×

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பயோமெட்ரிக் வருகை பதிவு தற்காலிக நிறுத்தம்: நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அலுவலகத்தில் பயோ மெட்ரிக் மூலம் வருகை பதிவு செய்வது  தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு: மெட்ரோ ரயில் நிறுவனம் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும்,  அசென்ட்யா ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து கொரோனா வைரஸை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில்  ஈடுபடுகிறது. இதன் ஒருபகுதியாக, சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் விமானநிலைய மெட்ரோ ரயில் நிலையம் கிருமிநாசினி மூலம்  சுத்தம் செய்யப்படவுள்ளது.

அதன்படி, நாளை சென்ட்ரல் நிலையத்திலும், 15ம் தேதி விமானநிலைய மெட்ரோ ரயில் நிலையத்திலும் இரவு 11 மணிக்கு  பிறகு இப்பணி நடைபெற உள்ளது. மேலும், மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு கைப்பேசி மூலம் கொரோனா வைரஸ்  தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறுஞ்செய்தியாகவும் அனுப்பி வருகிறது. மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகளின் நலனுக்காக செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை தொடர்பான அறிவிப்புகள்  வெளியிடப்படுகின்றன. கூடுதலாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அலுவலகம், மெட்ரோ  நிலையங்களில் தங்கள் வருகையை பயோமெட்ரிக் மூலம் பதிவு செய்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு வருகை பதிவேடு மூலம் பதிவு செய்து  வருகின்றனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

குறுஞ்செய்தி மூலம் விழிப்புணர்வு
கொரோனா வைரஸ் பரவலை எதிர்கொள்வது குறித்து செல்போன் குறுஞ்செய்தி மூலம் விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மெட்ரோ  ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களில் முழுமையாக கிருமி நாசினிகளை தெளித்து வருகிறது. குறிப்பாக, இரவு 11 மணிக்கு  பிறகு கிருமி நாசினிகளை தெளிக்கும் நடவடிக்கையில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதேபோல், பொதுமக்கள் பயன்படுத்தும் செல்போன்களுக்கு  ‘இருமல் மற்றும் தும்மல் வரும்போது கைக்குட்டையால் மூட வேண்டும், கைகளை தண்ணீர் மற்றும் சோப்பைக்கொண்டு அடிக்கடி கழுவ வேண்டும்,  வாய், மூக்கு மற்றும் கண்களை தொடுவதை தவிர்க்க வேண்டும், அனைவரிடமிருந்தும் 1 மீட்டர் தள்ளி இருக்க வேண்டும்’ என்ற விழிப்புணர்வு  வாசகத்தை குறுஞ்செய்தியாக அனுப்பி வருகிறது.


Tags : Arrival ,Metro Rail ,Coronavirus Spread: Administration Announcement ,Spread , Metro Rail, Biometric Arrival, Registration ,
× RELATED மெட்ரோ ரயில் பணி காரணமாக ஓ.எம்.ஆர்...