×

திருவண்ணாமலையில் ஊர்காவல்படை வீரர் ஓடும் பைக்கில் எழுந்து நின்றபடி தேசியக்கொடியை ஏந்தி சாகசம்: சாதனை படைக்க முயற்சி

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஊர்காவல்படை வீரர் ஒருவர் ஓடும் பைக்கில் எழுந்து நின்று தேசியக்கொடியை ஏந்தி வீரவணக்கம் செலுத்தி சாகசம் செய்தார். திருவண்ணாமலை அடுத்த இலுப்பந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி, கூலி தொழிலாளி. இவரது இளைய மகன் சந்தோஷ்குமார்(29), எம்பிஏ பட்டதாரி. திருவண்ணாமலையில் ஊர்காவல் படையில் பணிபுரிந்து வருகிறார். இவர் உலக சாதனையாளர் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்ற நோக்கில் பைக்கில் சாகசங்களை செய்து வருகிறார். கைகளை விட்டு பைக்கில் செல்லும்போது லேப்டாப் இயக்குவது, கையில் தேசியக்கொடியும், மற்றொரு கையில் வீரவணக்கம் செலுத்துவது என இதுவரை 6 முறை பைக் சாகசங்களை செய்துள்ளார்.  

இந்நிலையில், நேற்று திருவண்ணாமலை- வேட்டவலம் சாலையில், திருவண்ணாமலை புறவழிச்சாலையில் இருந்து வேட்டவலம் வரை சுமார் 21 கிலோ மீட்டர் தூரம் பைக்கில் கைகளைவிட்டு எழுந்து நின்றபடி தேசியக்கொடியை ஏந்தி செல்ல திட்டமிட்டார். அதன்படி, நேற்று காலை இந்த பைக் சாகச நிகழ்ச்சியை சந்தோஷ்குமார் தொடங்கினார். சுமார் 40 கி.மீ. வேகத்தில் பைக்கில் சென்று கொண்டே எழுந்து நின்று ஒரு கையில் தேசியக்கொடியை ஏந்தி போக்குவரத்து நிறைந்த சாலையில் பைக்கை ஓட்டி சாகசம் செய்து காட்டினார். இதுகுறித்து சந்தோஷ்குமார் கூறுகையில், `பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே எனக்கு பைக்கில் சாகசம் செய்து சாதனை படைக்க வேண்டும் என்பது லட்சியம்.

இதற்காக பள்ளி காலத்தில் இருந்தே பைக்கை ஓட்ட பழகிக்கொண்டேன். அதன்பின்னர் ஓட்டுனர் உரிமம் பெற்று பைக்கை கைகளின் உதவியின்றி இயக்குவது, எழுந்து நின்று இயக்குவது உள்ளிட்ட பல்வேறு சாகச செயல்களை பழகி வருகிறேன்
புதியதாக பைக் சாகசம் செய்து உலக சாதனையாளர்கள் வரிசையில் இடம் பெற வேண்டும் என்பது எனது நோக்கம். இதுவரை 6 முறை பைக் சாகசம் செய்துள்ளேன். தற்போது 7வது முறையாக பைக் சாகசம் செய்துள்ளேன். இதுவரை 5 கி.மீ. முதல் 10 கி.மீ. தூரம் வரை பைக் ஓட்டியுள்ளேன்’ என்றார்.போக்குவரத்து நிறைந்த சாலையில் வாலிபர் செய்த சாகச நிகழ்ச்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

Tags : Riding Sailor ,Thiruvannamalai Thiruvannamalai , Thiruvannamalai, hometown warrior, adventure
× RELATED கார் கண்ணாடி உடைத்து லேப்டாப்,...