×

உலகளவில் பலி எண்ணிக்கை 5,000 ஆனது கனடா பிரதமர் மனைவிக்கு கொரோனா: ஆஸ்திரேலியா அமைச்சர், ஐநா தூதருக்கும் பரவியதால் பீதி

ஒட்டவா: கனடா பிரதமரின் மனைவி, ஆஸ்திரேலிய அமைச்சர், ஐநா.வுக்கான பிலிப்பைன்ஸ் தூதர் உள்ளிட்ட உலக அரசியல் தலைவர்களுக்கும் கொரோனா வைரஸ் பரவியிருப்பது புதிய பீதியை கிளப்பி உள்ளது. சர்வதேச அளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 5,000 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் இருந்து தொடங்கிய கோவிட்-19 கொரோனா வைரஸ் உலக முழுவதும் 127 நாடுகளுக்கு பரவி இருக்கிறது. இதுவரை லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு வளையத்தில் உள்ள உலக அரசியல் தலைவர்கள், முக்கிய பிரபலங்களையும் வைரஸ் பாதிக்கத் தொடங்கி உள்ளது. இதன்படி, கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மனைவி சோபி கிரிகோரி ட்ரூடோவுக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

இங்கிலாந்து சென்று திரும்பியதில் இருந்தே சோபிக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக பரிசோதிக்கப்பட்ட அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது நேற்று உறுதிபடுத்தப்பட்டது. இதனால், அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது. பிரதமரின் மனைவிக்கே கொரோனா பரவியிருப்பதால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுவரை கனடாவில் 158 பேர் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். ஒருவர் பலியாகி உள்ளனர். இதே போல, ஆஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சரான பீட்டர் டட்டன் தனக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி இருப்பதாக நேற்று அறிவித்துள்ளார். இவர் சமீபத்தில் அமெரிக்க பயணம் மேற்கொண்டு திரும்பியவர். அங்கு அமெரிக்க அட்டர்னி ஜெனரல் வில்லியம் பார்ருடன் வாஷிங்டன் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அதோடு, அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப்பையும் சந்தித்து பேசி உள்ளார். அமெரிக்காவிலிருந்து திரும்பிய அடுத்த நாளே இவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி இருக்கிறது.

மேலும், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனையும் அமைச்சர் டட்டன் சந்தித்து பேசி உள்ளார். இதனால் அவர் மூலமாக மற்ற அரசியல் தலைவர்களுக்கும் கொரோனா பரவியிருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதுதவிர, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன், தென் ஆப்ரிக்கா தொடரில் விளையாடி விட்டு திரும்பிய பிறகு தொண்டை வலி ஏற்பட்டது. இதனால் தனிமைப்படுத்தப்பட்ட அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்குமோ என ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதிக்கப்பட்டது. இதில், ரிச்சர்ட்சனுக்கு வைரஸ் தொற்று இல்லை என உறுதியானது. ஆஸ்திரேலியாவில் 160 பேருக்கு வைரஸ் பாதித்துள்ளது. 3 பேர் பலியாகி உள்ளனர். வைரஸ் பரவுவதை தடுக்க பொதுமக்கள் கூடுவதற்கு நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தையும் அது விட்டு வைக்கவில்லை. ஐநா தலைமையகத்தில் உள்ள பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான பெண் தூதர் வைரஸ் பாதிப்புக்குள்ளாகி உள்ளார். ஐநா தலைமையகத்தில் வைரஸ் தொற்று பாதிக்கும் முதல் நபர் இவராவார். இதைத்தொடர்ந்து, நியூயார்க்கில் உள்ள பிலிப்பைன்ஸ் தூதரகம் மூடப்பட்டு, அங்கு பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் 14 நாள் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சீனாவுக்குப் பிறகு இத்தாலியில் தான் கொரோனா வைரஸ் மிகத் தீவிர நிலையை அடைந்துள்ளது. அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,000 தாண்டி உள்ளது. பலி எண்ணிக்கை 1000க்கும் மேல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, நோய் பரவாமல் தடுக்க ஏப்ரல் 3ம் தேதி வரை நாடு முழுவதும் பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கூட்டு பிரார்த்தனை, திருமணங்கள், துக்க நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.  புனித நகரமான ரோமில் அனைத்து கத்தோலிக்க சர்ச்களும் மூடப்பட்டுள்ளன. ஏற்கனவே அங்கு மருந்து, உணவு விற்பனை கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.  கென்யா, உக்ரைன் உள்ளிட்ட நாடுகளில் நேற்று முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கையிலும் வைரஸ் பரவத் தொடங்கி இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரான், இத்தாலி, தென் கொரியா நாட்டினர் இலங்கையில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு மிகத் தீவிரமடைந்துள்ள நிலையில், இதன் ஆரம்பப் புள்ளியான சீனாவில் இந்த வைரஸ் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. தினமும் அங்கு நூற்றுக்கணக்கானோர் பலியாகி வந்த நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு பிறகு தற்போது பலி எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தை அடைந்துள்ளது.

நேற்று 8 பேர் மட்டுமே பலியாகி உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 3,177 ஆக உள்ளது. புதிதாக வைரசுக்கு பாதிக்கப்பட்டோர் 21 பேர் ஆவர். உலக அளவில் இதுவரை கொரோனாவுக்கு 1 லட்சத்து 36 ஆயிரத்து 388 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலியானோர் எண்ணிக்கை 5,080 ஆக அதிகரித்துள்ளது. சீனாவை தவிர்த்து பிற நாடுகளில் பலியானோர் எண்ணிக்கை 1,903 ஆகி உள்ளது. ஈரானில் நேற்று ஒரே நாளில் 85 பேர் பலியாகி உள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,000த்தை தாண்டி உள்ளது.

