×

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு முடிந்ததும் 412 மையங்களில் இணையவழி நீட் பயிற்சி வகுப்பு தொடக்கம்: 17ம் தேதி சோதனை ஓட்டத்துக்கு தயாராக இருக்க உத்தரவு

வேலூர்: பிளஸ்2 தேர்வு முடிந்ததும், 412 நீட் பயிற்சி மையங்களில் இணைய வழி வகுப்புகள் தொடங்க உள்ளதாகவும், அதற்கு முன்பு வரும் 17ம்தேதி சோதனை ஓட்டத்துக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.2019-2020ம் கல்வியாண்டிற்கான நீட் தேர்வு வரும் மே 3ம்தேதி நடக்க உள்ளது. தமிழக மாணவர்கள் நீட் மற்றும் ஜெஇஇ தேர்வில் அதிகளவில் தேர்ச்சி பெறும் வகையில் மாநிலம் முழுவதும் 412 பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி மையங்களில் கடந்த அக்டோபர் 24ம்தேதி முதல் பயிற்சி தொடங்கப்பட்டு, சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. இந்த பயிற்சியை முதுகலை ஆசிரியர்கள் மூலம் வழங்கப்பட்டது. இதற்கிடையில் பிளஸ்2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த 2ம்தேதி தொடங்கியதால், ஜனவரி மாதம் முதல் இந்த பயிற்சி வகுப்புகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிந்தபின், இ-பாக்ஸ் என்ற நிறுவனம் மூலம் இணையவழி மூலமாக 412 பயிற்சி மையங்களிலும் பயிற்சி வகுப்புகள் நடத்த உள்ளது. இவ்வகுப்பிற்கான சோதனை முன்னோட்டம் வரும் 17ம் தேதி காலை 9 மணி முதல் 4 மணி வரை நடைபெற உள்ளது. எனவே, அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டங்களில் உள்ள நீட் தேர்வு பயிற்சி மையங்களில் மேற்கண்ட சோதனை முன்னோட்டம் நடத்துவதற்கு இணைப்பு வசதிகளை சரிபார்த்து தயாராக வைத்து கொள்ள வேண்டும். அன்றைய தினம் ஒவ்வொரு பயிற்சி மையத்திலும் நியமிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்பாளர் தவறாமல் வர வேண்டும்.
இந்த சோதனை முன்னோட்டத்தின் செயல்பாடு குறித்த விவரங்களை பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதுதொடர்பாக அனைத்து பயிற்சி மையங்களின் தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மைக்கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தி உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : test run ,centers ,Tamil Nadu , plus-2 exam , Tamil Nadu,Training,
× RELATED 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்