×

கடும் தண்ணீர் தட்டுப்பாட்டால் தடுமாறும் கூடங்குளம்: கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படுமா?

ராதாபுரம்: கூடங்குளம் பகுதியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனை சமாளிக்க கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை அணுமின் நிலையம் செயல்படுத்துமா? என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர். கூடங்குளம்  மற்றும் அணுமின் திட்ட மைய பகுதியில், தற்போது கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனை சமாளிக்க வழியின்றி அணுமின் நிலையம் திணறுகிறது. ஆரம்பத்தில்  பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து குடிநீர் தேவைக்காக தண்ணீர் கொண்டு வருவதற்கு திட்டம் தீட்டப்பட்டது. ஆனால் குமரி மாவட்ட விவசாயிகள் இடையே ஏற்பட்ட எதிர்ப்பால் இத்திட்டம் கைவிடப்பட்டது.

இதையடுத்து நிலைமையை சமாளிக்க அணுஉலை வளாகத்திலேயே கடல்நீரை  குடிநீராக மாற்றும் திட்டத்தை செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டது. இதற்காக கூடங்குளம்  அணுமின் நிலைய வளாகத்திற்குள்ளேயே குடிநீர் பிளாண்ட் அமைக்கப்பட்டது. கடந்த  2012ம் ஆண்டு அணுஉலை போராட்டத்தின்போது கூடங்குளம் பகுதிகளை சார்ந்த 11  கிராம பஞ்சாயத்துகளின் வளர்ச்சிக்கு ரூ.500 கோடியை தமிழக அரசு  வழங்கியது. இதில் ஒரு பகுதியாக ரூ.40 கோடியை ராதாபுரம், கூடங்குளம் சுற்றியுள்ள  கிராம குடிநீர் தேவைகளுக்கு செலவிட போவதாக அப்போதைய மாவட்ட கலெக்டர் அறிவித்தார்.

நாள் ஒன்றுக்கு 77 லட்சத்து 80 ஆயிரம் லிட்டர் தண்ணீர், அணுமின் நிலைய பிளான்ட் முலம் கிடைக்கும் என்றும், வரும் காலத்தில் ரூ.40 கோடி செலவில்  கடல்நீரை குடிநீராக மாற்றி அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள கூடங்குளம் உட்பட  11 பஞ். கிராமங்களுக்கு குடிநீர் தடையின்றி விநியோகம்  செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆண்டுகள் பல கடந்த பிறகும்  கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கே தண்ணீர் கிடைக்காமல் அதிகாரிகள் டேங்கர்  லாரிகள் மூலம் குடிநீரை விலைக்கு வாங்குகின்றனர். சுற்று வட்டார கிராமங்களிலும் பொதுமக்கள் குடிநீரை விலைக்கு வாங்கியே பயன்படுத்துகின்றனர்.

இதனால் கூடங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு தண்ணீர் உறிஞ்சப்படுகின்றன. இதன் காரணமாக நிலத்தடி நீரும் உப்புநீராக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் நிலத்தடி நீர் எடுக்க தடை விதிப்பதுடன், கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டத்தை அணுமின் நிலைய நிர்வாகம் விரைவுபடுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Kudankulam , Heavy water shortage, Kudankulam
× RELATED வாலிபர் கைது ரயில்வே பாதுகாப்பு படையினர் போலீசார் கொடி அணிவகுப்பு