கொளுத்த தொடங்கியது கோடை வெயில் களக்காடு தலையணையில் குவியும் சுற்றுலா பயணிகள்

களக்காடு: கோடை வெயில் கொளுத்த தொடங்கி உள்ளதால், களக்காடு தலையணையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்குத்தொடர்ச்சி மலையில் தலையணை உள்ளது. இங்கு ஓடி வரும் தண்ணீரில் குளுமை அதிகம் என்பதாலும், மூலிகைகளை தழுவியபடி தண்ணீர் வருவதாலும் அதில் குளிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் தலையணைக்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் கோடை வெயில் கொளுத்த தொடங்கி உள்ளது. பகல் நேரங்களில் அனல் வாட்டுவதால், வெப்பத்தின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து பொதுமக்கள் வெப்பத்தை சமாளிக்க சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். அதேபோல் களக்காடு தலையணையிலும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். தென்மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களுடன் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

தலையணையில் தற்போது தண்ணீர் மிதமான அளவில் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளிக்கின்றனர். இன்னும் சில நாட்களில் பள்ளி தேர்வுகள் முடிந்து விடுமுறை அறிவிக்கப்பட உள்ளது. அதன் பின் தலையணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் நலன் கருதி அங்கு கூடுதல் உடை மாற்றும் அறைகள் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More
>