும் காவிரி குடிநீர்: பொதுமக்கள் வேதனை

காளையார்கோவில்: காளையார்கோவிலில் அடிக்கடி பைப்புகள் உடைப்பால் வீணாகும் காவிரி குடிநீரை கண்டு பொதுமக்கள் வேதனையடைகின்றனர். காளையார்கோவிலில் கல்லல் மாநில நெடுஞ்சாலையோரம் காவிரி கூட்டுக்குடிநீர் தொட்டி உள்ளது. இங்கிருந்து பைப்புகள் மூலம் ராமநாதபுரம், சிவகங்கை நகராட்சி மற்றும் சுற்றுவட்டார கிராமப்புறங்களுக்கு தண்ணீர் செல்கிறது. இவ்வாறு நகரின் பல்வேறு இடங்களில் செல்லும் பைப்புகள் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. இதனை தரமான முறையில் சரிசெய்யாமல் விடுவதால் சில நாட்கள் ஆனவுடன் மீண்டும் பைப்புகளில் உடைப்பு ஏற்படுகிறது.

குறிப்பாக காவிரி கூட்டுக்குடிநீர் தொட்டி எதிரே பைப்பில் உடைப்பு ஏற்பட்டு பல நாட்களாக குடிநீர் வீணாகி வருகிறது. இதேபோல் மதுரை- தொண்டி ரோட்டில் சிவகங்கை நகராட்சிக்கு செல்லும் பைப்புகளிலும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நேரத்தில் இதுபோல் பைப் உடைப்பால் அடிக்கடி குடிநீர் வீணாகி வருவது பொதுமக்களை வேதனையடைய செய்துள்ளது. மேலும் பைப்புகளை சரிசெய்கிறோம் என்ற பெயரில் புதிதாக போடப்பட்ட சாலைகளையும் தோண்டி குண்டும், குழியாக்கி விடுகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடைந்த குடிநீர் பைப்புகளை தரமான முறையி்ல் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சமூகஆர்வலர் டிஎன். திருக்கானப்போர் கருணாநிதி கூறுகையில், ‘காளையார்கோவில் நகரின் பல்வேறு இடங்களில் காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. இவற்றை சரிசெய்வதற்காக தோண்டப்பட்ட குழிகளும் இன்று வரை மூடப்படாமல் உள்ளது. இதனால் வாகனஓட்டிகள் தடுமாறி வருகின்றனர். குறிப்பாக இரவுநேரங்களில் விபத்துகளை சந்திக்க நேரிடும் சூழ்நிலை உள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒருவர் மதுபோதையில் தடுமாறி குழியில் விழுந்து விட்டார். மேலும் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடக்கும் முன்பு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குழிகளை மூடுவதுடன், குடிநீர் பைப் உடைப்புகளை தரமான முறையில் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்

Tags : Kaliyarikovil ,Cauvery , Pipe busting, Cauvery drinking, and public agony
× RELATED காவிரி மேலாண்மை ஆணையம் ஏப்ரல் 4-ம் தேதி கூடுகிறது