×

காலையில் பாதாளத்தில் சரிந்து மாலையில் மீண்டது 12 ஆண்டுக்கு பிறகு பங்குச்சந்தையில் வர்த்தகம் 45 நிமிடங்கள் நிறுத்தம்: சில நிமிடங்களில் 12 லட்சம் கோடி இழப்பு

மும்பை: பங்குச்சந்தையில் தொடர்ந்து 2வது நாளாக நேற்று இமாலய சரிவு ஏற்பட்டது. 10 சதவீதத்துக்கு மேல் சரிந்ததால், பங்கு வர்த்தகம் 45 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. இதன்பிறகு பங்குச்சந்தை ஏற்றம் கண்டாலும், குறுகிய நேரத்தில் ஏற்பட்ட கடும் சரிவால் முதலீட்டாளர்கள் 12 லட்சம் கோடியை இழந்தனர்.  பங்குச்சந்தைகள் நேற்று காலையிலேயே சரிவுடன் துவங்கின மும்பை பங்குச்சந்தை முந்தைய நாளை விட 1,564.01 புள்ளி சரிந்து 31,214.13 புள்ளியுடன் துவங்கியது. ரூபாய் மதிப்பும் 16 காசு சரிந்து 74.41 ஆனது. இது கடந்த 2018ம் ஆண்டு அக்டோபருக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சரிவாக கருதப்படுகிறது. பின்னர் மேலும் சரிந்து 74.48 ஆனது. அடுத்த சில நிமிடங்களில் மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 30,000 புள்ளிகளுக்கு கீழும் மற்றும் தேசிய பங்குச்சந்தை நிப்டி 8,900 புள்ளிகளுக்கு கீழும் சென்றது. 10 சதவீதத்துக்கு கீழ் சந்தை சரிவை சந்தித்ததால் பங்குச்சந்தையில் வர்த்தகம் 45 நிமிடங்களுக்கு பிறகு நிறுத்தி வைக்கப்பட்டது.  

அதிகபட்சமாக தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் 12 சதவீதத்துக்கு மேல் சரிந்தன. கடந்த 2008 மே மாதத்தில் பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்ததால் 45 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் 12 ஆண்டுகளுக்கு பிறகு நேற்றுதான் பங்குச்சந்தைகள் நிறுத்தி வைக்கப்பட்டன.  வர்த்தக இடையில் மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் அதிகபட்சமாக 3,389.17 புள்ளிகள் சரிந்து 29,388.97 புள்ளிகளாக ஆனது. காலையில் ஏற்பட்ட திடீர் சரிவால் ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ், கோடக் மகிந்திரா, டிசிஎஸ், இண்டஸ் இண்ட் வங்கி ஆக்சிஸ் வங்கி, மாருதி சுசூகி, ஆக்சிஸ் வங்கி, ஹீரோ மோட்டார் கார்ப்பொரேஷன் பங்குகள் அதிக சரிவை சந்தித்தன. அதாவது, பங்கு மதிப்பு 13 சதவீதம் முதல் 16 சதவீதம் வரை சரிந்தது. நிப்டியில் வங்கி பங்குகள் 3 ஆண்டுகளில் இல்லாத சரிவை அடைந்தன.  இந்திய பங்குச்சந்தை மட்டுமின்றி, ஆசிய பங்குச்சந்தைகளும் சரிந்தன.

  பின்னர், காலை 10.20 மணிக்கு பங்கு வர்த்தகம் மீண்டும் துவங்கியது. அப்போதும் மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் 7 சதவீத சரிவுடன்தான் இருந்தன. அதன்பிறகு, அதல பாதாளத்தில் சரிந்த பங்குச்சந்தை படிப்படியாக மீளத்தொடங்கியது. சென்செக்ஸ் 1,900 புள்ளிகள் மீண்டது. நிப்டி 9,100 புள்ளிகளை தொட்டது. 10 சதவீதத்துக்கு மேல் இருந்த சரிவு 4.3 சதவீதமாக ஆனது. ரூபாய் மதிப்பும் உயர்ந்து ₹74.04 ஆனது. இருப்பினும் விமான துறை பங்குகளும், கொரோனா வைரசால் தியேட்டர்கள் மூடப்பட்டதால் அந்த துறை சார்ந்த பங்குகளும் சரிந்திருந்தன. வேதாந்தா, டாடா ஸ்டீல் போன்ற ஸ்டீல் நிறுவன பங்குகளும் சரிந்தன. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மாலையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளிக்க உள்ளார் என்ற அறிவிப்பு வெளியானது.
 அடுத்த சில நிமிடங்களிலேயே மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 33,000 புள்ளிகளுக்கு மேலும், தேசிய பங்குச்சந்தை நிட்படி 9,600 புள்ளிகளுக்கு மேலும் உயர்ந்தது. அமெரிக்க பங்குச்சந்தைகள் இழப்பில் இருந்து மீண்டதை தொடர்ந்து, இந்திய பங்குச்சந்தைகளிலும் ஏற்றம் விறுவிறுவென காணப்பட்டனது. தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ஏஜிஆர் கட்டண விவகாரத்தில் நிறுவனங்களை மீட்க அமைச்சரவை ஒப்புதல் அளித்ததும், தொலைத்தொடர்பு நிறுவன பங்குகள் ஏற்றம் அடைந்தன.

இதுபோல் தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகளும் சரிவில் இருந்து மீண்டன. இதனால் மும்பை பங்குச்சந்தை புள்ளிகள் 5,380 புள்ளிகளுக்கு மேல் மீண்டது. வர்த்தக முடிவில் முந்தைய நாளை விட 1,325.34 புள்ளிகள் அதிகரித்து, 34,103.48 புள்ளிகளாக ஆனது. இதுபோல், 8,55.15 புள்ளிகளாக சரிந்த தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி, வர்த்தக முடிவில் 365.05 புள்ளிகள் உயர்ந்து 9,955.20 புள்ளிகளாக நிறைவடைந்தது. மிகப்பெரிய சரிவில் இருந்து பங்குச்சந்தைகள் மீண்டாலும், சுமார் 15 நிமிடங்களுக்குள்ளாகவே, 2,92,479.88 கோடியை முதலீட்டாளர்கள் இழந்தனர். வர்த்தக முடிவில் பங்கு மதிப்பு 3,55,590.19 கோடி இந்த வாரம் மட்டும் 15,04,981.59 ேகாடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வர்த்தக முடிவில் ரூபாய் மதிப்பு 48 காசு உயர்ந்து 73.80 ஆக இருந்தது.

Tags : halt ,stop ,trading , Loss of stock, trading, crores
× RELATED பஸ் ஸ்டாப்பில் இடையூறாக நிறுத்திய டூவீலர்கள் அகற்றம்