×

மாசி கடைசி வெள்ளியை முன்னிட்டு காரையாறில் குவிந்த பக்தர்கள்

வி.கே.புரம்: காரையாறு சொரிமுத்தய்யனார் கோயிலில் நேற்று தமிழ் மாத கடைசி வெள்ளிக்கிழமையாக இருந்ததால் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பாபநாசத்தை அடுத்த காரையாறு அடர்ந்த வனப்பகுதியில் சொரிமுத்தய்யனார் ேகாயில் அமைந்துள்ளது. குல தெய்வங்கள் தெரியாதவர்களுக்கும், தென்மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கும் இக்கோயிலே குலதெய்வ கோயிலாக விளங்குகிறது. இதனால் ஒவ்வொரு தமிழ் மாத கடைசி வெள்ளிக்கிழமைகளிலும், சிறப்பு விழாவான ஆடி அமாவாசை நாளிலும் இங்கு பொதுமக்கள் திரண்டு வழிபாடு நடத்துவது வழக்கம்.

இக்கோயிலின் மூலவராக சொரிமுத்தையனார் வீற்றிருக்க, மகாலிங்க சுவாமி, பரிவார தெய்வங்களான பட்டவராயன், தூசி மாடன், துளசி மாடன், சுடலை மாடன், கரடி மாடன், பேச்சியம்மன், பிரம்மராட்சஷி அம்மன், சங்கிலி பூதத்தார், கும்பமுனி, விநாயகர், பாதாளகண்டி அம்மன், பெரிய சங்கிலி பூதத்தார், காட்சிப்பாறை உள்ளிட்ட தெய்வங்களுக்கு தனித்தனியாக பக்தர்களால் சிறப்பு வழிபாடு நடத்தப்படும். நேற்று மாசி மாத கடைசி வெள்ளிக்கிழமையாக இருந்ததால் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களைச் சார்ந்த ஏராளமான பக்தர்கள் காரையாறு கோயில் முன் உள்ள தாமிரபரணி நதியில் புனித நீராடி, சொரிமுத்தய்யனார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.

கோவில் வளாகத்திலுள்ள பேச்சியம்மனுக்கு பொங்கலிட்டும், சைவ படைப்பும் இட்டு வழி பட்டனர். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். பாபநாசம் அரசு போக்குவரத்து கழகம் சார்பாக காரையாறு கோயிலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

பக்தர்கள் அவதி
கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையால் பாபநாசம் அணை 3 முறை நிரம்பி வழிந்தது. அணையின் உபரிநீர் ஷட்டர் வழியாக பல நாட்கள் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் சொரிமுத்தையனார் கோயில் முன்புறம் தாமிரபரணியில் வெள்ளம் பாய்ந்தோடியது. இந்நிலையில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பிசான சாகுபடிக்காக அணையிலிருந்து தொடர்ந்து தண்ணீர் திறக்கப்படுவதால் அணை நீர்மட்டம் 83.45 அடியானது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 94.42 அடியாக உள்ளது. கோடைகாலம் துவங்கியுள்ளதால் பாபநாசம் அணை தண்ணீர் டனல் வழியாக சேர்வலாறு அணைக்கு திறக்கப்பட்டு அங்கு நீர் மின் உற்பத்தி செய்யப்பட்டு ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

இதனால் சொரிமுத்தையனார் கோயில் முன்புறமுள்ள ஆற்றில் தண்ணீர் வரத்து மிகமிக குறைந்துள்ளது. நேற்று கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் குறைந்தளவு ஓடிய தண்ணீரில் சிரமப்பட்டு குளித்துச் சென்றனர். மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே பக்தர்கள் அதிகளவில் வருவதால் அன்று மட்டுமாவது இந்த பகுதி வழியாக சிறிதளவு தண்ணீரை திறக்க மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Pilgrims ,Masi ,Macy's , Macy's last Friday
× RELATED சித்திரை திருவிழாவில் அழகர்...