கொரானாவை பரப்பியது அமெரிக்க ராணுவம்தான்
 உலகம் முழுவதும் கொடூர ஆட்சி செய்யும் கொரோனாவால் ஆரம்பத்தில் பாதிக்கப்பட்டது சீனாதான். ஆனாலும், சீனாவில்தான் இந்த வைரஸ் உற்பத்தியானது என்பதற்கு அறிவியல் ரீதியாக எந்த ஆதாரமும் இல்லை. ஆனால், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘வுகான் வைரஸ்’ என குறிப்பிட்டது, சீனாவை எரிச்சலடைய வைத்தது. இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்தது.  இந்நிலையில், அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குநர் ராபர்ட் ரெட்பீல்ட், ‘சமீபத்தில் அமெரிக்கர்கள் சிலருக்கு  காய்ச்சல் பாதிப்பு இருந்தது. அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்திருக்கலாம். தவறான சிகிச்சை தரப்பட்டுள்ளது,’ என அளித்த பேட்டி சீன மீடியாக்களில் வெளியிடப்பட்டது. இதை வைத்து சீனாவின் துணை  தூதரான லிஜியான் என்பவர் தனது டிவிட்டர் பதிவில், ‘அமெரிக்க ராணுவம் கொரோனா வைரசை வுகானுக்கு கொண்டு வந்திருக்கலாம்.

அதை வெளிப்படுத்த வேண்டும்,’ என திரியை கொளுத்தி போட, தற்போது அது தீயாக பற்றி உள்ளது. இதைப் பற்றி சீனாவின் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளரிடம் செய்தியாளர்கள் கேட்க, ‘‘கொரோனா வைரசின் ஆதாரம் கண்டுபிடிப்பது அறிவியல் சம்மந்தப்பட்டது. ஆனால், அமெரிக்க அதிகாரிகள் தவறான தகவலை பரப்புகிறார்கள். அப்படிப்பட்ட அதிகாரிகளின் பேச்சு குறித்து அந்நாட்டு அரசிடம் கேள்வி கேளுங்கள். பின்பு, எங்கள் நாட்டு அதிகாரியின் பேச்சு பற்றி நான் விளக்குகிறேன்,’’ என்றார். இந்த விவகாரம் அமெரிக்கா-சீனா இடையே வார்த்தை மோதலை உருவாக்கி உள்ளது.

எவரெஸ்ட் சிகரம் மூடல்
கொரானா வைரஸ் பரவுவதால், எவரெஸ்ட் சிகரத்தில் மலையேற்றம் தொடர்பான அனைத்து பயணங்களும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மலையேற்ற வீரர்களுக்கான அனுமதி வழங்குவது நிறுத்தப்பட்டதையடுத்து எவரெஸ்ட் சிகரத்திற்கு செல்லும் வழி மூடப்பட்டுள்ளது. அனைத்து மலைச்சிகரங்களுக்குமான மலையேற்றம் மற்றும் சுற்றுலா விசாக்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக நேபாள சுற்றுலாத்துறை அமைச்சர் யோகேஷ் பட்டாராய் தெரிவித்துள்ளார்.

சீனாவில் நவம்பர் 17ல் முதல் நபருக்கு வைரஸ்
சீனாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17ம் தேதி ஹூபெய் மாகாணத்தை சேர்ந்த 55 வயது நபருக்கு கொரோனா வைரஸ் முதல் முறையாக பாதித்திருப்பதாக அந்நாட்டு அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019ல் அங்கு 266 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களை தனிமைப்படுத்த கண்காணித்த சமயத்தில்தான் மிகத் தீவிரமடைந்துள்ளது. இதனால் ஜனவரி 23ம் தேதி ஹூபெய் மாகாணம் தனிமைப்படுத்தப்பட்டது. பலகட்ட சுகாதார தடுப்பு நடவடிக்கையின் மூலம் தற்போது ஹூபெய் மாகாணத்தில் ஒருவருக்கு கூட வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியாகி உள்ளது. அம்மாகாணத்தில் 49,991 பேர் பாதிக்கப்பட்டுளளனர். இதில், 2,436 பேர் பலியாகி உள்ளனர்.

130 நாடுகளிடம் விளக்கம்
கொரோனா வைரசை எதிர்கொள்ள மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக 130க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளிடம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார் தனது டிவிட்டர் பதிவில், ‘‘கொரோனா பரவுவதை தடுக்க இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கை குறித்து 100 நாடுகளின் தூதர்கள் உட்பட 130க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளிடம் வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். வெளிநாட்டு பயணிகளுக்காக மத்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள், புதிய விதிமுறைகள் குறித்தும் அவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது’’ என்றார்.

Tags : Spreading Panic ,Global Toll ,Canadian ,Corona Australia ,UN , The number of casualties is 5,000 for the wife of the Prime Minister of Canada, Corona, Australia's Minister and UN Ambassador
× RELATED கொரோனா பலி எண்ணிக்கை திருவாரூரில் 105 ஆக உயர்வு தொற்று 10 ஆயிரத்தை கடந்தது