×

அடுத்த 12 ஆண்டுகளுக்கு 50 லட்சம் கோடி தேவை என்பதால் ரயில்வேயில் தனியார் முதலீடு அவசியம் : மக்களவையில் பியூஸ் கோயல் திட்டவட்டம்

புதுடெல்லி: ரயில்வேயில் திட்டப்பணிகளை நிறைவேற்ற அடுத்த 12 ஆண்டுகளுக்கு ரூ.50 லட்சம் கோடி முதலீடு தேவை என்பதால், ரயில்வேயில் தனியார் முதலீடு அவசியம் தேவை என மக்களவையில் ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார்.  மக்களவையில் ரயில்வே துறைக்கான  மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. இதில், பங்கேற்று பேசிய காங்கிரஸ், திரிணாமுல், இடதுசாரி கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் ரயில்வேயை தனியார் மயமாக்குவதை எதிர்த்து பேசினர். மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவர் அதிர்  ரஞ்சன் சவுத்ரி, ‘`ரயில்களை இயக்குவதற்கே மத்திய அரசு கடன் வாங்குகிறது.  ரயில்வே உள்கட்டமைப்பில் இந்தியாவின் தரம் 28வது என்ற மோசமான இடத்தில்  உள்ளது. ரயில்வேயில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு பதிலாக, பாஜ அரசு அதை  சிதைத்து வருகிறது.

வரும் 2022ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு  உள்ள பிரதமரின் கனவு திட்டமான புல்லட் ரயில் திட்டத்துக்கு தேவையான நிலத்தை  கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் வெறும் 30 சதவீத  நிலங்களே கையகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டம் குறிப்பிட்ட  காலத்துக்குள் நிறைவேற்றப்படுமா?’’ என்றார்.  இறுதியில் விவாதத்துக்கு பதிலளித்து ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் பேசியதாவது: முந்தைய  காங்கிரஸ் ஆட்சியில் ரயில்வே துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல்  செய்யப்பட்டது. வெறும் காற்றடைத்த பலூன் போன்ற இந்த பட்ஜெட்டால் அவையில்  கைதட்டல் மட்டுமே பெற முடிந்தது. பொய்யான அறிவிப்புகளை வெளியிட்டு  தேர்தலின்போது மக்களை திசை திருப்பவே இந்த தனி பட்ஜெட் பயன்படுத்தப்பட்டது. கடந்த 2013-14ல் ரயில்வேக்கு வெறும் ரூ54,000 கோடி மட்டும்  ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு நாங்கள் இந்த ஒதுக்கீட்டை  ரூ.1.61 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளோம்.

கடந்த 2013-14ம் ஆண்டில் ரயில்வே லைன்கள் வெறும் 650  கிமீ தொலைவுக்கு மின்மயமாக்கப்பட்ட நிலையில் தற்போது நாங்கள் 6 ஆயிரம்  கிமீ தொலைவுக்கு மின்மயமாக்க திட்டமிட்டு உள்ளோம் இதில், தற்போது 5200 கிமீ  தொலைவுக்கு ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டு உள்ளது. முன்பு ரயில்  பயணிகளுக்கு உதவுவதற்காக 60க்கும் மேற்பட்ட உதவி எண்கள் இருந்த நிலையில்  இது தற்போது பொது புகாருக்கு 139 என்ற எண்ணும், பாதுகாப்பு தொடர்பான  புகாருக்கு 182 என்ற தொலைபேசி எண் என 2 மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அடுத்த 12 ஆண்டுகளுக்கு ரயில்வேயில் திட்டப்பணிகளை செயல்படுத்த ரூ.50 லட்சம் கோடி முதலீடு தேவை.

தனியார் முதலீட்டை பயன்படுத்தி ரயில்வேயில் பல்வேறு வசதிகளை குறைந்த செலவில் செய்ய முடியும் அரசு பணத்தை முழுவதும் ரயில்வேக்கு பயன்படுத்தினால் நலத்திட்டப்பணிகள் பாதிக்கும். இதனால், வருவாயை பெருக்க ரயில் கட்டணத்தை உயர்த்தும் சூழ்நிலை மற்றும் வரிவிதிப்பை அதிகரிக்க நேரிடும். எனவே, ரயில்வேயில் தனியார் முதலீடு அவசியம். கடந்த 3 ஆண்டுகளில் 1.37 லட்சம் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் மானியக்கோரிக்கை மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

தனியார் மூலம் டிக்கெட் விற்பனைக்கு தடை?
அமைச்சர் பியூஸ் கோயல் மேலும் பேசுகையில், ‘‘ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் முகவர்கள் மீது பல்வேறு முறைகேடு புகார்கள் வருவதை தொடர்ந்து அவர்களை கைது செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது செல்போன்களில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுவதால் தனியார் முகவர்கள் தேவை இனி இருக்காது,’’ என்றார்.

Tags : railways , 50 lakh crores.Railways. Private investment
× RELATED முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளை யுபிஐ மூலம் பெறும் வசதி அறிமுகம்