×

ஏர் இந்தியாவை ஏலம் கேட்பதற்கான காலக்கெடு ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு

புதுடெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தை ஏலம் கேட்பதற்கான காலக்கெடுவை அடுத்த மாதம் 30ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தின் மொத்த கடன் சுமை ரூ.60,074 கோடி. ஏர் இந்தியாவின் 76 சதவீத பங்குகளை கடந்த 2018ம் ஆண்டே விற்க, மத்திய அரசு முயற்சி மேற்கொண்டது. ஆனால், இது வெற்றி அடையவில்லை. இந்நிலையில், ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரசின் 100 சதவீத பங்குகளையும் விற்க மத்திய அரசு முடிவு செய்தது. ஏர் இந்தியாவை வாங்க விரும்பும் நிறுவனங்கள் தங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாம் என கடந்த ஜனவரி 27ம் தேதியே அறிவிக்கப்பட்டது.

ஏர் இந்தியாவை வாங்கும் நிறுவனங்கள், ரூ.23,386.5 கோடி கடனை ஏற்க வேண்டும். மீத கடன் தொகை ஏர்இந்தியா சொத்துக்களை வைத்திருக்கும் ஏஐஏஎச்எல் நிறுவனத்துக்கு மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏலம் கேட்பதற்கான காலக்கெடு வரும் 17ம் தேதியாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.  இந்நிலையில், இந்தக் காலக்கெடு அடுத்த மாதம் 30ம் தேதி வரை நீட்டிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அமைச்சர்கள் குழு முடிவு செய்தது. கொரோனா பாதிப்பு சூழல் நிலவுவதால், இந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


Tags : Air India , Air India, Auction, Deadline
× RELATED கொரோனா பாதித்த விமானியிடம் விதிகள்...