×

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் முதல் முறையாக சவுராஷ்டிரா சாம்பியன்

ராஜ்கோட்: பெங்கால் அணியுடனான ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில், சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் கடந்த 9ம் தேதி தொடங்கி நடந்து வந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 425 ரன் குவித்து ஆல் அவுட்டானது. பெங்கால் பந்துவீச்சில் ஆகாஷ்தீப் 4, ஷாபாஸ் அகமது 3, முகேஷ் குமார் 2, இஷான் போரெல் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய பெங்கால் அணி 4ம் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 354 ரன் எடுத்திருந்தது. கராமி 28, சுதிப் சாட்டர்ஜி 81, மனோஜ் திவாரி 35, விருத்திமான் சாஹா 64, ஷாபாஸ் அகமது 16 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். அனுஸ்துப் மஜும்தார் 58 ரன், அர்னாப் நந்தி 28 ரன்னுடன் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர்.

மஜும்தார் 63 ரன் எடுத்து உனத்கட் வேகத்தில் எல்பிடபுள்யு ஆனார். அடுத்து வந்த ஆகாஷ் தீப் ஒரு ரன் கூட எடுக்காமல் ரன் அவுட்டானது பெங்கால் அணிக்கு பின்னடைவை கொடுத்தது. முகேஷ் குமார் 5, போரெல் 1 ரன்னில் பெவிலியன் திரும்பினர். பெங்கால் அணி 161 ஓவரில் 381 ரன் எடுத்து முதல் இன்னிங்சை இழந்தது. நந்தி 40 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அந்த அணி நேற்று 27 ரன்னுக்கு கடைசி 4 விக்கெட்டை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது. சவுராஷ்டிரா பந்துவீச்சில் தர்மேந்திரசிங் 3, உனத்கட், பிரேரக் மன்கட் தலா 2, சகாரியா, ஜனி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 44 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய சவுராஷ்டிரா அணி 34 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 105 ரன் எடுத்த நிலையில், ஆட்டம் டிராவில் முடிந்தது. தேசாய் 21, பரோட் 39, விஷ்வராஜ் 17, வாசவதா 3 ரன்னில் வெளியேறினர். ஷெல்டன் ஜாக்சன் 12 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் சவுராஷ்டிரா அணி ரஞ்சி கோப்பையை முத்தமிட்டு புதிய சாம்பியனாக முத்திரை பதித்தது. முந்தைய 7 சீசன்களில் 3 முறை பைனலில் தோற்று 2வது இடம் பிடித்த சவுராஷ்டிரா இம்முறை கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.



Tags : Saurashtra Champion ,time ,Ranji Cup , Ranji Cup Cricket, Saurashtra
× RELATED 10 ஆண்டுகளில் முதல் முறையாக முன்னணி ஐடி...