×

என்பிஆர் விவகாரம் விஸ்வரூபம் சட்டப்பேரவையில் காரசார விவாதம்

*எம்எல்ஏக்கள், கட்சித்தலைவர்கள் உணர்வுப்பூர்வமாக சிந்திக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
* நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை பேரவையில் பதிவு செய்யவேண்டும் - மு.க.ஸ்டாலின்
* என்பிஆர் பணி துவங்கப்படவில்லை - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் நேரமில்லா நேரத்தில் சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் பேசினார். அப்போது அவர், சட்டமன்ற விதிமீறி  நேற்றைய தினம் அமைச்சர் அளித்த பேட்டியில் என்பிஆர் கணக்கெடுப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். வெளியே சொன்ன கருத்தை அவையில் தீர்மானமாக கொண்டுவர வேண்டும். அப்படி கொண்டு வந்தால் ஆதரிப்போம். மனம் திறந்து அமைச்சர் சொல்லியிருக்கிறார். இதுபோல் முதல்வரும் மனம்  இருந்தால் தயவு செய்து சொல்லி விடலாம். ஒரு தீர்மானத்தினை கொண்டுவருவோம். நாங்கள் வரவேற்க தயாராக இருக்கிறோம்.கே.ஆர்.ராமசாமி (சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர்): அதே பிரச்னையை இந்த சட்டமன்றத்தில் மறுபடியும் தீர்மானம் கொண்டுவர வேண்டும்.அபுபக்கர் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்): என்பிஆர் நிறுத்தப்படும் என்று சொல்லியிருப்பதை இனி நடைமுறைப்படுத்தப்படாது என தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும். (இதே கோரிக்கையை தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோர் வலியுறுத்தினர்)அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்: சென்சஸ்க்கான அறிவிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. என்பிஆர்க்கான அறிவிப்பு கொடுக்கப்படவில்லை. ஏன் கொடுக்கப்படவில்லை என்று சொன்னால், அந்த 3 புதிய அம்சங்களுக்கான விளக்கத்தை மத்திய அரசிடம்  கேட்டிருக்கிறோம். ஆவணங்கள் தேவையில்லை என்கிற உண்மை நிலையை மக்களுக்கு சொல்ல வேண்டிய கடமை அரசிற்கு இருக்கிறது. அந்த அடிப்படையில்தான் அந்த செய்தியை வெளியிட்டேன். இந்த அவையில் பேசிய கருத்தைதான் நான் செய்தியாக வெளியிட்டேனே தவிர, இந்த அவையில் சொல்லாத கருத்துகளை வெளியே செய்தியாக சொல்லவில்லை.

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்: ஏப்ரல் 1ம் தேதி முதல் என்பிஆர் கணக்கெடுக்கும் பணியைத் தொடங்க வேண்டும் என்று உத்தரவு போட்டுள்ளது.  மத்திய அரசு விளக்கம் வந்தால்தான் முடிவு அறிவிக்கப்படும் என்று கூறியுள்ள நிலையில், இந்த சட்டமன்றத்தில் ஏகமனதாக ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்:  மத்திய அரசு இயற்றியிருக்கின்ற ஒரு சட்டத்திலே நாம் அதற்கு விரோதமாக ஒரு தீர்மானத்தை எப்படி கொண்டுவர முடியும். அந்த தீர்மானம் செல்லுபடியாகுமா? (அமைச்சரின் இந்த பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது)சபாநாயகர் தனபால்: அமைச்சர் பதில் அளித்துக்கொண்டிருக்கிறார். அதற்கு விளக்கம் கேட்பதற்கு பதிலாக அவையில் உட்கார்ந்து கொண்டே சத்தம் போட்டால் எப்படி?  அப்புறம் நான் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும். கடுமையாக எச்சரிக்கிறேன்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்:  முக்கியமான பிரச்னையாக கருதப்படுகிற காரணத்தால் உரிய பதிலை உகந்த பதிலை, உண்மையான பதிலை சொல்லிக் கொண்டிருக்கிறார். பொறுமையாக கேளுங்கள்.அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்: 2010ல் என்பிஆர் கணக்கெடுப்பின் போது என்ன முறை கடைபிடிக்கப்பட்டதோ அதற்கு எதிர்ப்பும் இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் சொல்லியிருக்கிறார். அதையேதான் நாங்களும் சொல்லியிருக்கிறோம். மூன்று புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டதை பற்றி நாங்கள் மத்திய அரசிடமிருந்து விளக்கம் கேட்டிருக்கிறோம். உரிய விளக்கத்தை சொல்ல  வேண்டிய கடமையும், பொறுப்பும் எங்களுக்கு இருக்கிறது. அதை தான் நான் செய்திருக்கிறேன்.மு.க.ஸ்டாலின்: எந்த ஆவணங்களும் கேட்கப்படவில்லை என்று அமைச்சர் சொல்கிறார். ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் என்ன விளக்கம் கேட்டு கடிதம் எழுதி இருக்கிறீர்கள், அதைச் சொல்லுங்கள்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி: நீங்கள் பொதுமக்களிடத்திலும், சிறுபான்மையின மக்களிடத்திலும் ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றீர்கள். எல்லா இடத்திலும் இதைத்தான் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். வருவாய்த் துறை அமைச்சர் தெளிவாக சொல்லி இருக்கிறார். நானும் ஏற்கனவே தெளிவாக சொல்லி இருக்கிறேன். எந்த இடத்தில் பாதிப்பு என்று சொல்லுங்கள். அதை நாங்கள் தீர்த்து வைப்போம் என்று சொன்னோம். அதை நீங்கள் சொல்வதில்லை. இன்னும் கணக்கெடுப்பே வரவில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்புக்கும் இதற்கும் என்ன இருக்கிறது. துரைமுருகன்: நான் கேட்பது இரண்டு நாட்களுக்கு முன்பு இங்கே பேசுகிற போது, மூன்று கண்டிஷன் இருப்பது அவருக்கு தெரியாதா, அதை இங்கே சொல்ல வேண்டாமா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி: அமைச்சர் அவையிலே பேசிய கருத்தைத் தான் சொல்லி இருக்கிறார். பேசாத கருத்தை சொல்லவில்லை. அமைதியான  மாநிலமாக தமிழ்நாடு இருந்து கொண்டு இருக்கிறது. சாதி, மத, வேறுபாடு இல்லாமல் தமிழகம் இருந்து கொண்டு இருக்கிறது. இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

சபாநாயகர் தனபால்: அமைச்சர் அவையில் பேசியதையும், வெளியிலே இருந்து அவர் கொடுத்த பேட்டியையும் வாங்கி நான் படித்து பார்த்தேன். தெளிவாக இங்கே அவையிலே என்ன சொன்னாரோ, அதைத் தான் அங்கே பத்திரிகையாளர்களிடமும் அவர் தெரிவித்திருக்கிறார். அதை நான் பார்த்து விட்டேன். ஆகவே அவை உரிமை மீறல் என்ற அந்த கருத்து சரியாக இருக்காது.துரைமுருகன்: நான் ஒன்றை கேட்கிறேன். அங்கே சொல்லியிருக்கிறார். நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்று. இந்த வார்த்தையை காட்டுங்கள் பார்க்கலாம்.சபாநாயகர் தனபால்: அவையில் அமைச்சர் பேசியதும், பத்திரிகைகளுக்கு கொடுத்த பேட்டியும் ஒன்றாக தான் இருக்கிறது. மேற்கொண்டு இதை பற்றி எதுவும் பேச வேண்டாம். தீர்ப்பு வழங்கி விட்டேன்.

மு.க.ஸ்டாலின்:  உங்கள் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்று அமைச்சர் சொல்லியிருக்கிறார்.  அதைச் சட்டமன்றத்திலாவது பதிவு செய்ய வேண்டும். இதுகுறித்து அமைச்சர் உரிய விளக்கத்தை தரவேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தியையாவது இந்த அவையிலே பதிவு செய்ய வேண்டும். அமைச்சர் செய்வாரா?.அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்:  மத்திய அரசிடம் இருந்து நாங்கள் மூன்று புதிய அம்சங்கள் குறித்து விளக்கம் கேட்டிருக்கிறோம். அந்த விளக்கம் தற்போது வரை  நமக்கு வரவில்லை. ஆகவே, என்பிஆர் குறித்து எந்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. ஆகவே, அந்த பணிகள் துவங்கப்படவில்லை. இப்போது சென்சக்ஸ் மட்டும்தான் கணக்கெடுக்கின்றோம். ஆகவே, எப்போதும் என்பிஆர் பணி துவங்கப்படவில்லை. இவ்வாறு விவாதம் நடந்தது.

Tags : NPR ,session ,Legislative Assembly , NPR ,whistleblower, Legislative Assembly
× RELATED 2026 சட்டப்பேரவை தேர்தலில் பாமக தனி அணி:...