×

கடந்த ஆண்டை விட குறைவு டாஸ்மாக் மது வருவாய் 28,839 கோடி: மதுபாட்டில்களில் விழிப்புணர்வு வாசகம் மாற்றம்

சென்னை: இந்த ஆண்டு டாஸ்மாக் மது வருவாய் 28,839 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டை விட குறைவு. மேலும் மதுபாட்டில்களில் இடம்பெற்றிருந்த விழிப்புணர்வு வாசகத்தையும் தமிழக அரசு மாற்றியுள்ளது. தமிழக சட்டப் பேரவையில் நேற்று எரிசக்தி துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைக்கான கொள்கை விளக்கக் குறிப்பு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மது வருவாய் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளது. அதன்படி, கடந்த 2018-19ம் ஆண்டில் அதிகபட்சமாக தமிழக அரசுக்கு டாஸ்மாக் கடைகள் மூலம் மது வருவாய் ₹31,157.83 கோடி கிடைத்துள்ளது. 2003-04ம் ஆண்டு முதல் இந்த வருவாய் தான் அதிகபட்சமாக உள்ளது. இந்த ஆண்டு 2019-20ம் ஆண்டுக்கான மது வருவாய் பிப்ரவரி மாதம் 29ம் தேதி வரை ₹28,839.08 கோடி கிடைத்துள்ளது.  இது, கடந்த ஆண்டைவிட ₹2,318.75 கோடி வருவாய் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் இருந்து 2018-19ம் ஆண்டில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு பீர் ஏற்றுமதி மூலம் தமிழக அரசுக்கு ₹577.91 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 2019-20ம் ஆண்டு, பிப்ரவரி 29ம் தேதிவரை பீர் ஏற்றுமதி மூலம் ₹339.88 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

 மேலும், மது வாங்கி குடிப்போர் மற்றும் மதுபாட்டில்களை பார்க்கும் மக்கள் மத்தியில் அதன் மூலம் ஏற்படும் தீமைகளை குறிக்கும் வகையில் விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்றிருக்கும். இதுவரை ‘மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு’ என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தது. தற்போது, அந்த வாசகம் மாற்றப்பட்டு அதற்கு பதிலாக, ‘மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு, பாதுகாப்பாக இருப்பீர் - மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்’ என்ற வாசங்கள் இடம்பெற்றுள்ளது.   இது 1937ம் ஆண்டின் தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தில் உள்ள பல்வேறு விதிகளின் கீழ் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் பொதுமக்கள் விபத்துகளில் சிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதை தடுக்கும் வகையில், இந்த வாசகத்தை தமிழக அரசு மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

Tags : Tasmanian Wine , Less ,last year, 28,839 Crores , Tasmanian ,Revenue
× RELATED சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு...