×

அவிநாசி கோயிலில் லிங்கேஸ்வரர் மீது சூரிய ஒளி: பக்தர்கள் பரவசம்

அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் மீது சூரிய ஒளி விழுந்து அபூர்வ நிகழ்வு நேற்று காலை நடைபெற்றதால் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசி லிங்கேசுவரர் கோயிலில் சூரிய பகவான் தட்சணாயன காலத்தில் இருந்து உத்தராயன காலத்திற்கு மாறுகிறபோது, சூரியன் அவிநாசிலிங்கேஸ்வரரை வணங்கிச் செல்வார் என்பது ஐதீகம். ஆண்டு தோறும் பங்குனி மாதம் முதல் வாரத்தில் காலை 6.40 மணிக்கு சூரிய உதயத்தின் போது, கோயிலில் மூலவர் சிவலிங்கதிருமேனியின் மீது சூரிய ஒளி நேரடியாக விழும்.

நேற்று காலை சூரிய உதயத்தின் போது, பழமையான இந்த கோயிலின் ராஜகோபுரம் வழியாக, 90 டிகிரி கோணத்தில் நேரடியாக நந்தீசுவரபெருமானின் மீது பட்டு, பின்னர் அவிநாசி லிங்கேசுவரர் மீது நேற்று சூரிய ஒளி விழுந்தது. அப்போது பொன்னிறமாக அவிநாசி லிங்கேஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த அபூர்வ நிகழ்வை ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் பார்த்து தரிசனம் செய்தனர். இந்த தரிசனம் மேற்கொண்டால், சகல பாவங்களும் விலகி, சிவன் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இது குறித்து கோயில் அர்ச்சகர்கள் கூறுகையில், ‘‘1200 வருடங்களுக்கு முன்பு மன்னர்கள் இந்த கோயிலை அமைத்தபோது, சிறந்த ஆகமம், உன்னதமான கட்டிடக்கலை நயத்துடன் அமைத்துள்ளனர்.

பங்குனி (மீனம்) மாதத்தில், முதல் வாரத்தில் உத்தராயண காலத்தில் அதிகாலை சிவலிங்க திருமேனி மீது சூரிய ஒளிக்கதிகள் மிகச்சரியாக விழும் நிலையில் அற்புதமாக வடிவமைத்துள்ளனர். இந்த சமயத்தில் அவிநாசி லிங்கேசுவரரை தரிசனம் செய்து வழிபாடு செய்தால் பூர்வஜென்ம பாவங்கள் அனைத்தும் விலகும். மேலும் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். இதை முன்கூட்டியே தெரிந்த சிவனடியார்கள் திருக்கூட்டத்தினர், சிவபக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அவிநாசியப்பரை வழிபாடு செய்வது வழக்கமாக கொண்டுள்ளனர்’’ என்றார்.

Tags : devotees ,Avinashi ,Avinashi Temple , Avinashi Temple, Lingeshwar, Sunshine
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...