×

யெஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகள் மார்ச் 18-ம் தேதி நீக்கப்படும் : மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

புதுடெல்லி: யெஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகள் மார்ச் 18-ம் தேதி மாலை 6 மணிக்கு நீக்கப்படும் என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. யெஸ் வங்கியின் நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ள ரிசர்வ் வங்கி, அதை மீட்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. சர்வ் வங்கியின் யெஸ் வங்கி மீட்பு திட்டத்தில், பாரத ஸ்டேட் வங்கி ஒரு பங்கு மதிப்பு 10 வீதம் 725 கோடி பங்குகளை 7,250 கோடிக்கு வாங்க முடிவு செய்துள்ளது. இந்த நிதி திரட்டலுக்கு யெஸ் வங்கி 1,200 முதல் 1,300 கோடி பங்குகளை வெளியிட்டுள்ளது. இதில், பாரத ஸ்டேட் வங்கி உட்பட 7 முதலீட்டாளர்கள், யெஸ் வங்கியில் மொத்தம் 11,750 கோடி முதலீடு செய்ய உள்ளனர். ஐசிஐசிஐ மற்றும் எச்டிஎப்சி ஆகியவை தலா 1,000 கோடி முதலீடு செய்து 6 சதவீத பங்குகளை வாங்க உள்ளனர்.

ஆக்சிஸ் வங்கி, கோடக் மகிந்திரா வங்கி, மிகப்பெரிய பங்கு முதலீட்டாளர்களான ராதாகிருஷ்ணன் தமானி, ராகேஷ் ஜூன்ஜூன் வாலா மற்றும் அஜித் பிரேம்ஜி ஆகியோர் தலா 500 கோடி முதலீடு செய்து 3 சதவீத பங்குகளை வாங்க உள்ளனர்.  இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், ‘‘யெஸ் வங்கியில் ஸ்டேட் பாங்க் மற்றும் சில முதலீட்டாளர்கள் ரிசர்வ் வங்கி வகுத்த திட்டத்தின் அடிப்படையில் முதலீடு செய்ய முன்வந்துள்ளனர்.

யெஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள் டெபாசிட் மற்றும் அவர்களது பணத்திற்கு பாதுகாப்பு அளிக்கவும் வங்கி மீண்டும் சிறப்பாக செயல்படவும் ரிசர்வ் வங்கி துரிதமாக நடவடிக்கை எடுத்தது. இதன் யெஸ் வங்கி சீரமைப்பு திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது’’ என்றார். இந்நிலையில் யெஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகள் மார்ச் 18-ம் தேதி மாலை 6 மணிக்கு நீக்கப்படும் என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. எஸ்பிஐ வங்கி சார்பில் குறைந்தபட்சம் 3 உறுப்பினர்களை கொண்ட நிர்வாகக் குழுவும் 7 நாளில் பதவியேற்கும். தற்போதைய நிர்வாகி பிரஷாந்த் குமார் சிஇஓ -ஆக செயல்படுவார் எனவும் மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.


Tags : Yes Bank ,Ministry of Finance ,Central Finance Ministry ,Reserve Bank of India , Yes Bank, Central Finance Ministry, Reserve Bank of India
× RELATED புதுச்சேரியில் கட்டுப்பாடு காரணமாக...