×

கொரோனா அச்சத்தால் ஜப்பான் கப்பலில் தவித்த ஊழியர் மதுரை திரும்பினார்: திரும்பி வந்தது குறித்து பரபரப்பு பேட்டி

அவனியாபுரம்: கொரோனா அச்சத்தால், ஜப்பான் கப்பலில் தவித்து வந்த மதுரையை சேர்ந்த ஊழியர் நேற்று ஊர் திரும்பினார். சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ், உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதன் எதிரொலியாக, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைமன்ட் பிரின்ஸ் கப்பல், அந்த நாட்டில் உள்ள ஒகாமா ஹட்டா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது. அக்கப்பலில் பணிபுரிந்த ஒரு சிலருக்கு கொரோனா அறிகுறி இருந்ததையடுத்து, நீண்ட நாட்களாக துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் கப்பலில் இருந்த ஊழியர்கள் யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்த கப்பலில் ஊழியராக பணியாற்றி வரும் மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த அன்பழகன் என்பவரும் வெளியில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டு, கப்பலில் தங்க வைக்கப்பட்டார்.

தனக்கு கொரோனா பாதிப்பு இல்லை. எனவே, கப்பலில் இருக்கும் இந்தியர்களை மீட்டு தாயகம் திரும்ப மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்பழகன் சமூக வலைத்தளம் மூலம் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து அன்பழகன் உள்பட 618 பேரை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அவர்கள் அனைவரையும் தனி விமானம் மூலம் டெல்லி கொண்டு வந்து, அங்கு 15 நாட்கள் கண்காணிப்பில் வைத்திருந்தனர். அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என சான்றிதழ் வழங்கிய பின்னரே, அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டனர். ஜப்பான் டைமன்ட் பிரின்ஸ் கப்பலிலிருந்து மதுரை திரும்பிய கப்பல் ஊழியர் அன்பழகன், விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது, ‘‘கப்பலில் இருந்த நாட்களை என்னால் மறக்க முடியாது. கொரோனா அச்சம் உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் இருந்து பாதுகாத்துக் கொள்ள கை, கால்களை சுத்தமாக கழுவ வேண்டும். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இருமல் ஏற்படும்போது, முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் கலந்து கொள்ளக் கூடாது உள்ளிட்ட தற்காப்பு நடவடிக்கைகளை கூறி அனுப்பியுள்ளனர்’’ என்றார்.


Tags : Coroner ,shipwreck ,Japanese ,Madurai , Corona, Japan Ship, Servant, Madurai
× RELATED ஜப்பானிய இயக்குனரின் கடைசி படம் விரைவில் இந்தியாவில் வெளியாகிறது