×

அரக்கோணத்தில் 5 கிலோ சிக்கன் ரூ150க்கு விற்றும் வாங்க ஆட்கள் இல்லை: பறவை காய்ச்சல் பீதியால் மக்கள் அச்சம்

அரக்கோணம்:  நாடு முழுவதும் கொரானா பீதி தலைதூக்கிவரும் நிலையில், பறவைக்காய்ச்சல் பிரச்னையும் பூதாகரமாக வெடித்துள்ளது. கேரளாவில் பறவைக்காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் அங்குள்ள பிராய்லர் பண்ணைகளுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சென்று கோழிகளை பரிசோதனை செய்து நோய் தாக்குதல் இருந்தால் உடனடியாக அவற்றை கொன்றுவருவதாக கூறப்படுகிறது. மேலும் பிராய்லர் கோழிகளை நன்றாக வேகவைத்து சாப்பிட வேண்டும் எனவும்  அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும் கோழி இறைச்சியை மக்கள் புறக்கணித்து வருகின்றனர்.

இந்த அச்சம் தென்மாநிலங்கள் முழுவதும் பரவியுள்ளது. இதனால் பிராய்லர் கோழிகள் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் உயிருடன் உள்ள கோழி 5 கிலோ வெறும் ரூ150க்கு கூவி, கூவி விற்கப்படுகிறது. இருந்தாலும் அதனை வாங்க மக்கள் முன்வரவில்லை. அதேபோல் இறைச்சி கிலோ ரூ50க்கு விற்கப்படுகிறது. இதேபோல் ஆங்காங்கே புற்றீசல் போல் காணப்பட்டு வரும் தள்ளுவண்டி சிக்கன் கடைகளும், சிக்கன் பிரியாணி கடைகளும் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து விட்டன. அரக்கோணம் ரயில் மற்றும் பஸ் நிலையங்கள் ஒட்டியப்பகுதியில் உள்ள பிரியாணி கடைகளிலும் மட்டன் பிரியாணி மட்டுமே விற்கப்படுகிறது.

இதுகுறித்து இறைச்சி வியாபாரிகள் கூறுகையில், ‘பறவை காய்ச்சல் காரணமாக பொதுமக்கள் கோழி இறைச்சியை வாங்க தயங்குகின்றனர். கணிசமாக விலை குறைந்தபோதும், வாங்க ஆட்கள் இல்லை. பல இடங்களில் சிக்கன் வாங்கினால் முட்டைகள் இலவசம் என விளம்பரங்கள் செய்தும், மக்கள் திரும்பிக்கூட பார்ப்பதில்லை. இதனால் இறைச்சி வியாபாரத்தை நம்பியுள்ள நாங்கள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளோம். இதேபோல் கோழிப்பண்ணை வியாபாரிகளும் மிகுந்த நஷ்டம் அடைந்துள்ளனர்’ என வேதனையுடன் தெரிவித்தனர்.

Tags : buyers ,palace ,Arakkonam , Arakkonam, chicken, bird flu
× RELATED வேளாங்கண்ணி பேராலயத்தில் குருத்தோலை...